வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (10/07/2017)

கடைசி தொடர்பு:15:00 (10/07/2017)

ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கியது உச்ச நீதிமன்றம்!

iit madras, உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கும் கலந்தாய்வுக்கும் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை விலக்கிக்கொண்டுள்ளது உச்ச நீதிமன்றம். கடந்த 7-ம் தேதி அனைத்து ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். 

ஐ.ஐ.டி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வின்போது, இந்தி வினாத்தாளில் கேள்வி ஒன்று தவறாகக் கேட்கப்பட்டிருந்தது. இதற்காக அக்கேள்விக்கு பதிலளித்த அனைத்து மாணவர்களுக்கும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. அக்கேள்விக்கு ஆங்கிலத்தில் பதிலளித்தவர்களுக்கும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்ராம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கும் கலந்தாய்வுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, '33 ஆயிரம் மாணவர்கள் ஏற்கெனவே இந்தக் கல்வியாண்டில் ஐ.ஐ.டி-க்களில் சேர்ந்துவிட்டதால் இந்தத் தடை குழப்பத்தை ஏற்படுத்தும்' எனத் தெரிவித்தது. மேலும், கருணை மதிப்பெண் தொடர்பாக விளக்கத்தையும் அளித்தது. அதை ஏற்று இடைக்காலத் தடை உத்தரவை விலக்கிக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. மேலும், கலந்தாய்வைத் தொடரவும், வினாத்தாள் விவகாரம் தொடர்பாக ஐ.ஐ.டி சென்னை உரிய விளக்கத்தை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.