Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''தீர்ப்பு சொல்லி 10 ஆண்டு ஆகியும் நீதி கிடைக்கவில்லை'' - காவிரி தீர்ப்பு கடந்து வந்த பாதை!

காவிரி நீர் மேட்டூர் அணை

காவிரி நதிநீர் பிரச்னையில் நடுவர்மன்றம் தீர்ப்பளித்து 10 ஆண்டுகள் ஆகியும் அதைச் செயல்படுத்தமுடியாத நிலை நீடித்துவருகிறது. இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயம் படிப்படியாகச் சுருங்கிவருகிறது. 

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் நடத்திய சட்டப்போராட்டங்களுக்குக் கர்நாடக, மத்திய அரசுகள் முட்டுக்கட்டை போடுவதால், காவிரி மேலாண்மைவாரியம் அமைப்பது தள்ளிக்கொண்டே போகிறது. 

நீண்டகாலமாக நடந்துவந்த காவிரி வழக்கில், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் வல்லுநர்கள் அளித்த வாக்குமூலங்கள், குறுக்குவிசாரணை, வாத-பிரதிவாதங்களை வைத்து, 5.2.2007 அன்று காவிரி நடுவர்மன்றம் இறுதி ஆணையைப் பிறப்பித்தது. அதைச் செயல்படுத்த காவிரி மேலாண்மைவாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கவேண்டும் என்றும் நடுவர் மன்றம் அறிவித்தது. 

ஆனால், நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக, கேரள அரசுகள் 2007 ஏப்ரலில் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல்செய்தன. இறுதித் தீர்ப்பில் உள்ள சில பகுதிகளை, மேலாய்வுசெய்யக் கோரி 2007 மே மாதம் சிறப்பு முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல்செய்தது. காவிரிப்படுகை பகுதிகளில் தொன்றுதொட்டு செய்யப்பட்டுவந்த குறுவைப்பயிர் பாசனப்பரப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டதை மீண்டும் அனுமதிக்கவும் மற்ற பழைய பாசனத்  திட்டங்களில் இரண்டாம் போக பாசனப்பரப்பு குறைக்கப்பட்டுள்ளதை மீண்டும் அனுமதிக்கவும், கூடுதல் நீர் ஒதுக்கவும்  தமிழக அரசு கோரிக்கை வைத்தது. 

எழுத்துபூர்வமான பதில்:

இதற்கு கர்நாடக அரசு  2.1.14 அன்று எழுத்துபூர்வமான பதிலைத் தாக்கல்செய்தது. தமிழக  அரசு 6.1.14 அன்றும் கேரள அரசு 6.1.16 அன்றும் தங்களின் பதிலைத் தாக்கல்செய்தன. 

இந்த மேல் முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது பற்றியே ஒரு விசாரணை நடத்தப்பட்டது. காவிரிப்படுகை மாநில அரசுள், 18.10.16 மற்றும் 19.10.16 அன்று தம் வாதங்களை எடுத்துரைத்தன. 9.12.16  அன்றுதான் இவை விசாரணைக்கு உகந்தவை என்று உச்சநீதிமன்றம் கூறியது. 

இவ்வழக்கு மீண்டும் கடந்த ஜனவரி 4-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கை கடந்த பிப்ரவரி 7 முதல் விசாரிக்கவும் எல்லா மாநிலங்களும் தங்களின் ஆரம்பகட்ட எழுத்துபூர்வ பதிலை அன்றைக்குள் தாக்கல்செய்யவும் வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அதன்படி பிப்ரவரியில் ஆரம்பகட்ட விவாதங்கள் நடந்து, இந்த மாதம் 11ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிவில் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரிக்கப்பட்டு, ஆணை வழங்கப்பட்ட பின்னரே, காவிரி நடுவர்மன்றத்தில் பிரிவு 5(3)-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் விசாரிக்கப்படும் என்று காவிரி நடுவர் மன்றம் கடந்த 10ஆம் தேதியன்று உத்தரவிட்டது. 

நடுவர் மன்றத் தலைவர் பதவிவிலகல்:

முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் மேல்முறையீட்டு மனுக்களுக்குக் குந்தகம் ஏதுமின்றி, காவிரி நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள விளக்கங்கள் கோரும் மனுக்களை விசாரிக்கத் தடையேதும் இல்லை எனத் தெளிவுபடுத்துமாறும் சம்பந்தபட்ட மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு, நடுவர் மன்ற இறுதி ஆணையின் மீது கேட்டுள்ள விளக்கம் கோரும் மனுக்களை காவிரி நடுவர் மன்றம் முடிவுக்குக் கொண்டுவர ஆணை பிறப்பிக்குமாறும் 1.9.11 அன்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு  ஓர் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனு 18.10.11 அன்று விசாரணைக்கு வந்தபோது இதை சிவில் மேல்முறையீட்டு மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கலாம் என ஆணையிடப்பட்டது. காவிரி நடுவர்மன்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும், பிரிவு 5(3)ன் கீழ் தாக்கல் செய்துள்ள மனுக்களை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி ஒரு பல்வகை மனுவைத் தமிழ்நாடு அரசு நடுவர் மன்றத்தில்  16.3.12 அன்று தாக்கல் செய்தது.  இம்மனுவை 2012 ஏப்ரலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஆணையிட்ட போதிலும் நடுவர் மன்றத்தின் தலைவர் உடல்நிலை காரணமாகப் பதவிவிலகியதால் இம்மனு மீது மேல்நடவடிக்கை எடுக்க இயலவில்லை. 

உச்சநீதிமன்றம்

பின்னர், நடுவர் மன்றம் அதன் 15.7.14 நாளிட்ட ஆணையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஒரு புதிய மனுவையோ அல்லது சிவில் மேல்முறையீட்டு மனு எண் 2453/2007-ல் ஏற்கெனவே தாக்கல்செய்துள்ள இடைக்கால மனுவை வலியுறுத்தியோ 1956-ம் ஆண்டு பன்மாநில நதிநீர் தாவா சட்டத்தின் பிரிவு 5(3)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுக்களை நடுவர் மன்றம் விசாரிக்கலாம் என்ற உரிய ஆணையை தமிழ்நாடு அரசு பெறுவது விரும்பத்தக்கது ஆகும் என ஆணையிட்டது. இந்த ஆணையின்படி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஓர் இடைக்கால மனுவை 21.7.14 அன்று தாக்கல்செய்தது. இந்த இடைக்கால மனு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

மத்திய அரசு பல்டி:

காவிரி நடுவர்மன்ற இறுதி ஆணை 19.3.13 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பின், நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின் பரிந்துரைப்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை உடனடியாக அமைக்கும்படி மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அதன் தொடர்ச்சியாகக் கடிதங்கள் மூலமும் பிரதமரிடமும் இவ்விரு அமைப்புகளை உடனடியாக அமைத்திட தமிழக அரசு சார்பில் தொடந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.  

பாசன ஆண்டு 2016-17ல் தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய உரிய நீரைக் கர்நாடகம் வழங்குவதற்காக உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட இடைக்கால மனு விசாரணைக்கு வந்தபோது, நடுவர் மன்ற இறுதி ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று 20.9.16 அன்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.  ஆனால், திடீரென்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்ற ஆணைகளை மாற்றி அமைக்கக் கோரி 3.10.16 அன்று மத்திய அரசு ஒரு மனுவைத் தாக்கல்செய்தது. இம்மனு 4.10.16 அன்று விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தள்ளிவைத்து ஆணையிட்டது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி உறுதி:

தமிழக சட்டமன்றத்தில் இதுபற்றி முதல்வரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ''காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க நடுவர் மன்றம் பரிந்துரைத்ததைத் தமிழக அரசு வலியுறுத்தும்" என்று சொன்னார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement