Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"அப்துல் கலாமை குடியரசுத்தலைவராக்க வலியுறுத்தியவன் நான்!" - அடடே வைகோ

வைகோ

விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிவகாசிக்கு நேற்று வருகை தந்த அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது வைகோ, "ஜனநாயகத்தை வலுப்படுத்தும்வகையில் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.தி.மு.க அங்கம்வகித்தபோது, ஏ.பி.ஜே.அப்துல்கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்திக் கூறியவன் நான். அப்போதைய பிரதமர் வாஜ்பாய் என் கருத்தை ஏற்றுக்கொண்டார். தற்போது பி.ஜே.பி-யின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் மீராகுமாரை வேட்பாளராக நிறுத்தியுள்ளன. மேலும், எதிர்க்கட்சியினரால் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் கோபாலகிருஷ்ண காந்தியை வேட்பாளராக அறிவித்திருப்பது சரியான தேர்வு. அவர் எந்தக் கட்சியையும் சேர்ந்தவரல்ல. ஐ.ஏ.எஸ் அதிகாரியாக சிறப்பாகப் பணியாற்றியவர். மேற்குவங்க மாநிலத்தில் ஆளுநராக சிறப்பாகச் செயல்பட்டார்.

தேசப்பிதா மகாத்மா காந்தி மற்றும் மூதறிஞர் ராஜாஜியின் பேரன் என்பதற்காக மட்டுமல்ல, தனிப்பட்ட முறையிலும் அவர் சிறந்த அறிவாளி, பண்பாளர், மதச்சார்பற்ற தலைவர்.  நடுநிலை தவறாமல் மதச்சார்பின்மைக்கு எந்தப் பாதிப்பும் வராமல் மாநிலங்களவையை அவரால் நடத்த முடியும். இந்திய ஜனநாயகத்துக்கு அதுவே நல்லதாக இருக்க முடியும். இந்தியப் பிரதமரும் அவரையே ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நரேந்திர மோடி தலைமையிலான அரசு, எதிர்க்கட்சிகளை சிதைக்கிறது என்ற கவலை மேலோங்கி வரும் நிலையில், கோபாலகிருஷ்ண காந்தியை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும். ஜனநாயகத்தில் இது ஒரு நல்ல திருப்பமாக அமையும். சங்கர் தயாள் சர்மா குடியரசுத் தலைவராக இருந்தபோது, அவருடைய செயலாளராக இருந்து திறம்பட செயல்பட்டவர் கோபாலகிருஷ்ண காந்தி. எனவே, அவரைப் போட்டியின்றித் தேர்வு செய்ய வேண்டும்.

கோபாலகிருஷ்ண காந்தி

'ஒரே நாடு ஒரே வரி' என்ற பெயரில் மாநில உரிமைகள், மாநில நலன்களைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து வருகிறது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் ஜிஎஸ்டி-யில் எந்த மாறுதலையும் செய்ய முடியாது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பட்டாசுத்தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதியளவு இயந்திரங்களைப் பயன்படுத்தும் தீப்பெட்டித் தொழிலையும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு பாதித்துள்ளது. பண்டங்களின் விலை கடுமையாக ஏறியுள்ளது. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். வறுமையில் வீதிக்கு வரக்கூடிய சூழல் உள்ளது. 'போகப்போக சரியாகி விடும்' என்கிறார்கள். அதற்கான எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. மாநிலங்களிடம் எந்த ஆலோசனைகளையும் ஜிஎஸ்டி கவுன்சில் கேட்கவில்லை. 

டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து எரிவாயுத் திட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால், தஞ்சைத் தரணி உள்பட அனைத்து டெல்டா மாவட்டங்களும் பாலைவனமாக அழிந்து விடும் நிலை உள்ளது. மத்திய அரசு இத்தகையப் போக்கை கைவிட வேண்டும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement