Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமல் - எடப்பாடி பேனர்களால் , அரசியல் களமான திருச்சி

கமல்

டந்த 9-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக திருச்சி வருகை தந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதே நாளில், திருச்சி மாவட்டம் நன்னிலத்தில் நடைபெற்ற 'இயக்குநர் சிகரம்' பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக நடிகர் கமல்ஹாசனும் திருச்சி வழியாக நன்னிலம் போவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நடிகர் கமல்ஹாசனும் ஒரே நாளில் திருச்சிக்கு வருகை தர இருந்ததையொட்டி, இவர்கள் இருவரையும் வரவேற்க எதிரும்புதிருமாக வைக்கப்பட்டிருந்த போஸ்டர்களில் அனல் தெறித்தது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் அகில இந்திய சீனியர் கபடிப்போட்டி நடைபெற்றுவந்தது. எம்.ஜி.ஆர் இளைஞர் அணியின் சார்பில், அந்த அமைப்பின் மாநிலச் செயலாளரான முன்னாள் அமைச்சர் சிவபதி தலைமையில், கடந்த 6-ம் தேதியிலிருந்து 9-ம் தேதிவரை கபடிப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் ஆண்கள் பிரிவில் அகில இந்திய அளவில் 23 அணிகளும், பெண்கள் பிரிவில் 19 அணிகளும் பங்கேற்றன. இந்தப் போட்டிகளின் இறுதி நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை
(9.7.2017) மாலை, வெற்றிபெற்ற அணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிசுகளை வழங்கினார்.

முதல்வர் வருகைக்காக திருச்சி முழுவதும் உள்ள வேகத் தடைகள்  அகற்றப்பட்டன. அதேபோல் அவர் பயணிக்கும் சாலைகளில் உள்ள தெரு விளக்குகளும் சாலைகளும் சீரமைக்கப்பட்டன. பாதுகாப்புக்காக ஆங்காங்கே போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். முதல்வரை வரவேற்று அ.தி.மு.க-வினர்  கட்–அவுட்டுகளை வைத்து அதகளப்படுத்தியிருந்தனர்.

இது இப்படியிருக்க, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடியில், மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு கவிஞர் வைரமுத்து, மார்பளவு வெண்கலச் சிலை வைத்து, அதன்  திறப்புவிழாவுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தச் சிலைத் திறப்பு விழாவும்,  தமிழக முதல்வர் திருச்சி வருகையும் ஒரே நாளில், நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த் எஸ்.சாய், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், கவிஞர் வைரமுத்து மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்வதாக இருந்தது. எனவே, சினிமா ரசிகர்கள் பலரும் நன்னிலம் நோக்கி  படையெடுத்தனர்.


இந்த நிகழ்ச்சிக்காக கமல், திருச்சி வழியாக நன்னிலம் செல்வதாக இருந்தார். அவரின் வருகையையொட்டி, அவரை வரவேற்று, அவரின் ரசிகர்கள் வைத்திருந்த போஸ்டர்கள், கட்–அவுட்டுகள் அனைத்தும் அரசியல் ரகம். குறிப்பாகத் திருச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களுக்குப் போட்டியாகவே இவை இருந்தன.

கமல் 'ஜூலை 9-ல் நன்னிலத்துக்கு வருகை தரும், எங்கள் உலக நாயகனே வருக! தமிழர்களின் வருங்காலமே வருக! தவறுகளைத் தட்டிக்கேட்கும் தைரியசாலியே வருக! மக்களின் மகராசனே! நன்னிலம் செல்லும் நல்லவரே! தமிழகத்தில் பிறந்த உண்மைத் தமிழனே! தமிழகத்தின் மனசாட்சியே! உனது வருகையால் திருச்சி பெருமையடைகிறது பிக் பாஸ்!' என்பது போன்ற  விதவிதமான வாசகங்களுடன் கமல் ரசிகர்கள் வைத்திருந்த போஸ்டர்களும் ஃப்ளெக்ஸ் வரவேற்புகளும் பளிச்சிட்டன. உச்சகட்டமாக புதுக்கோட்டை கமல் ரசிகர்கள், ‘ஊழலில் மிதக்கும் தமிழகத்தைத் தூய்மைப்படுத்த வா!’ என நடிகர் கமல்ஹாசனை அரசியலுக்கு அழைத்து போஸ்டர்கள் ஒட்டி அதகளப்படுத்தியிருந்தனர். அந்தப் போஸ்டரில், 'நடிகர் சங்கத்தையும் தயாரிப்பாளர் சங்கத்தையும் தூய்மைப்படுத்தினாய். எப்பொழுது தலைவா ஊழலில் மிதக்கும் தமிழகத்தை தூய்மைப்படுத்துவாய்? மனது வை தலைவா. தூய்மை நாயகனே. விரைவில் உங்கள் சேவையை எதிர்நோக்கும் தமிழ்மக்கள்' என்கிற 'நச்' வாசகங்களோடு போஸ்டர்களை வடிவமைத்திருந்தனர்.

அன்று மதியம் திருச்சி வருகை தர இருந்த கமல்ஹாசனை நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் பேரணியாகச் சென்று வரவேற்று, தங்கள் தலைவனோடே ஊர்வலமாக நன்னிலம் செல்லவும் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர் ரசிகர்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அன்று திருச்சியில் நடந்த கபடிப்போட்டி இறுதி விழாவில் கலந்துகொண்டார். ஆனால் ஏனோ கமல்ஹாசனின் நன்னிலம் பயணம் ரத்து ஆனது. மேடையில் பேசிய வைரமுத்து, 'கமலுக்கு உடல்நிலை சரியில்லாததால், கே.பாலசந்தரின் சிலைத் திறப்பு விழாவுக்கு வரமுடியவில்லை' என விளக்கம் அளித்தார்.  

ஒரே நாளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வருகைக்காக அ.தி.மு.க-வினரும் கமலின் வருகைக்காக அவரது ரசிகர்களும் தடாலடியான ஏற்பாடுகளைச் செய்து திருச்சி மாநகரையே திணறடித்ததுதான் இப்போது 'ஹாட் நியூஸாக'ப் படபடக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close