Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'உங்கள் பதவிக்கு இது அழகல்ல'-முதல்வர் பழனிசாமி மீது பாயும் ராமதாஸ்

மதுக்கடைக்கு எதிராக சாமளாபுரத்தில் பெண்கள் நடத்திய போராட்டத்தையும், கதிராமங்கலம் மற்றும் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திய முதலமைச்சர் பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்துள்ளார், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 'மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றவை; இத்தகைய போராட்டங்களைப் பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்து நடத்துவது ஃபேஷனாகிவிட்டது' என்று குற்றம் சாட்டியுள்ளார். மகளிர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கமளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்களில், பெரும்பாலானவை இட்டுக்கட்டிய பொய்கள் ஆகும். காவல்துறை எழுதிக்கொடுத்ததை அப்படியே படித்ததாலோ என்னவோ, அவரது விளக்கம் ஒரு பொய் சாட்சியத்தைக் கேட்பதைப் போன்று இருந்தது.

உண்மையில், சாமளாபுரம் மதுக்கடைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பெண்கள், எந்த வகையான அத்துமீறலிலும் ஈடுபடவில்லை. சூலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அவ்வழியே சென்றபோது, அவரது வாகனத்தை பொதுமக்கள் மறித்து, அவரிடம் தங்களின் குறைகளைக் கூறினார்கள். அவரும்,  போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் தமது ஆதரவை தெரிவித்தார். கோபத்தைத் தூண்டும் வகையில் அங்கு எந்த நிகழ்வும் நடக்காத நிலையில், தடியடி நடத்தவேண்டிய அவசியம் என்ன. சாலையோரத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்த பெண்ணின் கன்னத்தில் அறையவேண்டிய தேவை என்ன. இந்த நிகழ்வில், பத்திரிகையாளர்களும் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கின்றனர். அவ்வழியே சென்றுகொண்டிருந்த அப்பாவி ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார். சிலருக்கு மண்டை உடைந்திருக்கிறது. இதையெல்லாம் மறைத்துவிட்டு, காவல்துறையினர் அமைதியின் திருவுருவமாகக் காட்சியளித்தது போன்றும் பொதுமக்கள்தான் அராஜகத்தில் ஈடுபட்டதைப் போலவும் சித்தரிப்பது, முதலமைச்சரின் பதவிக்கு அழகல்ல. இந்தத் தாக்குதலுக்கு காரணமான காவல் அதிகாரி மீது துறை சார்ந்த விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தலைமை வழக்கறிஞர்மூலம் தெரிவித்த அரசு,  அந்த விசாரணை அறிக்கையை வெளியிடாமல், அவருக்குப் பதவி உயர்வு வழங்கியது நியாயமா.

பா.ம.க. நடத்திய சட்டப் போராட்டத்தின் பயனாக, தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த 3321 மதுக்கடைகள் மூடப்பட்டன. அத்துடன், தமிழக அரசு முடித்திருந்தால் எந்தப் பிரச்னையும் எழப்போவதில்லை. படிப்படியாக மதுவிலக்கு என்பதுதான் அரசின் கொள்கை என்று கூறிவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை  ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான கடைகளை மூடியிருக்க வேண்டும். மாறாக, மூடப்பட்டக் கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் வலுக்கட்டாயமாகத் திறக்க முற்பட்டதால்தான் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டது. பொதுவாக, குடிப்பது ஆண்களாக இருந்தாலும் அதனால் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும்தான். கணவனோ, தந்தையோ, மகனோ, சகோதரனோ குடித்துவிட்டு வருவதால், பொருளாதாரம், குடும்ப வன்முறை, உடல்நலம், மனநலம் என அனைத்து வகைகளிலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். மதுக்கடைகள் வழியாக பெண்கள் செல்லும்போது, குடிகாரர்களின் சீண்டலுக்கு ஆளாகின்றனர். இதனால், குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடை திறப்பதற்கு எதிராக பெண்கள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்தியது இயல்பான ஒன்றுதான். இதை யாரோ தூண்டிவிட்டுதான் பெண்கள் செய்ததாக முதல்வர் கொச்சைப்படுத்தக்கூடாது. மாறாக, பெண்களின் உணர்வுகளை மதித்துச் செயல்பட வேண்டும்.

அதேபோல், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகளுக்கும்  மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கும் எதிராக அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்துவதையும் அவர் கொச்சைப்படுத்தியுள்ளார். கதிராமங்கலத்தில் எண்ணெய்க் குழாய்கள் அமைக்கப்பட்டு, 15 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இப்போது போராட்டம் நடத்துவது ஏன் என்று முதலமைச்சர் வினா எழுப்பியிருப்பது  அபத்தமானது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் அனுபவித்துவந்த சுற்றுச்சூழல் உள்ளிட்ட பாதிப்புகள்தான் அவர்களை இப்போது போராடத் தூண்டியிருக்கிறது. பல நாள் கொந்தளிப்புதான்  ஒரு நாள் போராட்டமாக வெடிக்கும் என்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்குத் தெரியாததல்ல. அன்றாடம் உழைத்தால்தான் உணவு என்ற நிலையில் உள்ள மக்கள்தான் தங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, கடைசி முயற்சியாக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு போராட்டம் என்பது பொழுதுபோக்கல்ல. எனவே, பொதுமக்களின், குறிப்பாக பெண்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாமல், மதுவிலக்கு கோரிக்கையாக இருந்தாலும் கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கிணறுகளை மூடும் கோரிக்கையாக இருந்தாலும், அதை அரசு நிறைவேற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close