வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (07/07/2017)

கடைசி தொடர்பு:20:24 (07/07/2017)

’குடும்ப வன்முறை வழக்குகளை விரைந்து முடிக்க ‘ஒன் பாயிண்ட் சென்டர்’ அவசியம்!’ வழக்கறிஞர் செல்வகோமதி! #DataStory

குடும்ப வன்முறை

டல் மற்றும் மனம் ரீதியாகவோ பாலியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும்தான் குடும்ப வன்முறை. கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப்பது, தள்ளுவது, பொருளால் தாக்குவது போன்றவை இதில் அடங்கும். இது, கணவனால் மட்டுமே பெண்களுக்கு வன்முறை நடப்பது என்றில்லை. மற்ற உறவினர்களாலும் நடக்கலாம். நடத்தையில் சந்தேகப்படுவது, ஆபாசமாகத் திட்டுவது, அவதூறு செய்வது, தனிமைப்படுத்துவது போன்றவை மனரீதியான வன்முறைகள். தேவையில்லாமல் தொடுதல், முத்தமிடுதல், வல்லுறவு போன்றவை பாலியல் ரீதியான வன்முறைகள் ஆகும். 

கணவனால், மனைவி தாக்கப்படுவது, தகாத வார்த்தைகளால் பேசுவது, கணவரின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணை ஏளனப்படுத்துவது போன்றவை இந்தியாவில் காலங்காலமாக நடந்துவருகிறது. அவை, குற்றமாகவே கருதப்படுவதில்லை. குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், வரதட்சணைத் தடுப்புச் சட்டம் எனப் பல சட்டங்கள் இருந்தபோதும், குடும்பத்துக்குள் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் வழக்காகப் பதிவுசெய்யப்படுவதில்லை. குடும்ப வன்முறை என்றால், பெண்கள் மட்டுமே புகார் அளிப்பது என்றில்லை. பாதிக்கப்படும் ஆண்களும் பெண்களுக்கு எதிராகப் புகார் கொடுக்கலாம். 

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக 2005-ம் ஆண்டு, குடும்ப வன்முறைச் சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, ஒரு கணவன் தன் மனைவியை அடித்தாலோ, அவமானப்படுத்தினாலோ, துன்புறுத்தினாலோ குற்றமாக கருதப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20,000 ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறை தண்டையும் வழங்கப்படும். வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். பெண்ணின் விருப்பத்துக்கேற்ப கணவன் வீட்டிலேயே வாழ, ரெசிடென்ஷியல் ஆர்டர் நீதிமன்றத்தால் வழங்கப்படும். 

தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளி விவரப்படி 2014-ம் ஆண்டு, இந்திய அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களாக 3 லட்சத்து 25 ஆயிரத்து 327 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டில், 3 லட்சத்து 14 ஆயிரத்து 575 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் அதிகளவாக 2015-ம் ஆண்டு, 17 சதவீதம் பதிவாகியுள்ளது. இந்திய அளவில் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் 2014-ம் ஆண்டு, 426 மற்றும் 2015-ம் ஆண்டு 461 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. இந்திய அளவில் கடந்த 2012ல் இருந்து 2015 வரை பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தினரால் அவமரியாதைக்குள்ளாக்கப்படுவது அதிகரித்துள்ளது. 2015-ம் ஆண்டு, கணவர் மற்றும் குடும்பத்தினரால் 34.6 சதவீத பெண்கள் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். இதே ஆண்டில் 25.2 சதவீத பெண்கள், கணவர் மற்றும் குடும்பத்தினரால் அவமரியாதை செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து வழக்கறிஞரும் பெண்ணியவாதியுமான செல்வ கோமதி, '‘குடும்ப வன்முறைச் சட்டத்தைப் பற்றிய அறிவு ஒவ்வொரு பெண்களுக்கும் அவசியம். இந்தச் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாகக் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை. அந்தந்த மாவட்டத்தில் செயல்படும் சமூக நலத்துறை அலுவலகத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தால் போதும். புகார்பெற்ற ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். ஆறு மாதத்துக்குள் வழக்கு முடிக்கப்பட வேண்டும். ஆனால், நடைமுறையில் பாதுகாப்பு அதிகாரிகள், விசாரணைக்காக செல்ல போதுமான வசதிகள் இல்லை. நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் பெற்றுத் தந்தாலும், கணவர் உடனே அப்பீல் சென்றுவிடுகிறார். பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றம், சமூக நலத்துறை அலுவலகம் எனப் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. 

குடும்ப வன்முறை

நமது குடும்ப அமைப்பில் ஒரு பெண் திருமணமாகி வந்தால், கணவர் வீட்டையே முழுக்க சார்ந்திருக்கும் சூழல் நிலவுகிறது. கணவர் மற்றும் குடும்பத்தினரை எதிர்த்து புகார் தெரிவிக்கும்போது, அந்தப் பெண் மீண்டும் கணவர் வீட்டுக்குச் செல்ல இயலாது. பெண்ணின் குடும்பத்தினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்தச் சமயத்தில், குழந்தைகளுடன் எங்குச் செல்ல இயலும்? உடல் மற்றும் மனரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குச் சிகிச்சையும் கவுன்சிலிங்கும் அவசியம். அடுத்தவேளை உணவுக்கு என்ன வழி என்பது போன்ற பலவற்றுக்கு விடைத் தெரியாமல் இருக்கிறது. இதனால், கணவரின் கொடுமையைச் சகித்துக்கொண்டு பலரும் வாழ்கின்றனர். இதையும் தாண்டி சமீபகாலமாகப் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனாலும், இந்த எண்ணிக்கை மிகக் குறைவே. மேலை நாடுகளில், பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்க வரும்போது, அந்தப் பெண்ணுக்கு உடனடியாக கவுன்சிலிங், சிகிச்சை, தங்கும் வசதி, உணவு போன்றவற்றை வழங்கும் வகையில் ஒரே இடத்தில் செயல்படும் ‘ஒன் பாயின்ட் சென்டர்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், உத்திரபிரதேசம் போன்ற வடமாநிலங்களில் ‘ஒன் பாயின்ட் சென்டர்’ அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல, தமிழகத்திலும் முக்கிய மாவட்டங்களில் ‘ஒன் பாயின்ட் சென்டர்கள்’ அமைக்கப்பட்டால், ஏராளமான பெண்கள் பயனடைவார்கள்’’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்