வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (12/07/2017)

கடைசி தொடர்பு:10:11 (12/07/2017)

‘பாபநாசம்’ பட பாணியில் அமெரிக்கக் குடியுரிமைப் பொறியாளர் தூத்துக்குடியில் கொலை..!

தூத்துக்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒருவரைக் கொலைசெய்து காருடன் தண்ணீருக்குள் மூழ்கவைத்த குற்றவாளியைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கல்குவாரியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் இருந்த காரையும் உடலையும் கிரேன் உதவியுடன் போலீஸார் மீட்டனர். 'பாபநாசம்' திரைப்படத்தில் வரும் காட்சியை நினைவூட்டுவதாக இந்தச்சம்பவம் அமைந்துள்ளது.

தூத்துக்குடி ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். கணினி இன்ஜினீயரான இவர், அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். அங்கேயே நீண்டகாலம் வேலைசெய்ததால் அந்தநாட்டின் குடியுரிமைக்கான கிரீன்கார்டு பெற்றிருந்தார். இவரது மனைவி முத்துச்செல்வி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். குழந்தைகளின் கல்விக்காக முத்துச்செல்வி அமெரிக்காவுக்குச் செல்லாமல் இங்கேயே தங்கி இருந்தார்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடி வந்த முத்துக்கிருஷ்ணனுக்கு  மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவி அளித்த புகாரின்பேரில் முத்துக்கிருஷ்ணனை போலீஸார் கைது செய்தனர். அதனை எதிர்த்து அவர் மனைவி மீதும் போலீஸார் மீதும் வழக்குத் தொடர்ந்தார். அத்துடன் மனைவி முத்துச்செல்வியிடம் இருந்து விவாகரத்துகோரியும் வழக்குத் தொடர்ந்தார். அதற்காக, பாளையங்கோட்டையில் உள்ள வழக்கறிஞர் ஒருவரின் உதவியை நாடினார். மேலும், தானே வழக்கறிஞர் படிப்பிலும் சேர்ந்து படித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், வழக்கு தொடர்பாக வழக்கறிஞரின் அலுவலகத்துக்கு அடிக்கடி சென்றுவந்தபோது, அங்கு பணியாற்றிய பாண்டி துரைச்சி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பாண்டி துரைச்சிக்கு ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவருடன் ஏற்கெனவே தொடர்பு இருந்துள்ளது. இதற்கிடையே, முத்துக்கிருஷ்ணன் வெளிநாட்டில் இருந்ததால் அவரை ஏமாற்றி பாண்டி துரைச்சி பணம் பறித்து வந்துள்ளார். ராஜகோபாலுடன் பாண்டி துரைச்சிக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்ததும் முத்துக்கிருஷ்ணன் கோபம் அடைந்துள்ளார். இந்தச் சூழலில்தான், முத்துக்கிருஷ்ணன் திடீரென்று காணாமல் போய் விட்டார். 

இதுகுறித்து அவரது தாயார் அம்மு, தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் மே 25-ம் தேதி புகார் அளித்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். போலீஸார் முத்துக்கிருஷ்ணனைத் தேடி வந்தனர். இந்தநிலையில், அவர் கொலைசெய்யப்பட்டதாக 50 நாள்களுக்குப் பிறகு போலீஸார் கண்டுபிடித்து அவரின் உடலையும் கைப்பற்றி இருக்கிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, "முத்துக்கிருஷ்ணனின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தொடர்பாக, தீவிர விசாரணை நடத்தினோம். அவரது செல்போன் எண்ணை ஆய்வுசெய்தோம். அவர் யார் யாருடன் அதிகநேரம் பேசி இருக்கிறார் என்பதை ஆய்வுசெய்தபோது, பாண்டி துரைச்சி நம்பரைக் கண்டுபிடித்தோம். உடனே அவரைக் கண்காணித்தோம். இந்தச்சமயத்தில், முத்துக்கிருஷ்ணன் காணாமல் போவதற்கு முன்பாக ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்ற டிரைவரிடம் கடைசியாகப் பேசியதைக் கண்டுபிடித்தோம். அவர் காணாமல் போனதற்குப் பின்னர், அவருடைய ஏ.டி.எம். கார்டில் இருந்து பாளையங்கோட்டையில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. அந்த மையத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, முகத்தை மூடியபடி ஒரு இளைஞர் பணம் எடுப்பது தெரியவந்தது. அந்த உருவம் டிரைவர் ராஜகோபால் என்பது தெரியவந்ததால், அவரைப் பிடித்து விசாரித்தோம். நடந்த விவரங்களை எல்லாம் அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார்" என்று போலீஸார் தெரிவித்தனர்.

ராஜகோபால் அளித்த வாக்குமூலத்தில், "பாண்டி துரைச்சிக்கும், எனக்கும் இருந்த உறவு முத்துக்கிருஷ்ணனுக்குத் தெரியவந்ததால், இருவரையும் அவர் மிரட்டினார். நாங்கள் அவரை ஏமாற்றி பணம் பறித்துவிட்டதாகக் கூறியதுடன், அதை எல்லாம் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று பாண்டி துரைச்சியிடம் கூறினார். அவர் உயிரோடு இருந்தால் நாங்கள் அவரை ஏமாற்றிப் பெற்ற பணத்தைத் திருப்பிக் கேட்பார் என்பதால், அவரைக் கொலைசெய்யத் திட்டமிட்டோம். சம்பவத்தன்று அவரை காரில் வரவழைத்தோம். எனது நண்பர்கள் இசக்கிமுத்து, சிவா, சுரேஷ் ஆகியோர் உதவியுடன் அடித்துக்கொலை செய்தோம். பின்னர் உடலைப் புதைக்கத் திட்டமிட்டோம். கார் இருந்ததால் அதை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது.

கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்தின் காட்சிகளைப் போன்று, காருடன் முத்துக்கிருஷ்ணனின் உடலையும் கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீருக்குள் தள்ளி விடத் திட்டமிட்டோம். அதற்கான இடமாக பாப்பான்குளத்தில் இருந்த கைவிடப்பட்ட கல் குவாரியைத் தேர்வுசெய்து அங்கே வண்டியுடன் சேர்த்து மூழ்கடித்தோம். அவருடைய ஏ.டி.எம் அட்டையின் பாஸ்வேர்ட் பாண்டி துரைச்சிக்குத் தெரியும் என்பதால், அதில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டோம். யாரும் எங்களைக் கண்டுபிடிக்க முடியாது என நினைத்திருந்தோம். ஆனால், தற்போது மாட்டிக்கொண்டோம்" எனத் தெரிவித்தார். 

ராஜகோபாலுக்கு உதவிய இசக்கிமுத்து, சிவா, சுரேஷ் ஆகிய மூவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைத் தேடி வருவதாகவும், விரைவில் அனைவரும் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்தனர் காவல்துறையினர்.

இதனிடையே, முத்துக்கிருஷ்ணனின் உடலை காருடன் மூழ்கடித்த இடத்தை ராஜகோபால் போலீஸாருக்கு அடையாளம் காட்டினார்.

அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பொறியாளர் ஒருவரை சினிமா பாணியில் கொலைசெய்து உடலை மறைத்த சம்பவம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

அங்காடித் தெருவின் கதை தொடரைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்


டிரெண்டிங் @ விகடன்