Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘நானே கறி வெட்டறேன்.. இல்லை கைய வெட்டிகிட்டா பிச்சையாவது போடுவாங்க!’ - ‘புழுதிப்பட்டி’ ஜாகிர் உசேனின் நெகிழ்ச்சிக் கதை

‘இரண்டு கண்களும் நன்றாகத் தெரிந்தவர்கள், எடையைக் குறைத்துப் போட்டு தில்லுமுல்லு வேலைகளைத் தெளிவாகவே செய்துவருகிறார்கள். ஆனால், இரண்டு கண்களுமே தெரியாத ஒருவர், வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுக்கு துல்லியமாக எடைபோட்டு கொடுக்கிறார். வாடிக்கையாளர்களும் இவர் கடையைத் தேடி வருகிறார்கள்' என்கிற தகவல் கிடைக்க, புழுதிப்பட்டி கிராமத்துக்குப் பயணமானோம். எங்கிருக்கிறது புழுதிப்பட்டி..?

zakir hussain

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா புழுதிப்பட்டி கிராமம், மதுரை டு திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அங்கு இறங்கி `ஜாகீர் உசேன் கோழிக்கடை' எனக் கேட்டால் எல்லோருக்கும் தெரிகிறது. ஊரார் சொல்லும் அடையாளம் சத்திரம் ஏரியாவில் ராயல் கோழிக்கடை இந்த அடையாளத்தை வைத்து ஜாகீர் உசேன் கோழிக்கடைக்குச் சென்றோம். ரத்தக்கறை படிந்த சட்டையை அணிந்திருந்தார் ஜாகீர் உசேன். வாடிக்கையாளர்கள் `ஜாகீர் அண்ணே... ஒரு கிலோ கறி. நல்ல பீஸா போட்டுக்கொடுங்க.“விழித்திரைக்கு ஆண்டவன் திரைபோட்டாலும் தன்னம்பிக்கையோடு கோழியை அறுத்து முடிகளை சுத்தம் செய்து அதில் உள்ள கழிவுகளை அகற்றி வாடிக்கையாளர் கேட்டபடி சரியான எடையில் கறியைக் கொடுக்கிறார் ஜாகீர். விழித்திரையை மூடிய ஆண்டவன், மனத்திரையை திறந்துதான் வைத்திருக்கிறார். அரைக் கிலோ ஒரு கிலோ படிக்கற்களைத் தடவிப் பார்க்கிறார். அதன் பிறகு, அவர் கையில் இருக்கும் தராசு முள்ளைவைத்து எடையைக் கணிக்கிறார். வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான கறியை கவரில் போடும் வரை அவரே அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கிறார். பணம் வாங்கும்போது 10, 20, 50, 100, 500, 2,000 ரூபாய் தாள்களை நம்மைவிட தெளிவாகக் கண்டுபிடிக்கிறார். அதேபோல் சரியான சில்லறையும் கொடுத்துவருகிறார். இதையெல்லாம் ரூபாய்களின் அளவை வைத்தே கணக்கிடுகிறார் ஜாகீர் உசேன்.

ஜாகீர் உசேன்

“ஜாகீர் அண்ணே உங்களைப் பற்றிக் கேள்விபட்டோம். அதான் வந்தோம். பரவாயில்லை, ஆண்டவன் உங்களுக்கு நிறையவே தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்'' என்று அவருடன்  பேச ஆரம்பித்தோம். ஜாகீரும் பேசத் தொடங்கினார்....

“சார், என்னோட சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள காமன்கோட்டை கிராமம். எனக்கு பிறவிலேயே ரெண்டு கண்ணும் தெரியாது. ஹாஸ்பிட்டல்ல பார்த்தோம். அவுங்க கைவிரிச்சுட்டாங்க. எங்க ஊர்ல இருக்கிற அரசாங்கப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படிச்சேன். ஏழாம் வகுப்பு பரீட்சை எழுதும்போது தலைமையசிரியர் வந்து `நீ பரீட்சை எழுதக் கூடாது'னு சொன்னார். `சார், நான் ஜன்னல் ஓரத்துல உட்காந்தாவது எழுதறேன்’னு கெஞ்சினேன். `நீ படிச்சு என்னடா பண்ணபோற? போ வெளியே!'னு அனுப்பிட்டாரு. என்னோட வகுப்பு வாத்தியார் டே ஜாகிர் `வா, நான் உன்னைப் படிக்கவைக்கிறேன்'னு சொன்னார். ‘கண்ணு தெரியாதவன் நான் படிச்சு பாழாய்போறதவிட, ஆடு மேய்ச்சாவது ஆளா போயிக்கிறேன் சார்'னு சொல்லிட்டு வந்துட்டேன்.

