லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது!

திருநெல்வேலி வட்டாட்சியர் பாலமுருகனை லஞ்சம் வாங்கியதற்காக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர். 

 

திருநெல்வேலி வட்டத்தின் வட்டாட்சியராகப் பணியாற்றி வருபவர், பாலமுருகன். இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குத் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து அவரது நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்காணித்து வந்தனர். நெல்லையை அடுத்த கரையிருப்பு கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் என்பவர் அரசு ஒப்பந்தங்களை எடுப்பதற்காக சால்வன்ஸி எனப்படும் செல்வ நிலைச் சான்று எடுக்க வட்டாட்சியரை அணுகி இருக்கிறார். அந்தச் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டு பாலமுருகன் வற்புறுத்தி உள்ளார்.  

பரமசிவன் அதற்கு மறுத்ததால் அவருக்குச் செல்வ நிலைச் சான்று வழங்காமல் இழுத்தடிப்பு செய்துள்ளார். இதையடுத்து, லஞ்சம் கொடுக்க பரமசிவன் ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆனால், பாலமுருகன் 75,000 ரூபாய் கேட்டதால் அவர் சம்மதிக்கவில்லை. பின்னர் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது 50,000 ரூபாய் கொடுக்குமாறு பாலமுருகன் வற்புறுத்தி இருக்கிறார். முதல் கட்டமாக 18,000 பணத்தை இன்று கொடுக்க ஒப்பந்ததாரர் பரமசிவன் ஒப்புக் கொண்டுள்ளார்.

இது குறித்து பரமசிவன் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் புகார் செய்தார். அவர்களின் திட்டப்படி, பவுடர் தடவிய கரன்சி நோட்டுகளைப் பாலமுருகனிடம் கொடுத்தபோது அங்கே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி-யான மதியழகன் தலைமையிலான போலீஸார் கையும் களவுமாகப் பிடித்தனர். இது குறித்தத் தகவல் கிடைத்ததும் நெல்லை கோட்டாட்சியர் மாலதி அங்கே சென்று விசாரணை நடத்தினார். அப்போது வட்டாசியர் பாலமுருகன் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!