திமிங்கிலத்தைக் காப்பாற்றியவர், திமிங்கிலத்தினாலேயே இறந்தார் !

கனடாவைச் சேர்ந்த ஜோ ஹாவ்லெட், கடந்த 15 ஆண்டுகளாக திமிங்கிலங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். கேம்பபெல்லா எனும் தீவுப் பகுதியைச் சேர்ந்த ஜோ, ரைட் வேல் ( Right Whale ) எனச் சொல்லப்படும்  திமிங்கிலங்களைப் பாதுகாக்க தொடர்ந்து களப்பணியாற்றி வந்தார். கடலில் வீசப்படும் பெரும் மீன்பிடி வலைகளில் சிக்கி பல திமிங்கிலங்கள் இறப்பதுண்டு. அப்படி வலைகளில் சிக்கி உயிருக்குப் போராடும் திமிங்கிலங்களை, வலைகளிலிருந்து விடுவித்துக் காப்பாற்றுவது ