வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (08/07/2017)

கடைசி தொடர்பு:13:38 (08/07/2017)

இருளில் மூழ்கி கிடக்கும் கன்னியாகுமரி!

கன்னியாகுமரி

லகம் அறிந்த சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியின் சிறப்புகளை அவ்வளவு சீக்கீரம் யாரும் மறந்துவிட முடியாது. காலையில் சூரியன் உதிப்பதில் தொடங்கி மாலையில் சூரியன் மறையும்வரை கன்னியாகுமரியில் கண்டுரசிக்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன. காசி, ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடிய பக்தர்கள் கடைசியில்வருவது கன்னியாகுமரிக்குத்தான். அதுதவிர, தென்னிந்தியாவில் பிரசித்திபெற்ற கோயிலான சபரிமலை அய்யப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, பக்தர்கள் கடைசியில் கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசிக்க வருகிறார்கள். பகவதி அம்மன் கோயில் மிகவும் விசேஷமானது. இக்கோயிலின் கிழக்குவாசல் அடைக்கப்பட்டு, வடக்குவாசல் திறக்கப்பட்டிருக்கும். அந்த வழியாகத்தான் பக்தர்கள் செல்லமுடியும். அம்மனின் மூக்கில் இருக்கும் மூக்குத்தியின் ஒளி கண்ணைப் பறிக்கும். குமரிமுனையின் அழகை ரசிக்கவரும் சுற்றுலாப் பயணிகள், அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்தியப் பெருங்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கம சங்கிலி மண்டபத்தில் குளிப்பதுடன், கன்னியாகுமரியில் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணமும் செய்கிறார்கள்.

 

கன்னியாகுமரி

அங்கிருந்து இடதுபுறம் பார்த்தால் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை. இப்போது கடல்நீர் மற்றும் உப்புக்காற்றினால் சேதமடையும் அந்தச்சிலையை தமிழக அரசு, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவைபூசி பராமரித்து வருகிறது. இந்த ரசாயனக்கலவை பூசும்பணி 86 லட்சம் ரூபாய் செலவில் தற்போது நடந்து வருகிறது. ஜூன் மாதம் 17-ம் தேதி முதல்கட்டமாக இரும்புக்கம்பிகளால் திருவள்ளுவர் சிலையைச் சுற்றி சாரம் அமைக்கும் பணி நடந்தது. இப்போது திருவள்ளுவர் சிலையின் 3,681 இணைப்புகளை இணைக்கும் சிமென்ட் கலவை பூச்சுகள் அகற்றப்பட்டு, அதில் புதிய ரசாயனமுறைப்படி சிமென்ட் கலவை பூசும்பணி தொடங்கி உள்ளது.

இந்தப் பணிகளை 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர். இந்தப் பணிகள் முடிந்ததும் திருவள்ளுவர் சிலையின் மீது காகிதக்கூழ், ஒட்டப்பட்டு உப்புநீர் உறிஞ்சி அகற்றப்படும். அதன்பின் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசப்படும். வரும் அக்டோபர் மாதம் 13-ம் தேதிக்குள் இந்தப்பணிகள் நிறைவடைந்து, திருவள்ளுவர் சிலை புதுப்பொலிவு பெறும். அதன்பின் பூம்புகார் படகுப் போக்குவரத்து, சுற்றுலாப் பயணிகளை திருவள்ளுவர் சிலைக்கும் அழைத்துச் செல்லும். திருவள்ளுவர் சிலையின் அருகே விவேகானந்தர் மணி மண்டபம் பொலிவுற அமைந்துள்ளது. இந்த இரண்டையும் அருகில் சென்று பார்ப்பதுடன், தியான மண்டபத்தில் தியானிக்க, காலை முதல் மாலைவரை பூம்புகார் படகுப் போக்குவரத்து நிறுவனம் மூன்று படகுகளை இயக்குகிறது. கன்னியாகுமரியின் இன்னொரு அடையாளம், மகாத்மா காந்தியின் அஸ்தி கலசம் வைக்கப்பட்டுள்ள காந்தி மண்டபம். இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து பார்வையிட்டுச் செல்கிறார்கள். மாலையில் காந்தி மண்டபம் மூடப்படும். இந்த மண்டபத்தில், காந்தி ஜெயந்தி தினமான ஆண்டுதோறும் அக்டோபர் 2-ம் தேதி அபூர்வ சூரிய ஒளி விழும். காந்தி மண்டபம் அருகே பெருந்தலைவர் காமராஜரின் மணி மண்டபம் உள்ளது. இங்கு காமராஜரின் வாழ்க்கை பற்றிய அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபமும் மாலையில் அடைக்கப்பட்டுவிடும். 

கன்னியாகுமரி

இத்தனை சிறப்புகள் கொண்ட சுற்றுலா இடங்களை பகலில் வரும் பயணிகள் மட்டும்தான் பார்த்து ரசிக்க முடியும். விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு இரவு நேரத்தில் படகுப் போக்குவரத்து கிடையாது. திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் மண்டபமும் இரவு நேரத்தில் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. தூரத்தில் இருந்து பார்த்தால் கூடத் தெரிவது இல்லை. அதுபோல காந்தி மண்டபத்தில் ஒரு விளக்கு வெளிச்சம்கூட இல்லாமல் இருளில் தவிக்கிறது. அதுபோல, காமராஜர் மண்டபமும் வெளிச்சம் இல்லாமல் இருட்டில்தான் இருக்கிறது. கன்னியாகுமரி கடற்கரையில் போதிய வெளிச்சம் இல்லை. இது மாலை 6 மணிக்கு மேல் இங்குவரும் சுற்றுலா பயணிகளுக்கு வருத்தத்தைத் தருகிறது. எனவே, "குமரியின் அழகை இரவு நேரத்திலும் ரசிக்கவும், இருளில் மூழ்கித் தவிக்கும் நினைவுச்சின்னங்களை சுற்றுலாப்பயணிகள் பார்க்கவும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது, அனைத்துத் தரப்பினருமே கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்