Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''என் புள்ளைக்கு விடிவுகாலம் பொறந்திருச்சு!'' - கலங்கி நெகிழும் தடகள வீரர் லட்சுமணன் தாய் #VikatanExclusive

“தனியாளாக ஐந்து பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்தேன். எந்தச் சூழ்நிலையிலும் நாம சரியா இருந்தா, நம்ம பசங்க பேர் சொல்லும் அளவுக்கு வருவாங்கங்கிற என் நம்பிக்கை வீண் போகலை” எனச் சொல்லும்போதே ஜெயலட்சுமியின் குரலில் பெருமிதம் மிளிர்கிறது. 

லட்சுமணனின் வீடு

இவர், 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமைச் சேர்த்துள்ள தடகள வீரர் லட்சுமணனின் அம்மா. புதுக்கோட்டை மாவட்டம், செக்கூரணி கிராமம்தான்  லட்சுமணனின் சொந்த ஊர். இவரின் தந்தை தமிழகப் போக்குவரத்து துறையில் பணியாற்றியவர். 19 வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். அதுவரை வெளியுலகமே தெரியாதிருந்த ஜெயலட்சுமியும் அவரது குழந்தைகளும் அதிர்ந்து திக்குத் தெரியாமல் நின்றார்கள். அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு பிள்ளைகளுக்காக உழைக்க ஆரம்பித்தார் ஜெயலட்சுமி. இப்போது, லட்சுமணனின் வெற்றியை ஊரே கொண்டாடுகிறது. 

லட்சுமணனின் அம்மா ஜெயலட்சுமி

''என் ஐந்து குழந்தைகளில் கடைசியில் பிறந்த லட்சுமணனும் ராமேஸ்வரியும் ஒட்டிப் பிறந்தவங்க. அதனால், ரெண்டுப் பேரையும் வளர்க்கறதில் சிரமம் அதிகம் இருந்துச்சு. புருஷனும் விபத்தில் தவறிட்டார். உதவி செய்ய யாருமில்லை. புள்ளைங்களை வளர்க்க விவசாய வேலைகளுக்குப் போக ஆரம்பிச்சேன். என்னதான் ராத்திரி பகலா உழைச்சாலும் பிள்ளைகளுக்கு வயிறார சோறுபோட முடியலை. பல வருஷங்களுக்கு வீட்டுல அரை வயிறு சாப்பாடுதான். பிள்ளைகளை பத்தாம் வகுப்புக்கு மேலே படிக்கவைக்க முடியலை. அவர் இருந்த வரைக்கும் லட்சுமணன் இங்கிலீஷ் மீடியத்துல படிச்சுட்டிருந்தான். அப்புறம், ஸ்கூல் பீஸை கட்ட முடியாமல் நிறுத்தி, கவர்மென்ட் ஸ்கூல்ல சேர்த்தேன். ஆறாவதுக்கு மேலே புதுக்கோட்டை அடுத்த திருக்கோகர்ணம் பள்ளியில் சேர்த்தேன். அங்கேதான் அவன் விளையாட்டுத் திறமையைப் பார்த்து சேகரன் சாரும், புதுக்கோட்டை கவிநாடு யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் பயிற்சியாளர் லோகநாதன் சாரும் பயிற்சிக்கொடுக்க ஆரம்பிச்சாங்க. நிறைய உதவிகளும் செஞ்சாங்க. நடுவுல லட்சுமணனே விளையாட போகாம இருந்தப்பவும், அவங்களே தேடிவந்து அழைச்சுட்டுப் போனாங்க'' என்கிறார் ஜெயலட்சுமி.  தினமும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, பல கிலோமீட்டர் தூரத்துக்கு சைக்கிளில் சென்று பயிற்சியை முடிக்கும் லட்சுமணன், மீண்டும் வீடு திரும்பி தயாராகி பள்ளிக்குச் செல்வாராம். 

லட்சுமணன் குடும்பம்

''ஷூ வாங்கக்கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டான். ஆனாலும் போன இடங்களில் எல்லாம் ஜெயிச்சுட்டு வருவான். இந்த நேரத்துலதான் பெரியவனுக்கு வாரிசு அடிப்படையில் வேலை கிடைச்சது. போக்குவரத்து துறையில் தற்காலிக வேலை. லட்சுமணனுக்கும் ராணுவத்தில் வேலை கிடைச்சது. வீட்டுல அதுவரை ஆடின வறுமை கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிச்சது. லட்சுமணன் தான் கலந்துக்கிற போட்டிகளில் எல்லாம் ஜெயிச்சுட்டு வர்றதைப் பார்க்கிறப்போ அவனைப் பெத்த வயிறு குளிர்ந்து போகும். 'உன் பிள்ளை தங்கம் ஜெயிச்சு நாட்டுக்கே பெருமைச் சேர்த்துட்டான்'னு சொல்றதைக் கேட்கிறப்போ, நாங்க பட்ட கஷ்டம் வீணாகலைனு தோணுது. என் புள்ளைக்கு விடிவு காலம் பொறந்திடுச்சு. கஷ்டப்பட்டாலும் கடன வாங்கி என் எல்லாப் பிள்ளைகளுக்கும் கல்யாணத்தை பண்ணி வைச்சுட்டேன். லட்சுமணன்தான் பாக்கி. அவனுக்கும் கல்யாணத்தை பண்ணிட்டா, கடமையை முழுசா முடிச்ச திருப்தி கிடைக்கும். இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைச்சதா சந்தோஷமாகிடுவேன்'' என்கிற ஜெயலட்சுமியின் குரலில் தாய்மை இழையோடுகிறது.

பயிற்சியாளர் லோகநாதன்

லட்சுமணனின் பயிற்சியாளரான லோகநாதன், “லட்சுமணன் சின்ன வயசிலிருந்தே ரொம்ப சுட்டி. வறுமையான சூழலிலும், அவனுக்குள்ள இருந்த விளையாட்டு மீதான ஆர்வமும் திறமையும் எங்களை ரொம்ப கவர்ந்துச்சு. லட்சுமணனின் மின்னல் வேக ஓட்டத்துக்கு சக வீரர்கள் ஈடு கொடுக்கிறது கஷ்டம். 2015-ம் வருஷம் சீனாவில் நடந்த ஆசிய தடகள ஓட்டப்பந்தயப் போட்டியில் 5,000 மீட்டர், 10,000 மீட்டர் பந்தயங்களில் இரண்டாம் இடமும், 2016-ம் வருஷம் நடந்த தேசிய சீனியர் ஓட்டப்பந்தயத்தில், 5,000 மீட்டர் மற்றும் 10,000 மீட்டர் பந்தயங்களில் தங்கமும் ஜெயிச்சார். கடந்த ஆசியப் போட்டியில் நழுவவிட்ட வெற்றியை, இப்போது கைப்பற்றி இருக்கார். இதன் மூலம் சர்வதேச சாம்பியன் போட்டிக்குத் தேர்வாகியிருக்கார். ஷூ வாங்கவே காசு இல்லாமல் வெறும் கால்களால் ஓட ஆரம்பிச்ச லட்சுமணன், இன்னிக்கு இந்தியாவையே தன் ஊர்ப் பக்கம் திரும்பிப் பார்க்க வெச்சிருக்கார்'' என்கிறவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர். 

லட்சுமணன்

தற்போது, தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, லட்சுமணணுக்கு 20 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார். லட்சுமணன் இன்னும் பல பதக்கங்கள் வாங்கிகுவிக்க வாழ்த்துவோம்! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close