Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிஎஸ்டி வரியால் சுருண்டுபோன பீடித் தொழில்! -பரிதவிக்கும் தொழிலாளர்கள்

ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக, பீடித் தொழில் நலிவடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதனால், ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து பீடித் தொழிலை நீக்க வலியுறுத்தி, பீடித் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளனர்.

தமிழகத்தில், பீடி சுற்றும் தொழில் முக்கியமானதாக விளங்குகிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, வேலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்தத் தொழில் நடைபெற்றுவருகிறது. வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய தொழில் என்பதால், பெண்கள் பெருமளவில் ஈடுபட்டுவருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் மட்டும் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பீடி சுற்றுவதற்குத் தேவையான இலை, துகள் போன்றவற்றை நிறுவனங்களிடமிருந்து பெற்று, வீட்டில் இருந்தபடியே பெண்கள் இந்தக் கூலித் தொழிலைச் செய்துவருகிறார்கள்.  

 

ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குப் பின்னர், பீடித் தொழிலுக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டு வரக்கூடிய வரியுடன் சேர்த்து, கூடுதலாக 11.42 சதவிகிதம் வரி செலுத்தவேண்டிய நிலைமை உள்ளது. அதனால், பீடி நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியைப் பாதியாகக் குறைத்துக் கொண்டுள்ளன. இதன் காரணமாக, பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால், மார்க்சிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி மற்றும் நெல்லை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சார்பாக ஜிஎஸ்டி-யில் இருந்து பீடித் தொழிலுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கையை மத்திய அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தவும் முடிவுசெய்துள்ளன.

 

இது தொடர்பாக, ஏ.ஐ.டி.யு.சி நெல்லை மாவட்ட பொதுச்செயலாளர் சடையப்பன், பீடித் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பண்டாரம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் காசி விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கும் பீடித் தொழில், நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இதனால், தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பீடித் தொழிலுக்கு சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி  28 சதவிகிதம் விதிக்கப்பட்டிருக்கிறது. முன்பு விதிக்கப்பட்ட வரியைவிடவும் இது 11.42 சதவிகிதம் அதிகமாகும்.

இந்த வரிவிதிப்பின் காரணமாக, பீடித் தொழில் முற்றிலுமாக நலிவடைந்து, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து உருவாகியிருக்கிறது. இந்தத் தொழில் அழிவதால், பெண்களுக்கு மாற்றுத் தொழில் இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாத நிலைமை ஏற்படும். அதனால், பீடித் தொழிலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 28 சதவிகித ஜிஎஸ்டி வரியை விலக்க வேண்டும். பீடித் தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் எங்களின் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்துவோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close