Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''பொம்மை விக்கிறோம்... செம்மையா வாழுறோம்!'' - காதல் தம்பதியின் கைவினைக்கலை வெற்றி

சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள ஆர்ட்ஸ் ஆஃப் அலங்கார்ஸ் கடை பார்ப்பதற்கு அவ்வளவு எளிமையாக இருக்கிறது. ஆனால், உள்ளே நுழைந்தால் 'அம்மாடியோவ்' அசந்து போய்விடுவீர்கள். கடைக்குள் நுழையும்போதே நெற்கதிர்களால் ஆன வாசற்தோரணம் காற்றிலாடியபடி வரவேற்க, பஞ்சலோக மணிகளின் சரிகம சத்தம் செவிகளுக்குள் நுழைந்து மனதை இதமாக வருடுகின்றன.  

சக்திப்ரியா - பொம்மை

மண்ணால் செய்யப்பட்ட வண்ணக் கிளிகளும், தோகை விரித்தாடும் மயில்களும், சலங்கை பூட்டப்பட்ட மணிகளும் தோரணங்களாக தொங்குகின்றன. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, சென்னப்பட்னா சொப்பு சாமான்கள், மூங்கில் விளக்குகள், பனையோலைக் காற்றாடிகள் என அந்தக்கடை முழுவதும் கைவண்ணப்பொருட்களே அலங்கரிக்க, அவற்றிற்கு நடுவே அமர்ந்து சொப்பு சாமான்களை பனையோலைப் பெட்டியில் அடுக்கி வைத்துக்கொண்டிருக்கிறார் சக்திப்ரியா. உள்ளே சென்ற நம்மை வரவேற்று உட்காரச் சொன்னவர், “இதோ, இதெல்லாம் சென்னப்பட்னாவிலிருந்து வந்த டாய்ஸ். இன்னைக்கு ராத்திரியே அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கணும். அதான், பேக் பண்ணிட்டு இருக்கேன்” என்றவர் அவற்றை பார்சல் செய்துகொண்டே தொடர்ந்து, நம்மிடம் பேசுகிறார்.

சக்திப்ரியா, ராஜா

“நான் இங்க கடை ஆரம்பிச்சு 7 வருஷம் ஆகுது. எம்.ஏ படிச்ச எனக்கு, புடிச்ச வேலை கைவண்ணப்பொருள்களை வியாபாரம் பண்றதுதான். அதுக்கு காரணம், என் வீட்டுக்காரர் ராஜா. அவர் ஒரு ஓவிய ஆசிரியர். நாங்க காலேஜ் படிக்கும்போதே காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எனக்கு இயல்பாவே இயற்கை மீது ஒரு இன்ட்ரஸ்ட் உண்டு. அமைதியை விரும்புறவ நான். அதனால, அடிக்கடி எங்கேயாவது பயணம் செய்துக்கிட்டே இருப்பேன். தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, காஞ்சிபுரம்னு நிறைய இடங்களுக்குப் போவேன். கலைகள் நிறைந்த இந்த ஊர்களிலுள்ள பாரம்பர்யமான கைத்தொழில்களை நேரில் போய் பார்ப்பதிலுள்ள சந்தோஷம் வேற எதுலயுமே எனக்குக் கிடைக்கிறதில்ல.

கைவண்ணப்பொருட்கள் பொம்மை கடை

நான் பயணங்களை விரும்பியதுபோலதான் என் கணவரையும் விரும்பினேன். அவர் ரொம்ப மென்மையானவர். அவருடைய ஓவியங்கள் எப்போதும் என்னை ஆச்சரியப்பட வைத்துக்கொண்டே இருக்கும். நாங்கள் காதலிக்கும்போதுகூட பார்க், பீச்னு சுத்தியதில்லை. எங்கேயாவது கலைகள் நிறைந்த இடங்களுக்குப் போய்விடுவோம். தமிழ்நாட்டுக்குள்ள மட்டுமே சுத்திட்டு இருந்த நான் அவரைக் கல்யாணம் பண்ணினதுக்கு அப்பறம்தான் வெளி மாநிலங்களுக்கெல்லாம் போக ஆரம்பிச்சேன்.

