“ஜெயலலிதா முதல்வராக இருந்த அதே அறை... அதே சேர்” - உருகிய பியூஷ் கோயல்!

த்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். இதே மத்திய அமைச்சர்தான், தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது “முதல்வரைச் சந்திப்பதற்கே கடினமாக இருக்கிறது. மத்திய அமைச்சரைச் சந்தித்துப் பேச ஜெயலலிதா மறுக்கிறார்” என்று பகீர் குற்றசாட்டைக் கிளப்பி, அகில இந்திய அளவில் புயலைக்கிளப்பியவர். அதன்பிறகு ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. பின்னர் தலைமைச்செயலகத்தில் ஜெயலலிதாவை பியூஷ் கோயல் சந்தித்தார்.

பியூஷ் கோயல்

பியூஷ் கோயலைச் சந்திப்பதற்கென்றே தனது வீட்டில் இருந்து ஜெயலலிதா, அன்றுமாலை தலைமைச்செயலகம் வருகை தந்தது, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்தச் சந்திப்பின்போது, " 'உதய்' மின்திட்டத்தில் தமிழகம் இணைய வேண்டும்" என்ற கோரிக்கையை ஜெயலலிதாவிடம் வைத்தார் பியூஷ் கோயல். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்முறையாக இன்று தமிழகம் வந்தார் அவர். மத்திய அரசின் மின்திட்டங்களில் தமிழக அரசின் செயல்பாடு, உதய் திட்டம், அணு உலை மின்சாரத்தின் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பற்றி தனியார் ஹோட்டலில் தமிழக மின்துறை அமைச்சர் பி. தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பியூஷ் கோயல், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திப்பதற்காக, தலைமைச்செயலகம் வந்தார். 

மத்திய அமைச்சரும், அமைச்சர் தங்கமணியும் ஒரே காரில் தலைமைச்செயலகம் வந்தனர். பி.ஜே.பி தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜனும் உடன் வந்திருந்தார்.

பியூஷ் கோயல்

தலைமைச்செயலகத்தின் முதல்மாடியில் ஜெயலலிதாவை முதல்முறையாகச் சந்தித்த அதே அறையில், தற்போதைய முதல்வரைச் சந்தித்தார். முதல்வர் பழனிசாமி கொடுத்த பூங்கொத்தைப் பெற்றுக்கொண்டே, முதல்வரின் சேரைப் பார்த்து கையை நீட்டிப் பேசிய பியூஷ் கோயல், “இதே அறையில், இதே சேரில்தான் முதல்வராக அமர்ந்திருந்த மேடம் ஜெயலலிதாஜியைச் சந்தித்தேன். அவரின் ஞாபகம் இந்த அறைக்குள் நுழையும்போது எனக்கு ஏற்படுகிறது” என்றார் உருக்கமாக.

அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்தைப் பார்த்து, “அவர் தைரியம் மிக்க ஒரு தலைவர்” என்று பழனிசாமியிடம் ஜெயலலிதா குறித்த நினைவுகளையும் அப்போது பியூஷ் கோயல் பகிர்ந்து கொண்டார். முதல்வருடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், “குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஜே.பி. வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்ததற்காக, முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டோம். அதேபோல் 'உதய்' மின்திட்டத்தில் தமிழகம் இணைந்ததற்கும் நன்றி தெரிவித்தோம். முதல்வருடனான சந்திப்பு சுமுகமாக இருந்தது. தமிழகத்தில் உருவாகும், காற்றாலை மற்றும் சூரிய மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லும் பசுமை மின்வழித்தடம் விரைவில் அமைத்துத் தரப்படும்” என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!