வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (07/07/2017)

கடைசி தொடர்பு:18:59 (07/07/2017)

'பத்து பேர் வாழ்வதற்காக ஒரு கிராமத்தை அழிப்பதா?'- கதிராமங்கலத்துக்கு ஆதரவாகக் களம் இறங்கிய மாணவர்கள்

கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாகக் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர். "விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் பத்து பேர் வாழ்வதற்காக ஒரு கிராமத்தை அழிப்பது சரியா" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர். மாணவர்களின் போராட்டம் காரணமாக அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகக் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் அமைந்துள்ள அண்ணா பொறியியல் கல்லூரி மாணவர்களும் ஓஎன்ஜிசி-க்கு எதிராகவும், கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரியின் முன்பு உள்ள மைதானத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு, "தமிழக இளைஞர்களே பொறுத்தது போதும் விவசாயத்தைக் காக்க வீதிக்கு வாருங்கள். விவசாயத்தை மீட்போம்" என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், "தற்போது விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் வாழ்க்கையை முன்னேற்றமடைய விடமாட்டார்கள். மத்திய அரசு விவசாய நிலங்களை கார்ப்பரேட்டிடம் கொடுத்துவிட்டு விவசாயிகளின் தலையில் துண்டைப் போடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது. அதன் முன்னோட்டமாகத்தான் டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல்கேஸ் போன்ற திட்டங்களைக் கொண்டுவரத் துடித்துக்கொண்டிருக்கிறது.

காவிரி டெல்டா பகுதிகளில் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக, ஓஎன்ஜிசி நிறுவனம் பெட்ரோல், கேஸ் எடுத்து வருகிறது. இதனால், இப்பகுதிகளில் நிலத்தடிநீர் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாக இங்குள்ள மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கு என்றாவது ஒருநாள் இந்த அதிகாரிகள் ஆய்வுசெய்ததுண்டா. இப்படிப்பட்ட சூழலில், கதிராமங்கலம் மக்கள் 'அரசிடம் சொகுசு வாழ்க்கை கேட்கவில்லை. அவர்கள் வாழும் கிராமங்களில் தூய்மையான காற்று, சுகாதாரமான குடிநீர், இருக்க இருப்பிடம் இது மூன்றுதானே கேட்கிறார்கள். இதைக் கொடுப்பதில் அரசுக்கு என்ன சிரமம் என்று தெரியவில்லை. விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் பத்து பேர் வாழ்வதற்காக ஒரு கிராமத்தை அழிப்பது சரியா, இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான் என்று சொல்வது வெறும் வெற்று வார்த்தையா. நமக்கு சோறு போடும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்த வேண்டும். கதிராமங்கலம் கிராமத்திலிருந்து ஓஎன்ஜிசி குழாய்களை முற்றிலும் அகற்றப்பட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வழக்கு போட்டுள்ளது காவல்துறை. அதைத் திரும்பப் பெற வேண்டும். இந்த மக்களின் கோரிக்கைகள் உடனடியாக  நிறைவேற்றப்படவேண்டும். நிறைவேறாத பட்சத்தில் ஜல்லிக்கட்டுக்காக வீதிக்கு வந்த மாணவர்களை மீண்டும் விவசாயிகளுக்காக களம் இறங்க வைத்துவிடாதீர்கள்" என்று எச்சரித்தனர்.

மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் மாணவர்களின் போராட்டத்தைக் கலைப்பதிலேயே குறியாக இருந்தார்கள் காவலர்கள். அதுமட்டுமல்லாமல் மாவட்டத்தின் மையப்பகுதிகளில் மாணவர்கள் ஒன்று சேர்வதைத் தடுப்பதற்காகப் பல இடங்களில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.