வெளியிடப்பட்ட நேரம்: 19:48 (07/07/2017)

கடைசி தொடர்பு:19:48 (07/07/2017)

மந்தகதியில் மணிமுத்தாறு அணையின் பராமரிப்பு! -கவலையில் விவசாயிகள்

மணிமுத்தாறு அணையைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஓராண்டுக்கு முன்பாகத் தொடங்கப்பட்ட இந்தப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால் அடுத்த பருவமழைக்கு முன்பாவது ஒட்டுமொத்த அணைப் பகுதியும் சீரமைக்கப்படுமா? என்கிற கவலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தின் விவசாயப் பணிகளுக்கு பயன்படுவதில் மணிமுத்தாறு அணையின் பங்களிப்பு முக்கியமானது. 118 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை நிரம்பினால் விவசாயம் செழிக்கும். இந்த அணைக்கான நீர்வரத்து எப்போதுமே சற்று குறைவாக இருக்கும் என்பதால் தாமதமாக இந்த அணையின் நீர்மட்டம் உயரும். ஆனால், இந்த அணையின் தண்ணீர் தாமிரபரணி ஆற்றின் மூலமாக விவசாயத்துக்கும் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுவதால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த அணையைப் பராமரிக்க கடந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி சீரமைப்புப் பணிகள் தொடங்கின. அணைகள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த அணையைச் சீரமைக்க 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின. தொடக்கம் முதலாகவே இந்த அணையை சீரமைக்கும் பணிகள் மந்தகதியில் நடந்ததால் ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் பணிகள் நிறைவடையவில்லை. இந்த அணையில் இதுவரையிலும், 40 சதவிகிதப் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன.

 


 

அணையின் முன் பக்கத்தை சீரமைப்பது மற்றும் நீர்க் கசிவுகளை சரிசெய்வது ஆகிய பணிகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. அணையின் அனைத்துப் பணிகளும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் நிறைவடைய திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது நடக்கும் நிலையில் அந்தக் காலக்கட்டத்துக்குள் பணிகள் முடிவடையுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ’’இந்த அணையில் சீரமைப்புப் பணிகள் நடப்பதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக பயிர் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. தற்போது பணிகளை விரைந்து முடித்தால் மட்டுமே வடகிழக்குப் பருவ மழைக் காலத்திலாவது இந்த அணையின் தண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் அதிகாரிகள், அணையின் மதகுகள், கசிவுகள், நீர்த்தேக்கப் பகுதிகளில் விரைவாக சீரமைப்புப் பணிகளை  முடிக்க வேண்டும்” என வலியுறுத்தினர். 

விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவார்களா அதிகாரிகள்?