Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘14 மாடி....25 பைசா கட்டணம்’ சென்னையின் ஒற்றை அடையாளம் தீயில் எரிந்த தினம்! #2MinsRead

இன்றைய சென்னையின் அடையாளங்களாக எத்தனையோ விஷயங்களை எடுத்துக் காட்டலாம். ஆனால் 60 ஆண்டுகளுக்கு முன் சென்னையின் ஒற்றை அடையாளமாகத் திகழ்ந்தது... அன்றைய 14 மாடி கட்டிடமான எல்.ஐ.சி கட்டடம் மட்டும்தான். வானத்தை வசப்படுத்தும் வண்ணம் நீண்டு நெடிய உருவாக்கப்பட்டிருந்த இந்தக் கட்டடம் அக்கினி நெருப்பினால் சூழப்பட்ட தினம் இன்று.

 சென்னையின் இதயமாகத் திகழும் இன்றைய அண்ணா சாலையில், 1957-ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது எல்.ஐ.சி கட்டடம். 177 அடி உயரம் கொண்ட இந்த கட்டடத்தை அப்போதைய மத்திய நிதி அமைச்சரான மொரார்ஜி தேசாய் திறந்து வைத்தார். தமிழகத்தின் உயரமான கட்டடம் எனப் பெயர் பெற்ற இந்தக் கட்டடத்தின் 14-வது மாடியில் நின்று பார்த்தால், சென்னை நகரின் எழிலை முழுவதுமாகக் காண முடியும். இதனைக் கண்டு ரசிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக 25 பைசா கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டது. அவ்வாறு 25 பைசா கொடுத்து மாடிக்குச் சென்ற இளைஞர் ஒருவர் 14-வது மாடியின் உச்சியில் இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இதையடுத்து பார்வையாளர்கள் மேலே செல்லத் தடை விதிக்கப்பட்டது.

எல். ஐ. சி

1975-ம் ஆண்டு ஜூலை 11 இரவு 8.30 மணியளவில் எல்.ஐ.சி கட்டடத்தில், திடீரெனத் தீ பற்றி எரிந்தது. வான் மேகங்களைத் தொடும் வகையில் தீ ஜூவாலைகள் சுடர்விட்டு தெரிந்தன. புகைமூட்டத்தில் சிக்கிய அப்பகுதி முழுவதும் இருண்டுபோனது. போக்குவரத்தும் தடைபட்டுப் போனது. கட்டடத்தின் அருகில் இருந்த கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டன.

 சென்னையின் அடையாளமான கட்டடம் தீ பற்றி எரிவதைக் காண நகரின் அனைத்துப் பகுதியிலும் இருந்து வந்த மக்கள் குவியத் தொடங்கினர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, எழும்பூர் பகுதி மக்கள், எல்.ஐ.சி கட்டடம் எரிவதை தங்கள் வீட்டின் மாடியிலிருந்துப் பார்த்து அதிர்ந்தனர்.

கட்டடத்தின் தரைப் பகுதியில் இருந்த உம்மிடியார் நகைக் கடை, பின்னி ஜவுளிக் கடை, ஸ்டேஷனரி கடை என எல்லாக் கடைகளிலும் தீ பற்றிக்கொள்ள கடையினுள் இருந்த நகைகள், ஜவுளித் துணிகள், எல்.ஐ.சி அலுவலகத் தளவாடங்கள், ஃபைல்கள்  என எல்லாமே எரிந்து சாம்பலாயின.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் முழு வீச்சில் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அன்றைய தினம் சிந்தாதிரிப்பேட்டையில், நெடுஞ்செழியன் பிறந்தநாள் விழாவில் பேசிக்கொண்டிருந்த முதல்வர் கருணாநிதி, தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் உடனடியாக அங்கு வந்து தீயணைப்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார். நவீன இயந்திரங்கள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் தீயணைப்புத் துறையினரிடம் இருந்த ஏணி 5-வது மாடி வரை மட்டுமே பயன்பட்டது. 1,500-க்கும் மேற்பட்டவர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டும் விடிய விடிய தீ எரிந்துகொண்டே இருந்தது. தீயின் கடும் வெப்பத்தால் கட்டடத்தில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் கட்டடம் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் தீயணைப்பு ஊழியர்கள் கட்டடத்தின் உள்ளே செல்ல முடியாத நிலை நீடித்தது. இதன் பின் கட்டட நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் செய்யப்பட்டன. சோதனையின் முடிவில் கட்டடம் இடியும் வாய்ப்பு இல்லை எனத் தெரிய வந்தது. இதன் பின் ஒவ்வொரு மாடியாகச் சென்று தீயை அணைத்தனர். மறுநாள் (ஜூலை 12) மாலை 6 மணி அளவில், சுமார் 22 மணி நேர போராட்டத்துக்குப் பின் 14-வது மாடியில் எரிந்த தீ அணைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்தன. 

இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து அறிய 250 மாதிரிகள் எடுக்கப்பட்டு ரசாயன சோதனைக்கு அனுப்பப்பட்டன.

வானம் தொடும் கட்டடமாக இருந்தாலும் இதன் பாதாள அறையில்தான் சுமார் 7 லட்சம் எல்.ஐ.சி பாலிசிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இதனால், இவை நெருப்புக்கு இரையாகாமல் தப்பின.

ஆண்டுகள் பல கடந்தும் இந்தத் தீ விபத்தினை ஞாபகப்படுத்தும் வகையில் பல தீ விபத்துகள் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close