Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘தமிழகக் காடுகளைக் காப்பாற்றியவர் இந்திரா காந்தி!' - தி.மு.கவை விமர்சித்த ஜெய்ராம் ரமேஷ்

ஜெய்ராம் ரமேஷ்

' தமிழகத்தின் காட்டு வளத்துக்கு எதிராக தி.மு.க.வால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முறியடித்து, முதுமலை காட்டையும் சென்னை உயரியல் பூங்காவையும் காப்பாற்றியவர் இந்திரா காந்தி' என சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சுட்டிக் காட்டினார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ். 

'இந்திரா காந்தி: இயற்கையில் ஒரு வாழ்க்கை' என்ற பெயரில் புத்தகம் ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். இதுகுறித்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது பத்திரிகை நிறுவனம் ஒன்று. வனவிலங்கு ஆர்வலர் நந்திதா கிருஷ்ணன், ஜெய்ராம் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஜெய்ராம் ரமேஷ், "முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு இயற்கையின் மீதிருந்த நேசம் குறித்து இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறேன். இந்திரா காந்தி என்ற ஆளுமையையும் தாண்டி, அரசியலும் இயற்கையும் அவரை எவ்வாறெல்லாம் ஈர்த்தன என்பதைச் சொல்லும் புத்தகமாக இதை வடிவமைத்திருக்கிறேன். அரசியலில் எவ்வளவு தீவிரத்துடன் இந்திராகாந்தி செயல்பட்டாரோ அதைவிட, இயற்கை சார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வத்துடன் பணியாற்றினார். இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்களையும் தாண்டி இயற்கையை பாதுகாக்க, அவர் ஏராளமான திட்டங்களை வழிநடத்தினார். இயற்கையையும், அறிவியல் திட்டங்களையும் குழப்பிக்கொள்ளாதவர் இந்திரா. 

'யானைகள் பாதுகாப்பு', 'வன உயிரியல் பாதுகாப்புச் சட்டம்', 'காடுகள் பாதுகாப்புச் சட்டம்' என இயற்கை சார்ந்த பல சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டது இந்திரா காந்தி காலத்தில்தான். நான் சுற்றுச்சூழல் அமைச்சராகப் பணியாற்றியவன் தான். உண்மையில் நாட்டின் முதல் சுற்றுச்சூழல் அமைச்சர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் இந்திராதான்" என பெருமைப்பட்டவர், " அவரது காலத்தில் பல மாநில முதல்வர்களை எதிர்த்துத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் தேவையில்லாதவற்றை எதிர்ப்பதிலும் பல போராட்டங்களைச் சந்தித்தவர் இந்திரா காந்தி. இன்று தமிழகத்தில் முதுமலைக் காடு உயிரியல் பூங்காவும் சென்னை மான் பூங்காவும் நிலைத்து நிற்கிறது என்றால், அதற்கு முழுக் காரணம் இந்திரா காந்திதான்.

இதற்காக அவர் அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் நடத்திய போராட்டம் அளப்பரியது. முதுமலைக் காடுகளில் கருணாநிதி கொண்ட வர இருந்த ஹைட்ரோ-எலக்ட்ரிக் திட்டத்துக்கு அனுமதி அளித்தால், 'அது காட்டின் சூழலையே மாசுபடுத்தி விடும்' என அத்திட்டத்தை செயல்படுத்தவிடாமல் தடுத்து நிறுத்தியவர் இந்திராகாந்தி. சொல்லப் போனால், சொந்தக் கட்சியைச் சேர்ந்த மாநில முதல்வர்களுடனே போராடி, இயற்கையைக் காப்பாற்ற பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தார். குறிப்பாக, அர்ஜுன் சிங்குக்கு எதிராக அவர் நடத்திய போராட்டமும் அப்போதைய மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் வி.பி.நாயக்குக்கு எதிராகப் புது பம்பாயை ஏற்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளும் முக்கியமானவை. இயற்கையையும் கலாசாரத்தையும் பாதுகாக்க அரசியலையும் தாண்டி ஒரு நல விரும்பியாக செயல்பட்டவர் இந்திரா காந்தி" என்றார் நெகிழ்ச்சியோடு. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close