மீனவர்களின் நிழலை கூட இனி கடலில் படர அனுமதிக்காதோ இலங்கை அரசு? | Srilanka government may not allow even the shawdows of Tamilnadu fishermen

வெளியிடப்பட்ட நேரம்: 09:19 (09/07/2017)

கடைசி தொடர்பு:09:19 (09/07/2017)

மீனவர்களின் நிழலை கூட இனி கடலில் படர அனுமதிக்காதோ இலங்கை அரசு?

தமிழக மீனவர்கள்

 விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டியே கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மீனவர்களின் உயிரையும் உடமைகளையும் பறித்து வந்த இலங்கை அரசு தற்போது நேரடியாகவே தமிழக மீனவர்கள் மீது குறி வைக்கத் தொடங்கிவிட்டது.

 கடந்த வியாழனன்று இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய மசோதாவில், 'இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் படகுகளுக்கு இலங்கை மதிப்பில் ரூ.50 ஆயிரம் அபராதமும், குற்றவாளிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்க' வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவால், அதிக பாதிப்பினை அடையப் போவது தமிழக மீனவர்கள்தான். நீண்ட கடற்பரப்பைக் கொண்டிருக்கும் தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள் இலங்கையின் கடல் பரப்பை எல்லையாகக் கொண்டுள்ளது. வங்கக்கடலின் ஒரு பகுதியாக உள்ள இப்பகுதி பாக் நீரிணை என குறிப்பிடப்படுகிறது. பரந்து விரிந்து காணப்பட்ட பாக் நீரிணை பகுதி கச்சத்தீவு ஒப்பந்தத்தின் விளைவால் குறுகலான கடற்பரப்பாக மாறிப் போனது. காலம் காலமாக பரந்து விரிந்த கடல் பரப்பினை நம்பி மீன்பிடித்து வந்த லட்சக்கணக்கான மீனவர்களுக்கு இது பெரும் பாதகத்தை ஏற்படுத்தியது.

தமிழக மீனவர்கள்

1983-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு போர் தொடங்கிய நிலையில், தமிழக மீனவர்களுக்கும் பிரச்னை உருவானது. புலிகளின் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு, மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தியது இலங்கை கடற்படை. இந்த தாக்குதலில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்களின் உயிர் பறி போனது. இது தவிர ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஊனமாக்கப்பட்டதுடன் பல கோடி மதிப்புடைய மீனவர்களின் உடமைகளும் நாசமாக்கப்பட்டன. இவை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு மீன்பிடிக்கச் சென்றாலும் பருவநிலை மாற்றத்தினால் குறைந்து போன மீன் வளம், பெருகி வரும் படகுகள் எண்ணிக்கை, மீனுக்கான விலை குறைந்துபோனது, டீசல் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களின் விலை உயர்வு உள்ளிட்டக் காரணங்களால், தமிழக மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர். ஆண்டுக்கு 100-க்கும் குறைவான நாட்களே மீன் பிடி தொழில் நடைபெறுகிறது.

சமீபத்தில்கூட, மீன்பிடித் தடைக் காலம் 45 நாட்களில் இருந்து 60 நாட்களாக உயர்த்தப்பட்டது. இந்தத் தடைக் காலம் முடிந்து 9 நாட்களே மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். இந்த 9 நாட்களில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட படகுகளையும் 10 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துச் சென்றுவிட்டது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட படகுகளில் நூற்றுக்கும் குறைவான படகுகளே மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. இப்போது இதற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இலங்கை அரசு புதிய சட்டத்தினை தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பு (சி.ஐ.டி.யு) பொதுச்செயலாளர் சி.ஆர் செந்தில்வேல், "தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர் கதையாகிப்போனது. துப்பாக்கிச் சூடு,  கைது நடவடிக்கை,  படகுகள் சிறைபிடிப்பு என கடந்த 30 ஆண்டுகளாக பிரச்னை தொடர்கிறது. மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்றதுமுதல் நிலைமை இன்னும் தீவிரம் அடைந்துள்ளது. தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று தேர்தல் நேரத்தில் மிகுந்த வலிமையாகப் பேசிய பாரதிய ஜனதா கட்சி, தற்போது தமிழக மீனவர்கள் பிரச்னையைத் தீர்ப்பதில், தோல்வி அடைந்துள்ளது. அதன் தொடர்ச்சிதான் இலங்கை அரசு கொண்டு வந்துள்ள மசோதா.

