வெளியிடப்பட்ட நேரம்: 14:13 (11/07/2017)

கடைசி தொடர்பு:15:37 (11/07/2017)

திவாகரன் ஏற்பாடு செய்த கூட்டம் ரத்து ஏன்? - குடும்பத்தில் நடந்த காரசார விவாதம் #VikatanExclusive

திவாகரன் ஏற்பாடு செய்த எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா கூட்டம்

மன்னார்குடியில் திவாகரன் ஏற்பாடு செய்த எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. டி.டி.வி.தினகரனின் விவகாரமாகக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மதுரையில் நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதைத்தொடர்ந்து திவாகரன் ஆதரவாளர்கள் மன்னார்குடி தேரடியில் வரும் 15ம் தேதி மாலை 6 மணிக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்தனர். விழாவில் மூத்த தொண்டர்களைக் கௌரவப்படுத்துதல், நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அந்தப்பகுதியில் பேனர்களும் வைக்கப்பட்டன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. அழைப்பிதழில் டி.டி.வி.தினகரனின் புகைப்படமும், பெயர் அச்சடிக்கப்படவில்லை. இதனால் தினகரன் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்தனர். இது, சசிகலா குடும்பத்தினரிடையே மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குடும்ப உறவுகளிடையே காரசார விவாதமும் நடந்துள்ளது. கூட்டம் ரத்து என்ற தகவல் திவாகரன் ஆதரவாளர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. இதனால், அவர்கள் வைத்த பேனர்களை அகற்ற முடிவுசெய்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் தரப்பு ஆதரவாளர்கள், "டி.டி.வி.தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையே நடந்துவரும் மௌன யுத்தம் இன்னும் தொடர்கிறது. டி.டி.வி.தினகரன், கட்சியில் அதிகாரம் செலுத்தியதைத் திவாகரன் தரப்பு விரும்பவில்லை. இதுதான் கட்சியில் கடும் களேபரத்தை ஏற்படுத்த ஒரு காரணமாக அமைந்தது. எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை திவாகரன் தரப்பு மன்னார்குடியில் நடத்த ஏற்பாடு செய்தனர். இந்தக்கூட்டத்திற்கான அழைப்பிதழில் சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திவாகரன், அவரது மகன் ஜெய்யானந்த் ஆகியோரின் புகைப்படங்களை மட்டுமே போட அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக டி.டி.வி.தினகரனின் புகைப்படத்தையும், பெயரையும் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லப்பட்டது.

திவாகரன்

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக சில அமைச்சர்களும் வாக்குறுதி கொடுத்திருந்தனர். இந்தத் தகவல் சசிகலாவிடம் கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக அவர், ஏற்கெனவே குடும்பத்தில் நடந்த சில நிகழ்வுகளால் இந்த நிலைமைக்குச் சென்றுள்ளோம். மீண்டும் உங்களுக்குள் பிரச்னையை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தாகச் சொல்லப்படுகிறது. இதனால்தான் திவாகரன் தரப்பு கூட்டத்தை ரத்துசெய்துள்ளது" என்றனர்.

திவாகரன் தரப்பில் பேசியவர்கள், "சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனு தொடர்பான தகவல் எங்களுக்குப் பாதகமாக இருக்கிறது. இந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தேவையில்லை என்று கருதினோம். மேலும், இந்தக் கூட்டத்தைப் பிறகு நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம். டி.டி.வி.தினகரன் விவகாரத்தால் இந்தக் கூட்டம் ரத்து செய்யப்படவில்லை. மீண்டும் கூட்டம் நடத்தினாலும் அவரது பெயர், புகைப்படம் இடம்பெற வாய்ப்பில்லை" என்றனர் காட்டமாக. 
 
சசிகலா குடும்பத்தினரிடையே ஏற்படும் கருத்துமோதலே அ.தி.மு.க.வில் அணிகள் உருவாகக் காரணம் என்கின்றனர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள். தற்போது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவதிலும் அந்தக் குடும்பத்தினரால் சிக்கல் எழுந்துள்ளது. இது, கட்சியைப் பலவீனப்படுத்தும் என்கின்றனர் உண்மையான அ.தி.மு.கவினர்.


டிரெண்டிங் @ விகடன்