எங்கள் ஆட்சிக்கு மோடி உறுதுணையாக இருக்கிறார்..! - திருப்பூரில் அ.தி.மு.க அமைச்சர் பேச்சு

எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா

மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டம் திருப்பூரில் வரும் 14-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம், திருப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, உடுமலை கே. ராதாகிருஷ்ணன், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

முதலில் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், "சிறியவர் முதல் பெரியவர்வரை அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர் எம்.ஜி.ஆர். எனவே, இந்தியாவே பிரமிக்கும்வகையில், சுமார் இரண்டு லட்சம்பேர் கலந்துகொள்ளும் அளவுக்கு அவருடைய நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை நாம் நடத்தவேண்டும். அன்றைய தினம், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு துறைகளின் சார்பாக, சுமார் 25,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி" என்றார்.

பின்னர் பேசிய தம்பிதுரை, "எம்.ஜி.ஆர், 'மதுரை வீரன்' திரைப்படத்தின் மூலம்தான் மக்களின் மனதில் வேரூன்றி அமர்ந்தார். அதனால்தான், அவரது நூற்றாண்டு விழாவை மதுரையில் முதலாவதாக நடத்தினோம். சினிமாத் துறையில் எம்.ஜி.ஆரின் வளர்ச்சிக்கு கோவை மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறது. எனவேதான், அடுத்ததாகத் திருப்பூரில் விழாவை நடத்தத் தீர்மானித்தோம். திராவிட இயக்கங்களுக்கு எழுச்சிதரும் மாவட்டமாக திருப்பூர் இருந்து வருகிறது. திராவிட இயக்கத்தை அழிக்க, ஒரு தீயசக்தி முயற்சிசெய்து வந்தது. அந்த தீயசக்தியை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்காகத்தான் அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கினார். ஆனால், அந்த தீயசக்தியின் வாரிசு, இன்றைக்குத் தமிழக முதல்வராக வேண்டும் என்று பகல்கனவு கண்டுகொண்டிருக்கிறார்.

திருப்பூர்  கூட்டம்

'விரைவில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும்' என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அதுகூடப் பரவாயில்லை; ஆனால், நம்மிடமிருந்து பிரிந்துசென்றவர்களே அப்படிப் பேசிக்கொண்டு இருப்பதுதான் மிகவும் வேதனையளிக்கிறது. கொங்குமண்டலம் அ.தி.மு.க-வின் கோட்டை என்பதை இனிவரும் காலங்களிலும் நாம் நிரூபிக்க வேண்டும்" என்றார்.

திருப்பூர்  கூட்டம்

கடைசியாகப் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "அன்றைக்கு எம்.ஜி.ஆர் நமக்குக் கூறிய தத்துவங்களும், அவரது உழைப்பும்தான் இன்றைக்கு நம்மை எல்லாம் வாழ்வில் உயர்த்தியிருக்கிறது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, இந்தக் கட்சியைக் கைப்பற்ற பலரும் துடித்தார்கள். அவர், ஜெயலலிதாவை அடையாளம் காண்பித்துச் சென்ற பிறகுதான் இந்தக்கட்சி அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றது. தற்போது, ஜெயலலிதாவும் மறைந்துள்ள நிலையில், 'இந்தக்கட்சியின் நிலைமை என்ன ஆகுமோ?' என்று பலரும் யோசித்த நிலையில், இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி நம்மை எல்லாம் வழிநடத்தி, நல்லதொரு ஆட்சியைத் தந்துகொண்டு இருக்கிறார். ஆனால், இந்த ஆட்சியை எப்படியாவது கலைத்து விடவேண்டும் என்று ஸ்டாலின் கொக்கரித்துக்கொண்டு இருக்கிறார். சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவந்து, நம் ஆட்சிக்கு முடிவுகட்ட நினைத்தார். ஆனால், நாம் அதிலும் வெற்றிபெற்றோம். நமக்குள்ளே பிரச்னை ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டால் அதைப் பயன்படுத்திக்கொண்டு, தி.மு.க ஆட்சியை அமைத்து விடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, நம் ஆட்சிக்கு உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருக்கிறார். அதற்குக்காரணம் நாடாளுமன்றத்தில் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக அ.தி.மு.க-வை அமர வைத்துவிட்டுச் சென்றுள்ள ஜெயலலிதாதான்" என்றார்.

புரட்சித்தலைவரின் புகழ்பாடும் நம் அமைச்சர்களுக்கு, கதிராமங்கலத்தின் கதறல் உட்பட எதுவும் கேட்கப்போவதில்லை....!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!