வெளியிடப்பட்ட நேரம்: 22:05 (11/07/2017)

கடைசி தொடர்பு:13:33 (12/07/2017)

“ஜி.எஸ்.டி கவனிக்க மறந்த பிரச்னை இது” கரம்கோர்த்த தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள்!

தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர்

ந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத அளவுக்குத் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில்தான் மெழுகு தீப்பெட்டி தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கி வருகின்றன. இந்த இரு மாவட்டங்களில் இருந்துதான் இந்தியா முழுவதும் மெழுகு தீப்பெட்டிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் இயங்கிவந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட மெழுகு தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களின் நலனில் அக்கறைகொண்டு மத்திய அரசு, இந்த வரிமுறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்றுகோரி, இன்றுமுதல் (11-07-2017) காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் மெழுகு தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்ட மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தங்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். 

சங்கத்தின் செயலாளர் J.P பாலாஜி நம்மிடம் பேசியபோது, "ஜி.எஸ்.டி வரிமுறைக்குமுன் 6%, 17.5% என்ற விகிதங்களின் இருந்த வரியானது தற்போது 18  சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது முழுநேர இயந்திரத்தால் தீப்பெட்டி செய்யப்படும் தொழிற்சாலைகளுக்கான வரியாகும். மெழுகு தீப்பெட்டி தொழிற்சாலைகளில் முழுநேர இயந்திரம் என்பது தற்போதுவரை சாத்தியப்படாத செயலாளர் பாலாஜி ஒன்று. தமிழ்நாட்டைப்பொறுத்தவரை, மரக்குச்சியிலான தீப்பெட்டியும், மெழுகு தீப்பெட்டியும்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் முழுநேர இயந்திரப் பணிகள் என்பது மரக்குச்சி தீப்பெட்டி தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்ட பின்னர், என்னென்ன தீப்பெட்டி தொழிற்சாலைகள் எப்படி இயங்குகின்றன என்பதுகூட தெரியாமல் பொதுவானதொரு வரிமுறையை எல்லா தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் விதித்திருப்பது ஏற்கமுடியாதது. 

ஏற்கெனவே 6 சதவிகித வரி இருந்தது. இப்போது, நாங்கள் 12 சதவிகித வரி வேண்டுமானாலும் செலுத்தத் தயாராக உள்ளோம். ஆனால், முழுநேர இயந்திரத்தை பயன்படுத்தவே முடியாத ஒரு தொழிற்சாலையில், பாதி இயந்திர வேலை, பாதி மனிதர்களால் செய்யக்கூடிய வேலை மேற்கொள்ளப்படும் நிலையில், ஏற்கெனவே இருந்த வரியைக் காட்டிலும் 200 சதவிகிதம் கூடுதல் வரியை விதித்தால் இந்தத் தொழிலை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை மூன்றுவிதமான கட்டமைப்புடன் இயங்கிவருகின்றன. அதாவது வரி (TAX), தொழில்முறை (PROCESS) மற்றும் தொழில்நுட்பம் (TECHNOLOGY) என்பதாகும். அதன்படி, எங்கள் தொழில்முறை என்ன?, இங்கிருக்கும் தொழிற்சாலைகள் எப்படி இயங்குகின்றன? என்று தெரியாமலேயே ஜி.எஸ்.டி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாக்ஸ் ஃபிரேமிங் வேலைகளைக் கையால் மட்டுமே மேற்கொள்ள முடியும். இந்தவேலையைச் செய்பவர்கள் அனைவருமே பெண்கள்தான். இந்த வேலையை இயந்திரத்தால் செய்வது என்பது மெழுகு தீப்பெட்டி முறையில் சாத்தியப்படாத ஒன்று. நாங்கள் வரி செலுத்தமாட்டோம் என்று சொல்லவில்லை. புதிய வரி விகிதத்தால், நஷ்டம் ஏற்பட்டு தொழிற்சாலைகளை மூடப்படும் நிலைமை ஏற்பட்டு விடும். அப்படி ஒரு நிலை உருவானால், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுவதுடன், ஆண்டுக்கு 200 கோடி ரூபாய்க்குமேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். 

மெழுகு தீக்குச்சி

இது சம்பந்தமாக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினாரான அன்புமணி ராமதாஸிடம் தெரிவித்துள்ளோம். எங்களின் கோரிக்கை நியாயமாக இருப்பதால், அவரும் முழு ஆதரவு தெரிவித்தார். மத்திய-மாநில அரசுகளுக்கும் கோரிக்கைகள் வைத்துள்ளோம். நாங்கள் கேட்பது "வரி வேண்டாம் என்பதல்ல... வரியில் சில மாற்றங்கள் வேண்டும்" என்பது மட்டுமே. எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி இன்றுமுதல் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து மெழுகு தீப்பெட்டி தொழிற்சாலைகளும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளன" என்றார்.

தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, அவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய-மாநில அரசுகள் செவிசாய்க்குமா?