கொங்கு மண்டல லாபி! தேதியை மாற்றிய திவாகரன்

திவாகரன் - நடராஜன்

 

திவாகரன் ஏற்பாட்டில் மன்னார்குடியில் நடைபெற இருந்த எம்.ஜி.ஆர். நுாற்றாண்டுவிழா கூட்டம் திடீர் என தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருப்பது அ.தி.மு.க.வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதிக்குப் பிறகு பாருங்கள்" என்று தன்னைச் சந்திக்கவரும் ஆதரவாளர்களிடம் நம்பிக்கையோடு சொல்லிவருகிறார் டி.டி.வி. தினகரன். “ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு ஆகஸ்ட் மாதம் அ.தி.மு.க-வில் பல மாற்றங்கள் நடைபெறும்” என பன்னீர்செல்வம் தரப்பு சொல்லிவருகிறார்கள். இந்த நிலையில்தான் ஜூலை 15-ம் தேதி மன்னார்குடியில் நடைபெற இருந்த எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழா கூட்டத்தை ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்றி அதிரடி காட்டியுள்ளார் சசிகலாவின் தம்பி திவாகரன். 

மாவட்டந்தோறும் பன்னீர்செல்வம் நடத்தும் பொதுக்கூட்டத்தை முறியடிக்கவும், 'நான்தான் அ.தி.மு.க-வில் அதிகாரம் செலுத்தும் நபர்' என தினகரன் சொல்லிவருவதைத் தடுக்கவும், மன்னார்குடியில் பிரமாண்ட அளவில் எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழாவினை நடத்த திவாகரன் முடிவுசெய்து அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்துவந்தன. திவாகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், டெல்டா பகுதியைச் சேர்ந்த ஓ.எஸ்.மணியன், காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்களும் விழாவை நடத்துவதில் தீவிரம் காட்டிவந்தனர். அ.தி.மு.க-வில் செல்வாக்கு தினகரனுக்கா?,? திவாகரனுக்கா? என்ற போட்டிக்கு இந்த விழாவின் மூலம் பதிலடி கொடுக்கத் தயாராகி வந்தது திவாகரன்தரப்பு.

ஆட்சிக்கு எதிராக தினகரன் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிடுவார் என்று கருதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மன்னார்குடியில் திவாகரன் நடத்தும் நுாற்றாண்டு விழாவிற்கு தனது ஆதரவையும் மறைமுகமாக தெரிவித்திருந்தார். திவாகரன் தரப்பும், முதல்வர் பழனிசாமியை இந்த விழாவில் கலந்துகொள்ள வைக்கும் திட்டத்தில் இருந்தது. நுாற்றாண்டு விழா அரங்கில் வைக்கப்பட இருந்த பேனர்களில் திவாகரன் படத்தோடு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி படமும் போட முடிவாகியது. அதற்கான மாடல்களும் ஓ.கே-வாகியிருந்தது. இந்நிலையில்தான் இந்த விழா திடீரென்று ஆகஸ்ட் மாத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வின் அடுத்த அதிகாரசக்தியாக யார் இருக்கப்போகிறார்கள் என்று மன்னார்குடி உறவுகளில் எழுந்த போட்டிக்கு முடிவுரை எழுதும் முடிவுக்கு திவாகரன் வந்துவிட்டார். ஏற்கெனவே, முதல்வர் பழனிசாமி தரப்பு திவாகரனுடன் இணக்கமாகத்தான் இருக்கிறது. தினகரன் தரப்பில் மன்னார்குடியில் கூட்டம்போட இருந்தார்கள். திவாகரனை பகைத்துக் கொண்டு மன்னார்குடியில் கூட்டம்போடுவது சாத்தியப்படாது என்பதை உணர்ந்து, தினகரன் அந்த திட்டத்தைக் கைவிட்டுவிட்டார். நடராஜனும் மன்னார்குடியில் தினகரன் கூட்டம் நடத்துவது அவருக்கு நல்லதல்ல என்ற ரீதியில் கருத்து சொல்லியிருந்தாராம்.இந்த நிலையில் திவாகரன் நடத்தும் கூட்டத்தில் பெரும்பாலான அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்ற சொல்லபட்ட, சில அமைச்சர்கள் இதற்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளார்கள். இந்தத் தகவல் திவாகரன் காதுக்குச் சென்றபிறகு "அனைவரையும் ஒருங்கிணைத்துத்தான் இந்தக் கூட்டத்தை நடத்துவேன்; இல்லை என்றால் கூட்டமே வேண்டாம்" என்று சொல்லியுள்ளார். அதன் தொடர்ச்சியாக முக்கிய அமைச்சர்கள் சிலர் ஆலோசனை செய்துள்ளனர். "தினகரனின் போக்கிற்கு முட்டுகட்டை போடவும், ஆட்சியைத் தக்கவைக்கவும் திவாகரன்தரப்புடன் இணைந்து போகலாம் என்று முடிவு செய்துள்ளார்கள்” என்கிறார்கள் அ.தி.மு.க.வில் மன்னார்குடிக்கு நெருக்கமான நிர்வாகிகள். 

ஜெயானந்த் ப்ளக்ஸ்

இதைத்தாண்டி வலுவான காரணம் ஒன்றையும் அமைச்சர்கள் தரப்பில் சொல்கிறார்கள். "சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் முடிந்தபிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையின்பேரில், முக்கிய அமைச்சர்கள் சிலர் பெங்களூரு சென்று சசிகலாவைச் சந்திக்க உள்ளார்கள். அந்த சந்திப்பிற்குப் பிறகு அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் ஒருங்கிணைக்கும் வேலைகள் நடைபெற உள்ளதாம். தினகரன் தரப்பையும் சமாதானம்செய்யும் முயற்சியிலும் ஈடுபட உள்ளார்கள். இந்தச் சந்திப்பு முடிந்தபிறகே மன்னார்குடியில் திவாகரன் நடத்தப்போகும் எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழாவில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் பங்கேற்க வைக்க திட்டமிடுகிறார்கள். இப்போது செய்துள்ள விழா ஏற்பாடுகளைவிட அடுத்த மாதம் இன்னும் பிரமாண்டமாக விழாவினை நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளார்கள்.ஒட்டுமொத்த கொங்குமண்டல அ.தி.மு.க.வையும் தன் பின்னால் அணிதிரள வைப்பதற்கான ஏற்பாடுகளை தான் இப்போது திவாகரன் செய்துவருகிறார். அவர்களை ஒருங்கிணைத்த பிறகுதான் விழா தேதி அறிவிப்பார்”என்கிறார்கள்.

திவாகரன் மகன் ஜெயானந்தும், "ஆகஸ்ட் மாதம் இன்னும் பிரமாண்டமாக இந்த விழா மன்னார்குடியில் நடைபெறும்" என்று அறிவித்துள்ளார். ஆனால், ஆக்ஸ்ட் மாதம் முதல்வாரத்திலே எங்கள் கவுண்டவுன் ஆரம்பித்துவிடும் என்று காய்நகர்த்த துவங்கியுள்ளனர் தினகரன் தரப்பினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!