அதோ, அந்த கார்னர்ல இருக்குல்ல மூங்கில் விளக்கு, அது அசாம்ல இருந்து வாங்கிட்டு வந்தது. அங்குள்ள பூர்வகுடி மக்கள் மூங்கில்களைக் கொண்டு பலவிதமான பொருள்களை தயார் செய்யுறாங்க. அதுல ஒரு மாடல்தான் அந்த விளக்கு. இதோ, இந்த மணிகளால் ஆன தோரணம் திபெத்ல இருந்து வாங்கிட்டு வந்தது. பஞ்சலோகமும் ராட் அயனும் கொண்டு தயாரிக்கப்பட்ட இதுல எட்டு மணிகள் இருக்கும். ஒவ்வொரு மணிகளிலிருந்தும் “சரிகமபதநிச” ஓசை வரும். திபெத்ல இருக்குற புத்த கோயில்களில் அமைதி வேண்டி இந்த மணிகளைக் கட்டியிருப்பார்களாம். உங்க பக்கத்துல இருக்குல்ல சீதாராமன் ஓவியம் அது வெஸ்ட் பெங்கால்ல இருந்து வந்தது. இந்த ஓவியங்களை வரையும்போது அந்த நேரத்தில் வரைபவருக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே வரைந்து விடுவார். அதன்பிறகுதான் அதை மெருகேற்றுவார்களாம். அதோ, அந்தக் கடிகாரம் கொல்கத்தாவோடது, அந்த அஷ்டலெட்சுமி சிலை திரிபுராவிலிருந்து வந்தது” என ஒவ்வொரு பொருள்களையும் சிலைகளையும் காட்டி பூரித்துக்கொண்டிருந்தவரை இடைமறித்து, நீங்கள் பார்த்து ரசித்த கலைகளை பிசினஸாக மாற்ற வேண்டும் என்று எப்போது ஐடியா வந்தது என்று கேட்டோம். 

பொம்மை கடை

“ஆரம்பத்துல கைவண்ணப்பொருள்களை வாங்கி விக்குறதுனால நமக்கு என்ன லாபம் வந்துடப்போகுதுன்னு ரொம்பவே யோசிச்சேன். ஆனா, 'நாம பார்த்து ஆச்சரியப்படுற பொருள்களையெல்லாம் நம்ம ஊர் மக்கள்கிட்ட கொண்டு போய்ச் சேர்க்குறது நல்ல விஷயம்தானே. அதுவுமில்லாம, இந்தப் பொருள்கள் எல்லாமே அந்தந்த ஊர்களிலுள்ள மக்கள் பாரம்பர்யமா செய்யுறாங்க. பிளாஸ்டிக் பொருள்களோட வரத்து அதிகமா இருக்குறதுனால இயற்கையா செய்யப்படுற இந்தப் பொருள்களை மக்கள் கிட்ட பரப்புனா பிளாஸ்டிக்கையும் குறைக்க முடியும், நலிவடைஞ்சிக்கிட்டு வர்ற கைத்தொழில் கலைஞர்களோட வாழ்க்கைக்கும் ஊக்கமா இருக்குமே'ன்னு என் கணவர் சொன்னதுனால இந்த பிசினஸ்ல இறங்கினோம். 

முதல்ல தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைலதான் ஆரம்பிச்சோம். ஆரம்பமே நல்ல வரவேற்பு இருந்தது. நம்மளோட பாரம்பர்யமான கலைப்பொருட்களை மக்கள் அதிகமாகவே விரும்புறாங்க. ஆனா, அவங்களால வெளியூர்களுக்கெல்லாம் போய் வாங்கிட்டு வரமுடியாத ஏக்கம் மட்டும்தான் இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டோம். அதுதான் எங்க ஐடியாவை கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ண வச்சது. இப்போ போரூர்ல பெரிய கடையே வெச்சாச்சு. அதை என் கணவர் பாத்துக்குறார். அதுமட்டுமில்ல, தி.நகர்ல இருக்குற பெரிய பெரிய ஜவுளி நிறுவனங்களோட உரிமையாளர்கள்கூட எங்ககிட்டதான் வந்து வாங்கிட்டு போறாங்க. வெளிநாடுகளுக்கும் சப்ளை பண்ணிட்டு இருக்கோம்னா பாத்துக்கோங்களேன். 

சக்திப்ரியா

மண் பொம்மையில ஆரம்பிச்ச எங்க பிசினஸ் இப்படி ஓகோன்னு வளர்ந்துருக்குன்னா, அதுக்கு முக்கியக் காரணம் தொடர்ந்து, நாங்க புதுசு புதுசா மக்கள்கிட்ட எதையாவது அறிமுகப்படுத்திக்கிட்டே இருக்குறதும் இங்க வர்றவங்க யாரும் அது இல்ல, இது இல்லன்னு திரும்பி போயிடக்கூடாதுங்கிற அக்கறையும்தான்” முகம் முழுவதும் புன்னகை பூக்க அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close