சி.ஆர் செந்தில்வேல்

‘இனி எல்லை தாண்டி வரும் மீனவர்களின் படகுகளுக்கு ரூ .50 ஆயிரம்  வரை அபராதம் விதிப்பது என்று  இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றியுள்ளது. இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளிலேயே மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக பாக் நீரிணை பகுதி குறுகிய கடல் பரப்பை எல்லையாகக் கொண்டிருப்பதால், நம் மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிப்பது தவிர்க்க முடியாததாகிறது. 

அதே நேரத்தில், இந்தியாவின்  9 மாநிலங்களை உள்ளடக்கிய பிரத்யேகப் பொருளாதார மண்டல கடல் பகுதியில்,  இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி கப்பல்கள் மூலம்  எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கின்றனர். குறிப்பாக இலங்கை மீனவர்கள் 1,180 கடல் மைல் அளவுக்கு இந்தியக் கடல் பகுதிக்குள் நுழைந்து விலை உயர்ந்த மீன்களைப் பிடித்துச் செல்கின்றனர்.

இச்சூழலில் இரு நாட்டு மீனவர்களும் பரஸ்பரம் பாக்நீரிணை பகுதியில் சுமூகமாக மீன்பிடி தொழில் செய்யும் வகையில், இந்திய இலங்கை அதிகாரிகளைக் கொண்ட  கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு இதுவரை 4 முறை கூடியுள்ளது. ஆயினும் முன்னேற்றம் இல்லை. இதனிடையே இலங்கை அரசு கடல் தொழில் சம்பந்தமான  மசோதா ஒன்றை  வியாழக்கிழமையன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இலங்கை அரசின் இந்தப் புதிய கடல்தொழில் மசோதா, தமிழக மீனவர்களை அச்சுறுத்துவதாக உள்ளது.

மீனவர் பிரச்னை

உலக நாடுகளில் இல்லாத வழக்கமாக இலங்கையில் இந்தச் சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தரை வழியாக உரிய ஆவணங்கள் இன்றி ஒரு நாட்டின் எல்லைக்குள் வேறு நாட்டைச் சேர்ந்தவர் ஊடுருவினால்கூட அந்த நபருக்குக் குறைந்தபட்ச தண்டனையே விதிக்கப்படுகிறது.

கடலுக்குச் செல்லும் மீனவர்கள் இயற்கை இடர்பாடுகளினாலோ, இயந்திரப் பழுதினாலோ எல்லை தாண்டிச் செல்லும் சூழல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. எனவே மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு  இலங்கை அரசின் இந்த  நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். 

மேலும், இலங்கை வசம் உள்ள இந்திய  மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கூறிவரும் தமிழக மீனவர்களின் மாற்று வாழ்வாதாரத் திட்டமான ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் 

இந்தியா, இலங்கை எல்லைப் பகுதியான பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில், சுமூகமாக மீன்பிடி தொழில் செய்யும் வகையில், இருநாட்டு மீனவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்று வழிகளை ஆராய்ந்து அதனைப் பேச்சுவார்த்தை மூலம் உறுதி செய்து ஒப்பந்தமாக உருவாக்குவதே நிரந்தரத் தீர்வாகும்" என்றார்.

கடலையே தங்கள் தாயின் மடியாகக் கருதும் மீனவர்களின் நிழலைக்கூட இனி கடலில் படர அனுமதிக்காதோ இலங்கை அரசு?


டிரெண்டிங் @ விகடன்