''பார்வையில்லைன்னா பரவாயில்லை சார்... படிப்பு இருக்கு, வாழ்ந்து காட்டுவோம்'' - நம்பிக்கை மனுஷிகள் | We may be visually challenged but our education will help us

வெளியிடப்பட்ட நேரம்: 18:22 (11/07/2017)

கடைசி தொடர்பு:18:22 (11/07/2017)

''பார்வையில்லைன்னா பரவாயில்லை சார்... படிப்பு இருக்கு, வாழ்ந்து காட்டுவோம்'' - நம்பிக்கை மனுஷிகள்

 ''பொண்ணுங்க நல்லாப் பிறந்து வளர்ந்திருந்தாலே ஆயிரம் குறைகளைக் கண்டுபிடிப்பாங்க. எங்களை மாதிரி பார்வையில்லாமல் இருந்தால், எப்படி நடத்துவாங்கனு சொல்லணுமா? ஆனால், நாங்க எதை நினைச்சும் வருத்தப்படறதில்லை'' என மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் சேர்ந்த குரலில் சொல்கிறார்கள் நம்பிக்கை மனுஷிகள். 

பார்வையில்லா நம்பிக்கை மனுஷிகள்

சென்னை மாநிலக் கல்லூரியின் இரண்டாமாண்டு இளங்கலை மாணவி, மணிமேகலை. குயின் மேரிஸ் கல்லூரி மாணவிகள், வித்யா மற்றும் ஜெயலட்சுமி. ஞானோதயா பவுண்டேசன் மூலம் பள்ளி இறுதி படிப்பவர் மேகலா. அரசு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற இவர்களை, திருச்சி மாவட்ட நிர்வாகம் நேரில் அழைத்து, தலா 40,000 ரூபாய் வரை பரிசுத்தொகை வழங்கிப் பாராட்டியிருக்கிறது.

மணிமேகலை நம்பிக்கை மனுஷிஜெயலட்சுமி நம்பிக்கை மனுஷி

“என் சொந்த ஊர் சேலம். எங்க வீட்டுல மூணு பொண்ணுங்க. அம்மா கூலி வேலை செய்றாங்க. எட்டாம் வகுப்பு வரை சொந்த ஊர்ல படிச்சேன். அப்புறம், திருச்சி பார்வையற்றோர் பள்ளியில் படிச்சு, பன்னிரண்டாம் வகுப்பில் 1040 மார்க் எடுத்தேன். இப்போ, சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். திருச்சி கலெக்டர் ராசாமணி அவர்கள், எங்களுக்கு கொடுத்திருக்கும் இந்தப் பரிசையும் பாராட்டையும் மறக்கவே மாட்டேன். இவ்வளவு பெரிய தொகையை நான் வாழ்நாளில் தொட்டுப் பார்த்ததில்லை. நான் திருச்சியில் படிச்சுட்டிருந்தப்போ, என் அம்மா அடிக்கடி வந்துப் பார்ப்பாங்க. இப்போ, சென்னைக்கு வர அதிகம் செலவாகுதுனு எப்பவாவது ஒருமுறை வந்துப்போவாங்க. அவங்க கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு படிச்சுட்டிருக்கேன். இந்தப் படிப்பு என்னை உயர்த்தும்னு உறுதியா நம்புறேன். நல்லாப் படிச்சு கலெக்டர் ஆகணும். அம்மாவை நல்லா கவனிச்சுக்கணும். என்னை மாதிரி கஷ்டப்படறவங்களுக்கு உதவணும்'' என்கிறார் மணிமேகலா. 

தர்மபுரியைச் சேர்ந்த ஜெயலெட்சுமி, “எங்க ஊர் பக்கம் எல்லாம் பெண் பிள்ளைகளை அதிகம் படிக்கவைக்க மாட்டாங்க. ஆனாலும், பார்வையில்லாத என்னைப் பெரிய படிப்பு படிக்கவைக்கணும்னு அப்பாவும் அம்மாவும் நினைச்சாங்க. தர்மபுரியிலும் அப்புறம் திருச்சியிலும் படிச்சேன். பன்னிரண்டாம் வகுப்பில் 1020 மார்க் எடுத்தேன். சென்னை குயின் மேரிஸ் கல்லூரில் சீட் கிடைச்சது. சமீபத்துல என் அப்பா உடம்புக்கு முடியாமல் இறந்துட்டார். அதில், எங்க குடும்பமே நொடிஞ்சுப் போச்சு. நல்லாப் படிச்சு நல்ல வேலைக்குப்போய் நான்தான் குடும்பத்தைக் காப்பாற்றணும். இந்தப் பரிசு எனக்கும் குடும்பத்துக்கும் பெரிய உதவியா இருக்கு. அதுக்காக நன்றி'' என்று நெகிழ்கிறார். 

நம்பிக்கை மனுஷிகள்

“ஒவ்வொருத்தருக்கும் வழிகாட்டிகள் இருப்பாங்க. எங்களுக்கு நிறைய பேர் இருக்காங்க. திருச்சி பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர், எங்கள் கல்லூரிப் பேராசிரியர்கள், பெற்றோர் என எங்களுக்குப் பார்வையாக இருக்கும் எல்லோருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிச்சுக்கிறோம். பார்வையில்லைன்னா என்ன சார்... படிப்பு இருக்கு. நிச்சயம் நாங்க வாழந்து காட்டுவோம். எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் செஞ்ச நன்றியை மறக்கக்கூடாதுனு சொல்வாங்க. எங்களை இந்த உயரத்துக்கு கொண்டுவந்தவங்களுக்கு உண்மையாக இருப்போம். நாங்க நல்ல நிலைக்கு வந்ததும் மத்தவங்களுக்கு உதவுவோம்” என்றார்கள் மேகலாவும் வித்யாவும். 

பார்வையற்ற அவர்களின் முகத்தில் ஒளிரும் நம்பிக்கை, பார்ப்போரையும் தொற்றிக்கொள்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்