Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எங்களோட வலி யாருக்குத் தெரியும்..? - கதறும் பெண்கள்... காதைப் பொத்திக்கொள்ளும் அரசாங்கம்.!


டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டம்

“இந்தப்பக்கம் ரோட்ட கிராஸ் பண்ணவே முடியல தம்பி. பொம்பளைங்க வேலைக்குப் போயிட்டு நிம்மதியா வீடுதிரும்ப முடியல... ஏகப்பட்ட டார்ச்சர். பொம்பளைங்களைப் பாத்துட்டா போதும், வேணும்னே வந்து மேலஉரசுறானுங்க. எதிர்த்துக்கேட்டால், வாய்க்கு வந்தபடியெல்லாம் பேச ஆரம்பிச்சுர்றாங்க... அடுத்தடுத்து அவுங்க பேசுற வார்த்தைகளை வெளில சொல்லவே கூசுது. அந்தளவுக்கு அசிங்க அசிங்கமா பேசுறாங்க. பிராந்திகடை எங்களுக்கு வேண்டவே வேண்டாம்னு போராடுற மக்களுக்கு எதிரா அரசாங்கமே இருப்பது வேதனையா இருக்கு. அரசே குடிகாரப் போக்கிரிகளை ஊக்குவிக்குது. அப்படி, இருக்கும்போது எங்க குறைகளை யார்கிட்ட போய் சொல்லி அழுவோம்?" பலநாள்களாகச் சேர்த்து வைத்திருந்த ஆதங்கங்களை மொத்தமாக அள்ளிக்கொட்டுகிறார்கள், கோவை கண்ணப்ப நகர் பெண்கள்.

சங்கனூர் சாலையில் உள்ள கண்ணப்ப நகரில் இருக்கும் நான்கு டாஸ்மாக் கடைகளையும் மூடக்கோரி, அந்தப்பகுதி பெண்களைத் திரட்டி, அனைத்துக் கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டிருந்த ஆர்ப்பாட்டத்தை அடக்க, ஏராளமான போலீஸை குவித்திருந்தது மாவட்ட நிர்வாகம். 

போராட்டத்தில் கலந்துகொண்ட நிஷா, “நான் வீட்டுவேலைக்குப் போறேங்க... காலையில 10 மணிக்குப் போனால், சாயங்காலம் 6 மணிக்கு மேலதான் வீடு திரும்புவேன். நான் வேலைக்குப் போகலைன்னா குடும்பத்தை ஓட்டமுடியாது. கண்ணப்ப நகர்ல அடுத்தடுத்து வரிசையா நான்கு டாஸ்மாக் கடைகள் இருக்கு. பழசு ரெண்டு இல்லாம, இப்போ புதுசா ரெண்டு கடைகள் திறந்திருக்காங்க. இந்தப் பகுதி இப்போ குட்டி பாண்டிச்சேரி போல ஆயிருச்சி. அதனால, இந்தப் பகுதியில இருக்கற பெண்கள் பட்ற அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்லை. வேலைக்குப் போயிட்டு, வீட்டுக்குத் திரும்பும்போது, அந்த இடத்தைக் கிராஸ் பண்ணவே முடியல தம்பி. வேணும்னே மேலவந்து உரசுறாங்க... அசிங்க அசிங்கமா பேசுறாங்க.

எல்லா இடத்துக்கும் புருஷனையும், புள்ளைங்களையும் பாதுகாப்புக்குக் கூட்டிகிட்டு போக முடியுமா? பெண்களுக்குப் பாதுகாப்புங்குறது சுத்தமா இல்ல. அதைப்பத்தி அரசாங்கத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. குடிகாரப் போக்கிரிகளின் ஒவ்வொரு வார்த்தையையும் எதிர்கொள்ள முடியாமல், நாங்க பட்ற பாடு இந்த அரசாங்கத்துக்குத் தெரியுமா? எங்களோட வலி யாருக்குத் தெரியும்? இந்தப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஒழிக்கறதுதான் ஒரேவழி. அதுதான் எங்களுக்கு நிம்மதியத் தரும். பணத்துக்கு ஆசைப்பட்டு, கடை வைக்கறதுக்கு இடம் தர்றதாலதானே டாஸ்மாக் கடைய வைக்கறாங்க. எங்களுக்குப் பிராந்தி கடையும் வேண்டாம்; இந்த அரசாங்கமும் வேண்டாம்" என்று கொந்தளித்தார்.
 

டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடும் பெண்கள்

மற்றொரு பெண் சாந்தி கூறுகையில், “அப்பன்காரன்தான் குடிச்சு சீரழியுறான். அடுத்த தலைமுறையான எங்களோட பிள்ளைங்களாவது ஒழுங்கா வளரணும்னுதான், நான் உள்பட ஒவ்வொரு பெண்களும் நினைக்கிறோம். வேலை வெட்டியெல்லாம் விட்டுவிட்டு இப்படி இந்தக் கொளுத்துற வெயில்ல எல்லாரும் போராடிக்கிட்டு இருக்கறதும் அதுக்காகத்தான். இந்தத் தலைமுறையோடு குடி கலாசாரத்தை ஒழிச்சே ஆகணும். இல்லைன்னா அதுக்குத் தடையா இருக்கிற இந்த அரசாங்கத்தை ஒழிக்கணும். பத்து வயசுப் பையன்கூட பீர் குடிக்கிறான். பீர் குடிக்கிறதெல்லாம் இப்ப ஜூஸ் குடிக்கிற மாதிரி ஆக்கி வச்சுருக்கு இந்த அரசாங்கம். இது எவ்வளவு பெரிய அவமானம். பொம்பளப் பிள்ளைங்க நிம்மதியா காலேஜ் போக முடியலை. பிள்ளைங்களப் பெத்தவங்க ஒவ்வொரு நிமிஷமும் வயித்துல நெருப்பைக் கட்டிகிட்டு உட்காந்திருக்க வேண்டியதிருக்கு. இதெல்லாம் இந்த அரசாங்கத்துக்குப் புரியாமல் இல்லை. புரியாதமாதிரி நடிக்கிறாங்க" என்றார் ஆதங்கத்தோடு.

எவ்வளவு போராட்டங்கள் நடந்தாலும், எத்தனை செய்திகள் எழுதினாலும், அவை அனைத்தும் சாராய வருமானத்திற்கு முன் தோற்றுப்போய் விடுகிறது. ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற வாசகத்தைப்போட்டு சாராயம் விற்கும் அரசாங்கத்துக்கு நாட்டில் ஒவ்வொரு குடியாகக் கெட்டால், இந்த ஒட்டுமொத்த நாடே குலைந்துவிடும் என்று எப்போது தெரியப்போகிறதோ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close