அரசின் அறிவிப்பு இவ்வளவுதானா? கொதிக்கும் எம்.ஜி.ஆர் பக்தர்கள்!

மதுரையில் பிரமாண்டமாக நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதில் முக்கியமான அறிவிப்பு, மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் வைக்கப்படும் என்பதாகும்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்

ஆனால், இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை, 'எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை இந்த அரசு கொண்டாடும் லட்சணம் இதுதான்' என்று எம்.ஜி.ஆர் பக்தர்கள் பேரவை என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இது சம்பந்தமாக இன்று மதுரை ஆட்சியரிடம் மனு கொடுத்த எம்.ஜி.ஆர் பக்தர்கள் பேரவையின் பொதுச் செயலாளர் கிருஷ்ணன், "மதுரையில் பெரியார், அண்ணா பெயர்களில் பேருந்து நிலையம் உள்ளது. ஆனால், எம்.ஜி.ஆர் பெயரில் இல்லை. மதுரைக்கும் எம்.ஜி.ஆருக்கும் நிறைய தொடர்பு உள்ளது. ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தில்தான் திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் முதன் முதலில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர் ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்றார். மாட்டுத்தாவணி பேருந்து  நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்க வேண்டுமென்று நீண்ட காலமாக நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம்.

ஆரம்பத்தில் எங்கள் கோரிக்கையை மதுரை மாநகராட்சி நிர்வாகம் நிராகரித்தது. அதன் பின்பு, 2013-ம் ஆண்டில் ராஜன் செல்லப்பா மேயராக இருக்கும்போது தீர்மானம் போட்டும் எம்.ஜி.ஆர் பெயரை வைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவித்தும் மாநகராட்சி அதிகாரிகள் மாட்டுத்தாவணி பேருந்து நிலைய பெயரை மாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்போதும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் என்றே அழைக்கப்படுகிறது. அரசு அறிவிக்கும் அறிவிப்பு அவ்வளவுதானா? எம்.ஜி.ஆர் பெயரை வைத்து அரசியல் செய்தவர்கள்தான் அவருக்கு துரோகம் செய்கிறார்கள் என்றால், இப்போது அதிகாரிகளும் துரோகம் செய்கிறார்கள். 

விரைவில் எம்.ஜி.ஆர் பெயரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு சூட்டவில்லையென்றால் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!