விளை நிலங்களில் மணல் திருட்டு; விளக்கம் கேட்ட உயர்நீதிமன்றம்..!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களில் விளை நிலங்களில் நடைபெறும் மணல் திருட்டைத் தடுக்கக் கோரிய மனுவில் வருவாய் கோட்டாட்சியர் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்  என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த வில்வலிங்கம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களில் பல காட்டாறுகள் சிற்றாறுகள் ஓடின. அவை அனைத்தும் காலப்போக்கில் வற்றி மணல் மூடி வயல்வெளிகளின் கீழ் நிலத்தடி மணல் படுகைகளாக மாறிவிட்டன. தற்போது அந்தப் பகுதிகள் விளை நிலங்களாக உள்ளது. இந்த விளை நிலங்களில் ஐந்து அடி ஆழம் தோண்டினாலே மணல் படுகைகள் தென்படும். இந்த மணல் படுகைகள்தான் நிலத்தடி நீர் சேமிப்பு ஆதாரமாக உள்ளது.

இந்நிலையில் முதுகுளத்தூர் தாலுகா இளஞ்செம்பூர். பூக்குளம், காக்கூர் , சடையனேரி உள்ளிட்ட கிராமங்களில் நில அமைப்பைச் சிதைத்து மணல் படுகைகளை அரசு அதிகாரிகள் துணையோடு சிலர் கபளீகரம்  செய்து வருகிறார்கள் இந்த நிலப்பகுதிகளில் 1 மீட்டர் ஆழத்திற்குச் சவடு மண் எடுக்க அனுமதி பெற்று விட்டுச் சுமார் 150 அடி ஆழம் வரை பிரமாண்டமான இயந்திரங்கள் மூலமாகப் பெரும்பள்ளங்களைத் தோண்டி மணலைத் திருடுகின்றனர். இது குறித்துப் புகார் அளித்தாலும் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களில் விளை நிலங்களில் நடைபெறும் மணல் திருட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீ்திபதிகள் சசிதரன்- சுவாமிநாதன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர் .

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!