Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சேரி பிஹேவியர்'... காயத்ரி ரகுராம் அவர்களே சேரி என்றால் கேவலமா?

சேரி என்றால் சேர்ந்து வாழும் இடம் என்று பொருள். ஆனால், சேர்ந்து வாழ்வதற்காகக் குறிப்பிடப்பட்ட இடத்தையே பிரித்துப் பார்ப்பதற்கான இடமாக மாற்றியது நம் தமிழ்ச் சமூக அவலம். காலப்போக்கில் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே வாழும் இடமாக 'சேரி' என்ற சொல் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால், ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுமங்களைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து வாழும் இடத்தைக் குறிக்க பார்ப்பனச் சேரி, இடையச்சேரி போன்ற வார்த்தைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு வணிகர்களான யவனர்கள் வாழ்ந்த இடம் யவனச்சேரி என்றழைக்கப்பட்டது என்பதை அறியும்போது, 'சேரி' என்பது சேர்ந்து வாழுமிடத்தைத்தான் குறிக்கிறது என்பதை உணரலாம்.

 

ஆனால், தமிழ்ச் சமூகத்தில் தீண்டாமையும் சாதியமும் ஆழமாக வேரூன்றிய பிறகு ஊர், சேரி என்ற இரண்டு வகைப் பிரிவினைகளும் சேரியில் வாழ்பவர்கள் இழிவானர்கள் என்ற பிம்பமும் கட்டமைக்கப்பட்டன. நமது தமிழ் சினிமாக்களும் சேரிகளில் வாழ்பவர்களைக் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களாகவே தொடர்ச்சியாகச் சித்தரித்துவந்திருக்கின்றன. இத்தகைய மனப்போக்கின் விளைவை இப்போது 'பிக்பாஸ்' நிகழ்ச்சியிலும் பார்க்கிறோம். 

ஜூலி, பரணி என்று தொடர்ச்சியாக இலக்குவைத்துப் பாய்ந்த வெறுப்பு இப்போது ஓவியா மீது பாய்ந்திருக்கிறது. ஓவியாவைப் பற்றி காயத்ரி ரகுராமும் சினேகனும் புறம் பேசும் விளம்பரம் ஒன்று ஒளிபரப்பாகிறது. வெறுப்புடன் வாயைச் சுளித்தபடி "ஓவியா விஷம்" என்கிறார் காயத்ரி. "தினமும் கேமரா முன்னால் போய் நடிக்கிறார் ஓவியா" என்கிறார் சினேகன். அடுத்தபடியாக காயத்ரி ரகுராம் "சேரி பிஹேவியர்" என்று ஓவியாவைக் குறிப்பிடுவது அதிர்ச்சியளிக்கிறது.

'பிக்பாஸ்' ஒளிபரப்பப்பட்ட முதல்நாளில் இருந்தே மனித மனத்தின் வக்கிரத்தைக் கடைவிரிக்கிறது. பிக்பாஸ் போட்டியாளர்களில் சினேகன், கஞ்சா கருப்பு, வையாபுரி, ஆர்த்தி, நமீதா என கணிசமானவர்கள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். காயத்ரி ரகுராம் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர். சென்ற சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் நிற்பதற்காக பா.ஜ.க-வில் மனுப்போட்டவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு அதன் மூலம் புகழ்பெற்ற ஜூலியின்மீதான இவர்களின் வெறுப்பு கட்சிச் சார்பானதோ என்ற ஐயமும் பார்வையாளர்களுக்கு எழுகிறது.

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் மோடி, சசிகலா, அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைக் கடுமையாக விமர்சித்தது. இந்த வெறுப்பை அவ்வப்போது காயத்ரியும் ஆர்த்தியும் மறைமுகமாக வெளிப்படுத்துகின்றனர். போட்டி ஆரம்பித்த சில நாள்களிலேயே "ஜல்லிக்கட்டுக்காகத்தான் போராட்டம்னா அதுக்காகத்தான் போராடணும்" என்று காயத்ரி ஜூலியிடம் சொன்னதன் அர்த்தம், 'ஏன் ஆட்சியாளர்களை எதிர்த்து முழக்கமிடுகிறீர்கள்?' என்பதுதான். "அவங்ககிட்டதானே கேக்கணும்" என்று சங்கடத்துடன் ஜூலி பதிலளித்தபோது ஆர்த்தி சொன்ன பதில் அதிர்ச்சியின் உச்சம். "சாமிகிட்ட பவ்யமாத்தான் கேக்கணும்" என்றார் ஆர்த்தி. அதாவது, நாம் ஓட்டுப்போட்டு அனுப்பிய மோடியும் நாம் முதல்வராகவே தேர்ந்தெடுக்காத பன்னீர்செல்வமும் அதிகார நிழலான சசிகலாவும் நமக்குத் தெய்வங்களாம். மக்கள் தங்கள் உரிமையைக் கேட்க அவர்களிடம் மண்டியிட வேண்டும் என்ற அடிமை அறிவுரையைத்தான் போதித்தார் ஆர்த்தி. இது அந்த உரையாடலோடு நிற்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் காயத்ரி ரகுராம், ஆர்த்தி ஆகியோர் வெறுப்பைக் கக்குகின்றனர்.

ஒவ்வொருநாளும் வக்கிரத்துக்கான இலக்கு மாறுகிறது. ஜூலி, அனுயா, பரணி என்று மனித வெறுப்பின் இலக்குகள் கேளிக்கைக்குரிய நுகர்பொருளாக மாற்றப்படுகின்றன. இதை கம்யூன் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பேசுகிறார் கமல்ஹாசன். கம்யூன் வாழ்க்கை என்பது குடும்பம் என்ற சின்ன அலகுக்குள் மாட்டாமல் மனிதர்கள் சேர்ந்து வாழும் ஒரு வாழ்வியல் பரிசோதனை முயற்சி. வேலைப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு ஆகியவைதான் அதன் அடிப்படைகள். ஆனால், 'பிக்பாஸ் வீட்டு'க்குள் நிகழ்வது கம்யூன் வாழ்க்கையில்லை, வக்கிரம் நிறைந்த அதிகாரப்போட்டிதான் அதன் அடித்தளமாக இருக்கிறது. 

பொதுவாகக் கலையும் கலைஞர்களும் பண்பாட்டு அடையாளங்கள். சமூகத்தின் ரசனையையும் மனநிலையையும் பண்பாட்டு மேன்மையையும் ஓரங்குலமாவது உயர்த்தும் கடமை கொண்டவர்கள் கலைஞர்கள். ஆனால், இந்தக் கலைஞர்களுக்குள் இவ்வளவு மன அழுக்குகள் இருக்கின்றன என்பதைத் தமிழ்ச் சமூகம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. இருக்கட்டும், இந்த நிகழ்ச்சியின் இயல்பே இப்படியாக இருக்கலாம். ஆனால், போகிறபோக்கில் 'சேரி பிஹேவியர்' என்ற வார்த்தையை வசையாக வீசிவிட்டுப்போவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

சிலநாள்களுக்குமுன், பரணி குளிக்கப்போயிருந்தபோது கஞ்சா கருப்புவை வீட்டைச் சுத்தம் செய்யச்சொல்லி அனுயாவிடம் சொல்லியிருந்தார். 'நீ என்ன எனக்கு வேலை சொல்வது?' என்று பரணியிடம் கஞ்சா கருப்பு எகிறியதையும் அவரைத் தாக்கப்போனதையும் பார்த்தோம். அப்போது கஞ்சா கருப்பு அனுயாவையும் பரணியையும் கெட்டவார்த்தையில் திட்டுவது பீப் ஓசையுடன்தான் ஒளிபரப்பட்டது. ஆனால், இப்போது காயத்ரி ரகுராம் சொல்லும் 'சேரி பிஹேவியர்' என்ற வார்த்தை எந்தத் தணிக்கையும் இல்லாமல் ஒளிபரப்பப்படுவது ஏன்?

இத்தகைய அதிகார ஆணவ மனநிலை அனைத்துத் தரப்பாலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close