Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீண்டிப்பார்க்கும் இலங்கையை வேடிக்கை பார்க்கிறது இந்தியா! ராமதாஸ் ஆதங்கம்

தமிழக மீனவர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்போவதாக இலங்கை அரசு கூறுவது இந்தியாவை சீண்டிப்பார்க்கும் செயல் என்றும், இதை இந்தியா கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். அடுத்து வரும் நாள்களில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக அவர்கள் அறிவித்துள்ள நிலையில், இதைத் தமிழக அரசு கண்டுகொள்ளாதது கண்டிக்கத்தக்கது. மீனவர்களின் போராட்டத்துக்கு முதன்மைக் காரணம், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தால் மீனவர்களுக்கு தலா ரூ.50,000 அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை, படகுகளுக்கு ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதுதான். இலங்கை அரசின் இந்தச் சட்டத்தால் நாகை மாவட்டம் முதல் தூத்துக்குடி மாவட்டம் வரையுள்ள, வங்கக்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அதைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இப்போராட்டத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படும் பொதுவான விதிகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதிக்குப் பொருந்தாது. ஏனெனில், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை மிகவும் குறுகியதாகும். கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால்தான் ஆழ்கடல் வரும்; அங்குதான் அதிக அளவில் மீன் கிடைக்கும். நாகை முதல் ராமேஸ்வரம் வரையிலான பல இடங்களில் இத்தகைய ஆழ்கடல் பகுதி என்பது இலங்கை எல்லையில்தான் அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதாகக் கூறுவதே அபத்தம். குறுகிய கடல் எல்லை கொண்ட பகுதிகளில் ஒரு நாட்டு மீனவர்கள் இன்னொரு நாட்டின் எல்லைக்குச் சென்று மீன் பிடிப்பது அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், நாடுகளின் கடல் எல்லை தெளிவாக வரையறுக்கப்படுவதற்கு முன்பாகவே காலம் காலமாக மீன்பிடித்து வரும் மீனவர்களின் உரிமையை புதிதாக வரையறுக்கப்படும் எல்லைகளால் பறிக்க முடியாது. இதைப் பன்னாட்டு நீதிமன்றங்கள் பல முறை உறுதி செய்திருக்கின்றன. இத்தகைய சூழலில், தமிழக மீனவர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்போவதாக இலங்கை அரசு கூறுவது இந்தியாவை சீண்டிப்பார்க்கும் செயலாகும். இதை இந்தியா கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிப்பதைச் சட்டபூர்வமாக அங்கீகரிப்பது மட்டும்தான் இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக அமையும். இதுகுறித்து இருநாட்டு மீனவர்களுக்கும் இடையே பல சுற்றுப் பேச்சுகள் நடந்துள்ளன. இந்தச் சிக்கலுக்கு வெகுவிரைவில் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கை அரசு தன்னிச்சையாக இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றியிருப்பது முறையல்ல. இந்தச் சட்டத்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பறிக்கப்படும். மற்றொருபுறம் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை அவர்களின் படகுகளுடன் சிங்களப்படை நேற்று கைது செய்திருக்கிறது. இவர்களையும் சேர்த்து இலங்கைச் சிறையில் வாடும் மீனவர்களின் எண்ணிக்கை 53 ஆகவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளின் எண்ணிக்கை 144 ஆகவும் அதிகரித்திருக்கிறது. இவற்றை மீட்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கம்போல மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன் பிரச்னையைக் கை கழுவி விடுவதை முதலமைச்சர் வழக்கமாக வைத்துள்ளார். முதல்வராகப் பதவி ஏற்ற பின்னர், இதுவரை 13 முறை பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், பயன் இல்லை.

தங்களின் கோரிக்கைக்காக வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ள மீனவர்கள் அடுத்தகட்டமாக வரும் 14-ம் தேதி தீக்குளிப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த விவகாரம் மேலும் சிக்கலாக மாறுவதற்குள் இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி, மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தைத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும். அத்துடன் இலங்கைச் சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசு கடுமையான அரசியல் அழுத்தம் தர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close