Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”நாங்கதான் அவங்க, எங்களுக்குப் பதவிப் பிரமாணம் செஞ்சு வைங்க” புதுச்சேரி அட்ராசிட்டி!

மூன்று பா.ஜ.க. நிர்வாகிகள் எம்எல்ஏ-க்களாக நியமிக்கப்பட்ட விவகாரம் புதுச்சேரியில் பற்றியெரிந்துகொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் ஆதரவாளர்கள் மூன்று பேர், ”மத்திய அரசு பரிந்துரைத்தது எங்களைத்தான். அதனால் எங்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வையுங்கள்” என்று சொல்லி கலகலப்பூட்டியிருக்கிறார்கள்.

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த அரசின் பரிந்துரை இல்லாமல் பா.ஜ.க. நிர்வாகிகள் மூன்று பேரை எம்எல்ஏ-க்களாக நியமித்தது மத்திய உள்துறை அமைச்சகம். ஆட்சியாளர்களை அதிர வைத்த மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. இதையொட்டி கடந்த 8-ம் தேதி முழு அடைப்புப் போராட்டமும் நடைபெற்றது.

 

தற்போதைய சூழலில் புதுச்சேரி அரசும், அரசியலும் இந்த விவகாரத்தை மையப்படுத்தியே நடைபெறுகிறது. புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் தனியார் கல்வி தாளாளர் செல்வகணபதி ஆகியோரை புதுச்சேரி சட்டமன்றத்துக்கு எம்எல்ஏ-க்களாக நியமித்து கடந்த 3-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது உள்துறை அமைச்சகம். அதற்கான உத்தரவு நகலை ஆளுநர் மாளிகையில் பெற்றுக்கொண்ட இந்த மூவரும், மறுநாள் சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து தங்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி கூறினர். ஆனால் “மத்திய அரசு வெளியிட்டிருக்கும் இந்த உத்தரவில் மூன்று பேர்களின் பெயர்கள் மட்டுமே இருக்கின்றது. பெற்றோர்கள் பெயர், விலாசம் உள்ளிட்ட எந்த விவரமும் அதில் தெரிவிக்கப்படவில்லை. அதனால் பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அதன் பிறகுதான் அவர்கள் மூவருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ராஜ்நிவாசில் ரகசியமாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மத்திய அரசின் அந்தக் கடிதத்தில் பெயர் தவிர வேறு எந்த தகவல்களும் இடம்பெறவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், சாமிநாதன், சங்கர், செல்வகணபதி என்ற பெயரைக் கொண்ட காங்கிரஸ் ஆதரவாளர்கள் மூன்று பேர் சட்டமன்றச் செயலரிடம் கடிதம் ஒன்றை அளித்தனர். அந்தக் கடிதத்தில், “அய்யா வணக்கம், மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து புதுச்சேரி நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கான கடிதம் அனுப்பப்பட்டதாக தகவல் அறிந்தேன். சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய மூவரின் பெயர் இடம் பெற்றுள்ளதாக தகவல் அறிந்தேன். முதலில் இந்த பதவி ஒரு சில மதவாதிகளுக்கு வழங்கப்பட்டதாக அறிந்து அதனைக் கடுமையாக எதிர்த்து வந்தோம். இந்த நிலையில், மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட கடிதத்தில் பெயர் தவிர விலாசமோ, தகப்பனார் பெயரோ என எதுவுமே குறிப்பிடவில்லை என்ற தகவல் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக பொதுவாழ்வில் மக்கள் நலனுக்காக சமூக ஆர்வலனாக  சேவை ஆற்றி வருகிறேன். நான் இந்த மண்ணின் மைந்தன். எனது பெயர் சங்கர்.

புதுச்சேரி ஆளுநர் அவர்கள் நியமன சட்டமன்ற  உறுப்பினர்களை பரிந்துரைக்கவில்லை என்கிறார். மாநில அரசும் பரிந்துரை செய்யவில்லை என்கிறது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியதாக சட்டபேரவைத் தலைவரிடம் வழங்கப்பட்ட கடிதத்தில்  வெறும் பெயர் மட்டுமே குறிப்பிட்டு இருப்பதால், 30 ஆண்டுகாலமாக மக்கள் நலனுக்காக சமூக அரும்பணியாற்றி வருவதைக் கருத்தில் கொண்டு எனக்கு வழங்கபட்டு இருக்குமோ என்று எனக்கு எழுந்த சந்தேகத்தை தெளிவுபடுத்திய பிறகு, அறிவித்த நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி எனக்காக இருந்தால் பதவியேற்பு விழாவிற்கு என்னை அழைக்கும்படி கேட்டுகொள்கிறேன். ஜனநாயக உரிமைப்படி என்னுடைய சந்தேகம் தீர்க்காமல் சட்டமன்றத்தில் எனது பெயரில் பதவியேற்ற நபரை அனுமதிக்கவோ அதிகாரம் வழங்கவோ கூடாது என கேட்டு கொள்கிறேன்” என்று கூறியிருக்கின்றனர்.

”இந்த நிகழ்வை கலகலப்பானதாக மட்டுமே கடந்து சென்றுவிடக்கூடாது. எம்எல்ஏ-க்களாக நியமனம் செய்யப்படவர்கள் வழங்கியக் கடிதத்தில் போதிய விவரங்கள் இல்லை என்றாலும் அவை மத்திய உள்துறை அமைச்சகம், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலர் போன்றவர்களிடம் இருந்து பெறப்பட்டது. கடிதம் குறித்த கூடுதல் தகவல்கள் தேவையென்றால் தலைமைச் செயலர் மூலம் மத்திய அரசிடம் கேட்டுப் பெற்றிருக்கலாம். ஆனால், யாரோ சிலர் விளம்பர நோக்கத்துக்காகவும் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிப்பதற்காகவும் சட்டமன்றத்திற்குள் வந்து சட்டமன்றச் செயலரிடம் கடிதம் கொடுப்பது மக்கள் மன்றத்தைக் கொச்சைப்படுத்தும் செயல். சட்டமன்றச் செயலரும் அதை வாங்கியது தவறான முன்னுதாரணம்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close