Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பசியால் வாடும் முதலைகள்... ஊருக்குள் நுழையும் ஆபத்து... அணைக்கரையை கவனிக்குமா அரசு?

முதலைகள்

தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ளது கொள்ளிடம் ஆறு. இங்கு வாழும் சுமார் 100 முதலைகள் உண்ண உணவின்றி அழிவின் விளிம்பில் தவிக்கின்றன. தஞ்சாவூர் - அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் விதமாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1826ஆம் ஆண்டு கொள்ளிடம் ஆறு பிரியும் பகுதியான அணைக்கரையில் கீழ்அணை, மேல்அணை என இரண்டு அணைகள் கட்டப்பட்டன. இதன் வழியாக தஞ்சாவூர், கடலூர், அரியலூர் உட்பட 7 மாவட்டங்களுக்குப் பாசனத்திற்கும், வெள்ளக்காலங்களில் வெளியேறும் உபரி நீரைக் கடலில் கலப்பதற்கும் இந்த அணைகள் பயன்படுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சில முதலைகள் வெள்ளத்தில் இடம்பெயர்ந்து அணைக்கரை ஆற்றில் தஞ்சமடைந்தன. இவை இனப்பெருக்கம் செய்து நூற்றுக்கும் மேற்பட்ட முதலைகளாகப் பல்கி பெருகியுள்ளன. கடந்த ஆண்டு காவிரியில் நீர்வரத்து இல்லாததாலும், போதுமான மழையின்றி பொய்த்துப் போனதாலும் கொள்ளிடம் ஆறு வறண்டு கிடக்கிறது. அணையின் ஓரத்தில் கிடக்கும் நீரில்தான் இத்தனை முதலைகளும் இருக்கின்றன. அவற்றிற்கு நீர்வழியே உணவு கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளைக் கபளீகரம் செய்து விடுகின்றன. சில சமயம் இரைத் தேடி ஊருக்குள்ளும் புகுந்து விடுகின்றன. உச்சகட்டமாக கடந்தவாரம் குளிக்கச் சென்ற செல்லதுரை என்பவரை முதலைகள் கடித்துக் குதறி கொன்று விட்ட கொடுமையும் நடந்தது.  

முதலை

இது பற்றி அணைக்கரை வாசியான மணிகண்டனிடம் பேசியபோது, “முதலைக்கு என்று தனி இடம் தேர்வு செய்து முதலைப் பண்ணை அமைத்து பராமரித்தால் சுற்றுலாத் தலமாக மாறும். அரசுக்கு வருவாயும் பெருகும். அல்லது சென்னை முட்டுக்காட்டிலுள்ள முதலைப் பண்ணைக்கு இவற்றை இடம்பெயர்த்து கொண்டு செல்ல வேண்டும். இது இரண்டில் ஒன்று நடந்தால்தான் இப்பகுதி மக்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழ முடியும். அரசு "முதலைகள் ஜாக்கிரதை” என்று ஒரு விளம்பர போர்டை வைத்து விடுவதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறது.

தற்போது முதலைகள் உணவின்றி தவிக்கின்றன. நீரும் குறைந்துவிட்டது. நீர்வழி உணவிற்கும் வழியில்லை. இப்பகுதி கடலூர், தஞ்சாவூர், அரியலூர் என மூன்று மாவட்ட நிர்வாகம் தொடர்புடையதாக இருப்பதால் யாருமே உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, முதலைப் பண்ணை அமைப்பதிலோ அல்லது முட்டுக்காட்டுக்கு இடம்பெயர்ப்பதிலோ தாமதிக்கலாம். ஆனால் முதலைகளுக்குப் பட்டினி சாவு நேர்ந்துவிடாமல் காக்கவேண்டியது அரசின் கடமை. அவைகளுக்கு உணவு தருவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்” என்று முடித்தார்.

முதலைகள் உணவுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கவில்லை. உண்மையிலேயே பசியால் துடிக்கின்றன. 

அணைக்கட்டில் மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் பல இடங்களில் வறட்சியால் நீரின் அளவு குறைந்துள்ளது. அங்கெல்லாம், முதலைகள் ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் உள்ளூர் மக்களின் கோரிக்கை. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close