வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (09/07/2017)

கடைசி தொடர்பு:15:10 (09/07/2017)

ஐஎஸ் பிடியிலிருந்து மொசூல் நகரம் மீட்பு - ஈராக் ராணுவம்

15 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வந்த மொசூல் நகரை ஐஎஸ் பயங்கரவாதிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றிக் கொண்டனர். சிரியாவின் சில பகுதிகளையும், ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய மொசூல் நகரையும் இணைத்து அதை தனி நாடாகவும் அறிவித்தனர். 

இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மொசூல் நகரை மீட்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் உதவியுடன் தீவிர தாக்குதலை ஈராக் ராணுவம் தொடங்கியது. இரு தரப்பினருக்கும் இடையே போர் உக்கிரம் அடைந்ததால், ஆயிரக்கணக்கானோர் போரில் கொல்லப்பட்டனர். உயிர் பிழைப்பதற்காக 9 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்தனர். 

ஐஎஸ்

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஈராக் ராணுவம் கூட்டுப் படையினரின் உதவியுடன் மொசூல் நகரின் நாலாபுறத்தையும் சுற்றி வளைத்தது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இவர்களுக்கும் நேற்று உச்சக்கட்ட போர் நடந்தது. இதில் ஈராக் ராணுவம் மொசூல் நகரை ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து முற்றிலுமாக கைப்பற்றியது. இந்தவெற்றியை நாட்டு மக்களிடம் அறிவித்த பிரதமர் ஹைதர் அல்-அபாதி, "ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. மொசூல் நகரம் ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது" என்று குறிப்பிட்டார். அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினருக்கும் அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.