வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (09/07/2017)

கடைசி தொடர்பு:09:17 (10/07/2017)

நெல்லையில் நெல் நடவுப் பணிகள் தொடக்கம்!

தென் மேற்குப் பருவ மழையால் நெல்லை மாவட்டத்தில் ஓரளவுக்கு தண்ணீர் கிடைத்துள்ள நிலையில் கார் சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் கார், பிசானம், கோடை ஆகிய முப்போகமாக இருந்த நெல் சாகுபடி தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழை பொய்த்ததால் பிசான சாகுபடி வெகுவாகப் பாதிக்கப்பட்டது. நெல் சாகுபடி செய்தவர்களால் கடைசி வரையில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் காய்ந்து போனது. அதனால் விவசாயிகள் பெரும் இழப்புக்கு உள்ளாகினர். அதனால் இந்த ஆண்டு மழை பெய்த பின்னரும் கார் சாகுபடியைத் தொடங்காமல் விவசாயிகள் சுணக்கம் காட்டி வந்தனர். 

வயல் வெளி

இந்த முறை பெய்த தென் மேற்குப் பருவ மழையால் நீர் நிலைகளுக்கு ஓரளவுக்கு தண்ணீர் வந்துள்ளது. நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் 50 அடிக்கும் அதிகமான அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. அத்துடன் குண்டாறு நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது. அத்துடன் புளியங்குடி அருகில் உள்ள ஸ்ரீமூலப்பேரி நீர்த்தேக்கத்துக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால் இந்த நீர்த்தேக்கங்களின் மூலமாகப் பாசன வசதி பெறக்கூடிய வயல்களில் பயிர் செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

இதையடுத்து, புளியரை, செங்கோட்டை, கட்டளைக் குடியிருப்பு, கற்குடி தவணை, பூலாங்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல் நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே கடந்த ஆண்டு விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் துவண்டு கிடந்த விவசாயிகளுக்கு, தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது தலை காட்டிவரும் மழையால் மனம் குளிர்ந்துள்ளது. அதனால் ஏற்பட்ட நம்பிக்கையில் பிறரிடம்  கடன் பெற்று விவசாயப் பணிகளை உற்சாகத்துடன் தொடங்கி இருக்கிறார்கள்.