வெளியிடப்பட்ட நேரம்: 10:18 (13/07/2017)

கடைசி தொடர்பு:10:22 (13/07/2017)

காவலர் பதக்கம் முடங்கிய பின்னணி! கண்ணீர் விடும் தமிழக போலீசார்

 “சார், சி.எம் மெடல் ரெண்டு முறை வாங்கியிருக்கேன். பார்த்துப் பண்ணுங்க...'' என்று உயர்பதவிக்கான தேர்வின்போது கோரிக்கை வைக்கும் போலீசார் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. 'ஏன் நியாயமான, நேர்மையான போலீசார் இல்லையா?' என்று நீங்கள் கேள்வி கேட்கலாம்.... பதில் சொல்கிறேன். முதல்வர் விருதுக்கான தகுதி பெற்றிருந்தும் சுமார் 15 ஆயிரம் போலீசார் அந்த விருதைப் பெற முடியாமல்  இன்றுவரை காத்துக் கிடக்கின்றனர்.

Police

முதல்வர் விருதுக்காக காத்துக்கிடக்கும் 15 ஆயிரம் போலீசாரில் சிலரைத் தேடிப்பிடித்துப் பேசினோம். "போலீசில் வீரதீர சாகசங்களுக்காக அண்ணா பதக்கம், குடியரசுத்தலைவர் பதக்கம் என்றெல்லாம் மரியாதைகள் செய்வது உண்டு. மாநில அரசு குறிப்பிட்ட காவலர் மற்றும் காவல் அதிகாரிகளின் பெயரை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும். குடியரசுத் தலைவர் கைகளால் அந்த விருது வழங்கப்படும். இது போக, 'மெச்சத்தகுந்த பணிக்காக' என்ற பெயரில் மாநில முதல்வர்கள் மூலம் சிலருக்கு இரட்டிப்பு பதவி உயர்வும் கிடைக்கும். இதை 'ஆக்ஸிலேட்டட் புரமோட்' என்று அழைப்பார்கள். காவல் பணியில் பத்தாண்டுகள் வரையில் எந்தத் தண்டனையும் பெறாமல் பணியாற்றுவோருக்கு முதல்வர் விருது வழங்குவது நடைமுறையில் இருக்கிற ஒன்று. நாங்கள் 15 ஆயிரம் பேருக்கு மேல் காத்திருப்பது அப்படிப்பட்ட பதக்கத்துக்காகத்தான். இந்தப் பதக்கம் பெறுவது மூலம் சம்பளத்தில் மாதம் 300 ரூபாய் கூடும். எங்களின் 'சர்வீஸ்- புக்'கிலும் அது 'என்ட்ரி' செய்யப்படும். அடுத்தக்கட்ட பதவி உயர்வுக்கு வசதியாக இது கூடுதல் மார்க் பெற்றுத்தரும்.

முதல்வர் பதக்கத்தைக் குறிப்பிட்டக் காலத்துக்குள் வழங்காமல் தள்ளிப் போட்டுக்கொண்டே போனால், சம்மந்தப்பட்ட காவலருக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் என்ற பதவி உயர்வு வந்து, அந்த விருதைப் பெறமுடியாமல் தடுத்துவிடும். விருதின் பெயரே,  'முதல்வரின் காவலர் பதக்கம்' என்பதால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்  ஆன பிறகு அந்த விருதைப் பெறமுடியாது.கடந்த 1988-ம் ஆண்டு போலீசில் காவலராகப் பணியில் சேர்ந்து, பத்தாண்டுகள் வரையில்  எந்தத் தண்டனையும் பெறாமல் பணியாற்றிய பலர் இன்னமும்கூட இந்த விருதினை வாங்க முடியவில்லை. மேலும், அந்தக் காவலர்கள் தற்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்  பதவி வகிப்பதால், விருது பெறும் தகுதியையும் இழந்து விட்டார்கள்.

Police

போலீசாரின் பணிக்காலமான 35 ஆண்டு காலத்தில் முதல் 10 ஆண்டுகள் சிறப்பான பணியாற்றிய வகையில், அவர்களின் மாத சம்பளத்தில் 300 ரூபாய் சேரும். அதாவது 25 ஆண்டுகளுக்குத் இது தொடரும். அவர்களின் மொத்தப் பணிக்காலத்தில், இந்த வகையில் மட்டும் 90 ஆயிரம் ரூபாயை சாதாரணமாக இழக்கிறார்கள்.  இதுவே தலைமைக் காவலர் எனும்போது ஊக்கத்தொகை மேலும் ஆயிரம் ரூபாய் கூடுகிறது. இதை கணக்கில் வைத்து பணி ஓய்வு பெறும்போது அரசும் திரும்பக் கொடுப்பதில்லை" என்கிறார்கள். ஓய்வுபெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், "ஒரு காலத்தில் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில், சீனியாரிட்டி அடிப்படையில் எம்ப்ளாய்மென்ட் கார்டுகள் போகும். அதுபோல் இப்போதுதான் 1993-ம் ஆண்டில் போலீஸ் வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு முதல்வரின் காவலர் விருது கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஆண்டுக்கு 100 அல்லது 200 பேருக்கு இந்த விருதைக் கொடுக்கிறார்கள். அதே வேளையில் ஒவ்வோர் ஆண்டும் போலீஸ் வேலைக்கு ஆயிரக்கணக்கில் ஆள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். போலீசிலிருந்து நான் ஓய்வு பெற்றே ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் அந்த விருதைக் கண்ணால்கூடப் பார்க்கவில்லை. ஆட்சியாளர்கள், தீர்மானித்துக் கொடுக்கிற சீனியாரிட்டி முறை மிகவும் கேலிக்குரியது. ஏனென்றால், இந்த சீனியாரிட்டியே தலைகீழாகத்தான் ஆரம்பிக்கும். இந்தக் குறைகள், காவல் உயரதிகாரிகள் முதல், முதலமைச்சர் வரை அனைவருக்கும் தெரியும். ஆனாலும், தீர்வுதான் இல்லை, இனியும்  தீர்வு இருக்குமா என்று தெரியவில்லை. ஏனென்றால், இந்தப் பிரச்னை, சாதாரண கான்ஸ்டபிள்களுக்கானதுதானே?" என்கிறார் வேதனை குறையாமல் !


டிரெண்டிங் @ விகடன்