செந்தில் பாலாஜியின் பேச்சும்...துரைமுருகனின் சிலாகிப்பும்!

டப்பாடி பழனிசாமிக்கு எதிராக நெருக்கடி கொடுத்துவந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சட்டசபை பேச்சைக் குறிப்பிட்டு, தி.மு.க உறுப்பினர் துரைமுருகன் சிலாகித்ததுப் பேசியது, அ.தி.மு.க அமைச்சர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

துரைமுருகன் மற்றும் செந்தில் பாலாஜி

சட்டசபையில் இன்று வணிகவரித்துறை மீதான மானியக்கோரிக்கையின் குறித்து முதல்முறையாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கடந்த மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எட்டு எம்எல்ஏ-க்கள் துணையுடன் போர்க்கொடி துாக்கினார் செந்தில்பாலாஜி. தனக்கு அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியை இவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. டி.டி.வி.தினகரன் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, அவருக்கு ஆதரவாக அணி திரண்ட எம்எல்ஏ- க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவராக இருந்தார். செந்தில் பாலாஜியின் பேச்சு அவரது நிலையைத் தெளிவாக எடுத்துக்காட்டியது.

சட்டசபையில் செந்தில் பாலாஜியின் பேச்சு அ.தி.மு.க உறுப்பினர்கள் மட்டுமின்றி தி.மு.க உறுப்பினர்களாலும் உற்றுநோக்கப்பட்டது. செந்தில் பாலாஜியின் பேச்சின் துவக்கத்திலேயே ஜெயலலிதாவைப் பற்றி புகழ்ந்தவர், அடுத்து “தியாகத்தின் உருவம் சசிகலா” என்று சசிகலாவுக்கு புகழ்மாலை சூடினார். அதன்தொடர்ச்சியாக, 'கழகத்தை காக்க வந்தவர் தினகரன்' என்று அவரையும் புகழ்ந்தார். அதன்பிறகு மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி வரி குறித்து பேசியபோது “இந்த வரி விதிப்பினால் ஜவுளி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் கடுமையாகப் பாதிக்கபட்டுள்ளார்கள். உற்பத்தியாளர்கள், பணியாளர்கள் எனப் பலரும் இந்த வரி விதி்ப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜவுளி தொழிலிக்கு எதிராக இந்த வரி விதிப்பு உள்ளது” என்று ஜிஎஸ்டி வரிவிதிப்பின் காரணமாக ஜவுளி தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து பேசிக்கொண்டிருந்தார். செந்தில் பாலாஜியின் பேச்சுக்கு அமைச்சர்களும் குறுக்கீடு செய்யாமலே இருந்தனர். 

அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து “தமிழக அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி வரி விதிப்பின் பாதிப்புகளை அ.தி.மு.க உறுப்பினரே குற்றசாட்டாகச் சொல்லி, வெளுத்து வாங்குகிறார். அமைச்சர்கள் யாரும் இதற்குப் பதில் சொல்லமாட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். உடனே  அமைச்சர் வீரமணி, “ ஜிஎஸ்டி குறித்த பல்வேறு விளக்கங்களை நிதி அமைச்சர் கொடுத்துள்ளார். செந்தில் பாலாஜியின் கோரிக்கையைப் பரிசீலிப்போம்” என்று பதில் அளித்தார். அதன்பிறகு எழுந்து பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன்  “எதிர்க்கட்சி துணைத்தலைவர், செந்தில் பாலாஜி ஜவுளித் துறையில் ஜிஎஸ்டி வரியின் பாதிப்பைப் பற்றி வெளுத்துவாங்கினார் என்று பேசினார். ரொம்ப வெளுத்து வாங்கினால் நுால் அறுந்துவிடும். அதனால் அவருடைய கோரிக்கை கண்டிப்பாக பரிசீலனை செய்யப்படும்” என்று சிலேடையாகப் பதில் சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!