வெளியிடப்பட்ட நேரம்: 09:12 (13/07/2017)

கடைசி தொடர்பு:09:13 (13/07/2017)

யானை கரும்பலகை, திறன் வளர்க்கும் மேடை... வசீகரிக்கும் வகுப்பறை தந்த அரசுப் பள்ளி ஆசிரியர்! #CelebrateGovtSchools

அரசுப் பள்ளி

வகுப்பறை என்பது கற்பிக்கும் இடம், கற்றுக்கொடுக்கும் இடம், உரையாடல் இடம்... என அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால், இவற்றையெல்லாம் விட மாணவர்களுக்கு அச்சம் தராத இடமாக வகுப்பறை இருக்க வேண்டும். மகிழ்ச்சியுடன் உள்ளே நுழையும் இடமாக வகுப்பறை இருக்க வேண்டும். தன் திறமைகளைக் கூச்சமில்லாமல் வெளிப்படுத்தும் இடமாக வகுப்பறை இருக்க வேண்டும். இவை எல்லாம் தன் பள்ளியில் நடக்க வேண்டும் என ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர் நினைத்தார். செயல்முறையும் படுத்தியிருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியத்தில் கோனோரி குப்பம் எனும் கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. அந்தப் பள்ளியின் முதல் வகுப்புக்குரிய அறை வெளியிலிருந்து பார்க்கும்போதே பளிச்சென்ற வண்ணத்தில் மாணவர்களைக் கவரும். வாசலில் மேல், Dreen Class எனும் நம்பிக்கை தரும் வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறது. உள்ளே நுழைந்தால், அழகான யானை நம்மை வரவேற்கும். அந்த யானை மீதுதான் மாணவர்கள் எழுதிப் பழகுகிறார்கள்.

அரசுப் பள்ளி

ஆம்! வகுப்பறையில் கரும்பலகை யானை வடிவில் உள்ளது. அதில் எழுதுவதற்காக மாணவர்கள் நான், நீ என ஆர்வத்துடன் முன் வருகின்றனர். வழவழப்பான டைல்ஸ் தரை, சுற்றிலும் அழகான ஓவியங்கள் இவற்றை விடவும் சுவாரஸ்யமான இன்னொரு விஷயமும் இருக்கிறது. சின்ன மேடை. அங்கே மாணவர்கள் ஆடலாம்; பாடலாம்; நடிக்கலாம் எனத் தங்களின் திறமைகளை வெளிக்காட்டலாம். வித்தியாசமான வகுப்பறையைப் பற்றி, அந்தப் பள்ளியின் ஆசிரியர் எல். ஸ்டாலின் ஆரோக்கிய ராஜிடம் கேட்டோம்.

 "மாணவர்கள் சிரித்துக்கொண்டே வகுப்பறைக்குள் வர வேண்டும் என நினைத்தோம். அதற்கு என்ன செய்யவேண்டும் எனச் சக ஆசிரியர்களோடு திட்டமிட்டு, செயல்வடிவம் கொடுத்தோம். குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்குமே பிடித்தது யானை. அதனால், வழக்கம்போல செவ்வகமான கரும்பலகையாக இல்லாமல் யானை வடிவில் உருவாக்கினோம். அதேபோல, வகுப்பறையில் ஆசிரியர் கற்பிப்பது என்பது மட்டுமல்லாமல், மாணவர்கள் பங்குபெறும் நேரமும் இருக்க வேண்டும் அல்லவா... அதுவும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும் இல்லையா... அதற்கான ஒரு மேடையைத் தயார் செய்துகொடுத்தோம். நாள்தோறும் குறிப்பிட்ட நேரம் மாணவர்கள் நடித்தோ, பாடியோ, நடனமாடியோ தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அரசுப் பள்ளி

ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் தொடங்கி அனைத்து வகுப்பு மாணவர்களும் கற்பதற்கும், புதிய விஷயங்களை அறிவதுக்கும் கவனம் எடுத்து வருகிறோம். தமிழக அரசின் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் எங்கள் பள்ளிக்கு உபகரணங்கள் வாங்குவதற்கு திட்டமிட்டோம். அதாவது செலவுத் தொகையில் மூன்றில் ஒரு பங்குத் தொகையை நாம் கொடுத்தால் மீதித்தொகையை அரசாங்கம் கொடுக்கும். எனவே அதற்கான தொகையைச் சிரமப்பட்டு சேகரித்தோம். ஆசிரியர்களான நாங்களும் எங்கள் பங்களிப்பாக தலா ஐந்தாயிரம் ரூபாய் அளித்தோம். இந்த முயற்சியால் எங்கள் பள்ளிக்கு 24 கணினிகள் கிடைத்தன. எங்கள் பள்ளியைப் பற்றிய சிறிய வீடியோ தயாரித்தோம். அதைப் பார்த்த பல நண்பர்களும் பள்ளிக்கு உதவ முன்வந்தார்கள்.

மாணவர்களுக்குத் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை அறிமுகப்படுத்துவதில் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். 'மரம், செடி, கொடி' எனும் பாடத்துக்குப் பள்ளிக்கு அருகிலிருக்கும் பூங்காவுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று, அங்கு மாணவர்கள் பார்ப்பதை வீடியோ எடுத்துவருவோம். அதை அடுத்த நாள் லேப் டாப்பில் திரையிட்டுக் காட்டி விளக்குவோம். இதன்மூலம் பாடங்களை எளிமையாகப் புரிந்துகொள்கிறார்கள்.

அரசுப் பள்ளி

அதேபோல, சினிமா பாடல்களைத் தவிர்த்து, கிராமியக் கலைகளைப் பயிற்றுவித்து வருகிறோம். அதற்காக பறை உள்ளிட்ட கருவிகளை வாங்கி வைத்திருக்கிறோம். எங்களின் நிகழ்ச்சிகளைப் பார்த்த பலரும் தங்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு அழைக்கிறார்கள். மாணவர்களின் விளையாட்டுத் திறனை வளப்படுத்தும் விதத்தில் மைதானத்தைச் சீர்செய்திருக்கிறோம்.

எங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பதுதான் எங்களுக்குப் பெரிய பலமே. அதைக் கொண்டு இன்னும் சிறப்பாக இயங்குவோம்" என்று நம்பிக்கையுடன் முடித்தார் ஸ்டாலின் ஆரோக்கியராஜ்.


டிரெண்டிங் @ விகடன்