’11-ம் வகுப்பில் பொதுத்தேர்வு வேண்டாம்’... உயர் நீதிமன்றத்தில் மனு!

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அமைச்சர் செங்கோட்டையன் பல மாற்றங்களைத் தற்போது கொண்டுவந்துள்ளார். ’எதிர்வரும் காலங்களில் பள்ளி கல்வியில் புதிய மாற்றங்கள் எதிர்பார்க்கலாம், எல்லா வகுப்புகளிலும் பாடத்திட்டங்கள் மாறலாம்’ எனவும் தெரிவித்திருந்தார்.

sengotayan

இந்நிலையில் 11-ம் வகுப்பையும், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளைப்போல் அரசு பொதுத்தேர்வாக மாற்றியுள்ளார். சுமார் 37 ஆண்டுகளுக்குப் பின், 11-ம் வகுப்பு தேர்வு அரசு தேர்வாக மாறியுள்ளது. அதற்கு முன் 12-ம் வகுப்பு என்பதே இல்லாத சூழ்நிலையில்தான் இருந்துவந்துள்ளது. தற்போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்குப் பின், 11-ம் வகுப்பு தேர்வும் அரசுத் தேர்வாக மாறியுள்ளது.

இதற்கு எதிராக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், "தமிழக அரசு கடந்த மே மாதம் 22-ம் தேதி 11-ம் வகுப்புத் தேர்வும் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என அரசாணையை வெளியிட்டுள்ளது. இது அவசியமற்றது, 10-ம் வகுப்பில் அதிகமான மதிப்பெண்களைப் பெறுவதற்காக மாணவர்கள் உறக்கமின்றி கடினமாக உழைக்கின்றனர். அதற்காகத் தனியே டியூசனுக்கும் ஸ்பெஷல் கிளாசுக்கும் செல்கின்றனர். இதே போலவே 12-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண்களைப் பெற இரவு பகலாக கண் விழித்து உழைக்கின்றனர்.

இந்நிலையில், 11-ம் வகுப்பும் பொதுத்தேர்வு என்ற அரசாணையால் மாணவர்களும் அவரது பெற்றோர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவர். 10, 11, 12 ஆகிய 3 ஆண்டுகளும் பொதுத்தேர்வுகளுக்காக தூக்கமின்றி, கடினமாக உழைக்க வேண்டியிருப்பதால், மாணவர்கள் அதிக மன உளைச்சலுக்கும், விரக்தி நிலைக்கும் ஆளாவர். எனவே 11-ம் வகுப்பு தேர்வையும் பொதுத்தேர்வாக நடத்த வழிவகுக்கும் அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” என மனுவில்  கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போட்டிச்சூழல் அதிகமிருக்கும் நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக 11-ம் வகுப்பிலேயே 12-ம் வகுப்பு பாடத்தைத் படித்து மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் 11-ம் வகுப்பு பாடத்தையே படிக்காமல் கடந்து வருகின்றர். இதனால் அதிக  மதிப்பெண்களைப் பெற்றபோதிலும் உயர்கல்வி சென்றபின் மாணவர்கள், முதலாம் ஆண்டில் கஷ்டப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல தரப்பு வல்லுநர்களும் தெரிவித்தனர். அதனடிப்படையில், வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஆலோசித்து அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை ஜூலை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!