வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (11/07/2017)

கடைசி தொடர்பு:16:41 (11/07/2017)

சென்னை சில்க்ஸ் கட்டட இடிபாடுகளில் வைர, தங்க குவியல்- பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீட்பு

சென்னை சில்க்ஸ்

சென்னை சில்க்ஸ் கட்டட இடிபாடுகளுக்குள் தங்க, வைர நகைகள் இருந்த லாக்கர் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு தங்க, வைர குவியல் கிடப்பதாகப் பரவிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தி.நகர், சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை மற்றும் குமரன் நகைக்கடை ஆகியவற்றில் கடந்த மே 31ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏழு மாடி கட்டடமும் சேதமடைந்தன. இதற்கிடையில் அனுமதி பெறாமல் மாடிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. தீ விபத்தில் கட்டடம் இடிந்துவிழும் அபாயம் ஏற்பட்டதால் அதை முழுமையாக இடிக்க அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் கட்டடம் இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சில நாள்களுக்கு முன்பு கட்டடம் இடிக்கப்பட்டது. தொடர்ந்து, கட்டட இடிபாடுகள் அகற்றும் பணிகள் நடந்துவருகின்றன. தற்போது, தங்க, வைர நகைகளைப் பாதுகாத்து வைத்திருந்த ரகசிய அறைகளின் இடிபாடுகள் அகற்றும் பணி தொடங்கியது. இதையொட்டி அங்கு புதைந்திருந்த லாக்கர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஊழியர்கள் மீட்டெடுத்தனர். அதில் வைர, தங்க நகைகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

சென்னை சில்க்ஸ்


இதுகுறித்து மீட்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் கூறுகையில், "தீ விபத்தால் உறுதித்தன்மையை இழந்த கட்டடத்தை முழுமையாக இடித்துவிட்டோம். தரைத்தளத்துக்குக் கீழே உள்ள பாதாள அறையில்தான் லாக்கர்கள் வைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தனர். இதனால், அந்த அறையின் கட்டட இடிபாடுகளை இன்று அகற்றினோம். மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள், சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். கட்டட இடிபாடுகளை அகற்றிவிட்டு வந்த ஊழியர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இதன்பிறகு மீட்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து சென்னை சில்க்ஸ் நிர்வாகத்தின் நம்பிக்கையானவர்கள் மற்றும் போலீஸார் மட்டும் லாக்கர் இருக்கும் இடத்துக்குச் சென்றனர். அங்கு 150 கிலோவிலிருந்து 200 கிலோ எடையுள்ள பெரிய லாக்கர் ஒன்று இருந்தது. அதைப் பத்திரமாக அங்கிருந்து எடுத்து வெளியே கொண்டு வந்தனர். அதில் தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்தன. லாக்கரில் எந்தவித சேதமும் இல்லை. இதனால், வைர, தங்க நகைகள் பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டன. இன்னும் நுழைவுப்பகுதியில் இன்னொரு லாக்கர் இருப்பதாக எங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அந்தப்பகுதியில் உள்ள கட்டட இடிபாடுகளை அகற்றியப் பிறகு அந்த லாக்கரும் மீட்டெடுக்கப்படும்" என்றனர்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "சென்னை சில்க்ஸ் கட்டட இடிபாடுகளுக்கிடையே வைரம், தங்க நகைகள் இருப்பதாகத் தகவல் கிடைத்ததும் 24 மணி நேரமும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தற்போது, தரைத்தளத்துக்குக் கீழே உள்ள பாதாள அறையில் தங்கம், வைர நகைகள் அடங்கிய லாக்கர் மீட்கப்பட்டுள்ளது. அதை சென்னை சில்க்ஸ் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில லாக்கர்கள் இருப்பதால் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது" என்றனர். 

தங்க, வைர நகைகள் குவியல்?

சென்னை சில்க்ஸ்

சென்னை சில்க்ஸ் கட்டட இடிபாடுகளிலிருந்து ஏற்கெனவே ஒரு லாக்கர், ஏடிஎம் இயந்திரம் மீட்டெடுக்கப்பட்டது. தற்போது பெரிய லாக்கர் ஒன்று எடுத்துள்ளோம். அதில் தங்க நகைகள், வைர நகைகள் உள்ளன. இன்னும் நுழைவுப்பகுதியில் உள்ள ரகசிய அறையில் இன்னொரு லாக்கர் உள்ளது. அது, விரைவில் மீட்டெடுக்கப்படவுள்ளது. இதற்கிடையில் சென்னை சில்க்ஸ் கட்டட இடிபாடுகளுக்குள் தங்க, வைர நகைகள் குவியல், குவியலாகச் சிதறிக் கிடப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதுகுறித்து மீட்பு பணி மற்றும் போலீஸாரிடம் கேட்டதற்கு 'லாக்கரில்தான் தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளன. எதுவும் கட்டட இடிபாடுகளுக்குள் சிதறவில்லை' என்று தெரிவித்தனர். இன்னும் சில தினங்களுக்குள் கட்டட இடிபாடுகள் முழுமையாக அகற்றப்படவுள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


டிரெண்டிங் @ விகடன்