கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக சென்னையில் தொடரும் போராட்டம் 

 

 

                                                                               கதிராமங்கலம் ஆதரவு சென்னைப் போராட்டம்
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் நிலத்தையும் நிலத்தடி நீரையும் பாழாக்கியுள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை அங்கிருந்து வெளியேறுமாறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரைக் கைதுசெய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை விடுதலைசெய்யக் கோரியும் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தலைநகர் சென்னையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. 

கதிராமங்கலம் ஆதரவு வாழ்வுரிமைக் கூட்டமைப்பு போராட்டம்

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் கடந்த 8-ம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி, வி.சி.க-வின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வன்னியரசு உட்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பேசினர். 

                                           கதிராமங்கலம் ஆதரவு சென்னைப் போராட்டம்
அதையடுத்து 10-ம் தேதி முற்பகல் 11 மணியளவில் புரட்சிகர இளைஞர் முன்னணியின் சார்பில், எழும்பூர் ரயில்நிலையம் அருகில் ஓ.என்.ஜி.சி. முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. ரயில்நிலையம் முன்பிருந்து ஊர்வலமாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்துநிறுத்தி கைதுசெய்தனர். இன்று மதியம் சென்னைப் பல்கலைக்கழக நுழைவாயில் அருகில் பெரியார்- அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் சார்பில் மாணவர்கள், கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!