வெளியிடப்பட்ட நேரம்: 20:03 (07/07/2017)

கடைசி தொடர்பு:20:38 (07/07/2017)

சினிமா டிக்கெட் கட்டணத்தில் புதிய விலை அமலாக்கம் #GSTPrice

கடந்த 1-ம் தேதியிலிருந்து 100 ரூபாய்க்கும் குறைவாக விற்கப்பட்ட சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும், 100 ரூபாய்க்கும்  அதிகமாக விற்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இருப்பினும், உள்ளாட்சி கேளிக்கை வரி மற்றும் ஜிஎஸ்டி வரி என்று இரட்டை வரிகளை செலுத்த முடியாது என தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 3-ம் தேதியிலிருந்து  தியேட்டர்களை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சினிமா டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிப்பதில் குழப்பம் நிலவியது.

தற்போது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்கப்பட இருந்த கேளிக்கை வரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் பழைய டிக்கெட் கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரியை மட்டும் சேர்த்து புதிய டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்


சாதாரண குளிர்சாதன வசதி கொண்ட தியேட்டர்களில் ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட 50 ருபாய் டிக்கெட், 59 ருபாய் எனவும், 10 ரூபாய் டிக்கெட், 11 ருபாய் 80 காசுகள் எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களில் ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட 30 ருபாய் டிக்கெட் , 35 ரூபாய் 40 காசு எனவும், 5 ரூபாய் டிக்கெட், 5 ரூபாய் 90 காசுகள் எனவும் மாற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஏற்கெனவே 120, 100 மற்றும் 10 ருபாய் கட்டணங்களில் டிக்கெட்கள் விற்கப்பட்டன. இன்று முதல் 120 ரூபாய் டிக்கெட் 153 ரூபாய் 60 காசு என்றும், 100 ருபாய் டிக்கெட் 128 ரூபாய் என்றும், 10 ருபாய் டிக்கெட் 11 ரூபாய் 80 காசு என்றும் உயர்த்தப்பட்டுள்ளது.