நெல்லையில் ராணுவ கேன்டீன் மூடல்! முன்னாள் படை வீரர்கள் திண்டாட்டம்

நெல்லையில் செயல்பட்டு வந்த ராணுவ கேன்டீன் வாடகைப் பிரச்னை காரணமாகத் திடீரென மூடப்பட்டது. இதனால் பொருள்களை வாங்குவதற்காக வந்த முன்னாள் ராணுவத்தினர் சிரமத்துக்கு உள்ளானார்கள். 

நெல்லை மிலிட்டரி கேன்டீன்

முன்னாள் படை வீரர் சேமநல அலுவலகம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கான தலைமை அலுவலகமாக இது செயல்பட்டு வருகிறது. இங்கு ராணுவத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்தினர் சலுகை விலையில் பொருள்களை வாங்குவதற்கான கேன்டீன் செயல்பட்டு வருகிறது. 

இந்தக் கேன்டீன் செயல்படும் இடம் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமானதாகும். இதற்காக மாதந்தோறும் 28,287 ரூபாய் வாடகையாக செலுத்தப்பட்டு வந்தது. கடை அமைந்துள்ள இடத்தின் அருகே இருந்த இடத்தைக் கேன்டீன் நிர்வாகத்தினர் அனுமதி பெறாமலே கட்டடம் கட்டி பயன்படுத்தி வந்தனர். இதனை அறிந்த பொதுப்பணித்துறையினர், மாத வாடகையை 92,861 ரூபாயாக உயர்த்தினர். இது தொடர்பாக கேன்டீன் மேலாளருக்குப் பொதுப்பணித்துறை அனுப்பிய கடிதத்தில் வாடகை உயத்தப்பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டதுடன், முன் தேதியிட்டு கடந்த 2010 முதல் வாடகை பாக்கியைத் தரவும் வலியுறுத்தப்பட்டது. 

அதன்படி, கேண்டீன் சார்பாக பொதுப்பணித்துறையினருக்கு வாடகை பாக்கியாக மட்டும் 54 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. வாடகைப் பிரச்னை தொடர்பாகப் பொதுப்பணித்துறையினரிடம் நடத்திய பேச்சுவாரத்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து ராணுவ கேன்டீன் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வழக்கம் போல அங்கு பொருள்களை வாங்க வந்த ராணுவ மற்றும் முன்னாள் ராணுவத்தினரும் அவர்களின் குடும்பத்தினரும் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர். கேன்டீன் வாசலில் வாடகைக் காரணமாக மூடப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 

விரைவில் இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்து அதே இடத்திலேயே கேன்டீன் தொடரச் செய்ய வேண்டும் என ராணுவத்தினரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுவும் அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!