அதுக்கு அப்புறம் நண்பர் ஒருத்தர் மூலமாக துவரங்குறிச்சி வந்தேன். அந்த நண்பரும் என்னைக் கைவிட்டுட்டார். வேற என்ன பண்றதுனு தெரியலை. நான் கையில இருந்த கொஞ்ச பணத்தை வெச்சு, சின்னதா கோழிப்பண்ணை ஆரம்பிச்சேன். அதுவும் கைக்கொடுக்கலை. துவரங்குறிச்சியில கோழிக்கடை போடுறதுக்குக் கடை கேட்டேன். யாருமே தரலை. அப்புறமா வேற ஒருத்தர் மூலமாக ஒரு கடையைப் பிடிச்சேன். 

ஜாகீர் உசேன்

அப்ப ஒரு கண்டிஷன் போட்டாங்க, `ஒரு கோழி வெட்டிக் கொடுத்தால், அஞ்சு ரூவா கொடுக்கணும்'. நானும் சரின்னு சொல்லிட்டேன். என் கடைக்கு ஆள் வந்து நின்னாலும், எனக்கு வெட்டிக் கொடுக்கிறவர் அவர் கடையில கோழி வெட்டிக் கொடுத்துட்டுதான் எனக்கு வெட்டி தருவார். இப்படியே போயிட்டிருந்துச்சு. எனக்கு லாபம் இல்லை. ஒருநாள் கஸ்டமர் வந்து ‘அரைக் கிலோ கறி குடுங்க'னு கேட்குறார். நானும் எனக்கு வெட்டிக்குடுக்கிறவரைக் கூப்பிடுறேன். இந்தா வர்றேன்னு சொல்றாரே தவிர, வரலை. கஸ்டமர் ரொம்ப நேரமா  நின்னுட்டு, ‘ஏம்ப்பா தர்றீயா இல்லையா?'னு கடுப்பா பேசினார். இருங்கனு சொல்லிட்டு நானே கோழியைப் பிடிச்சு வெட்டினேன். பக்கத்துக் கடையில இருந்தவங்க `டேய்... டேய்'னு கத்திட்டடாங்க. `பரவாயில்லைங்க. நான் வெட்டிக் கொடுத்து பணம் வாங்கிக்கிறேன்.. இல்லாட்டி என் கைய வெட்டிக்கிறேன். பிச்சையாவது போடுவாங்க'னு சொல்லிட்டு, கறியை வெட்டிக் கொடுத்தேன். அவ்வளவு சூப்பரா க்ளீன் செஞ்சு வெட்டிக் குடுத்தேன். ‘தொழில்காரன்கூட அப்படி செய்ய முடியாது'னு என்னைப் பெருமையா பேசினாங்க. அன்னிக்குப் பிடிச்ச கத்தியை இன்னிக்கு வரை வெக்கலை. முப்பது வருஷங்கள் ஓடிப்போச்சு. அந்த ஆளை, அல்லா அனுப்பிவெச்ச ஆளா நினைக்கிறேன். இன்னிக்கும்....

அரசாங்கம் எனக்கு உதவி செஞ்சாங்கனா நல்லா இருக்கும். என்னோட ரெண்டு பசங்களை நல்லா படிக்கவைப்பேன். எனக்குக் கிடைக்காத கல்வி, என் புள்ளைகளுக்குக் கிடைக்கணும்கிறதுதான் என் ஆசை. கடந்த நான்கு வருஷங்களா ஆதார் அட்டை எடுக்க முயல்கிறேன், அட்டைதான் வர மாட்டேங்கிறது. இதனால காஸ் மானியம் போச்சு, என்னோட பேங்க் அக்கவுன்ட் போச்சு, நான் வாங்கிட்டிருக்கிற உதவித்தொகையும் பறிபோகப்போகுது. இதுதான் நம்ம அரசாங்க நிலைமை'' என்கிறார் வேதனையோடு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close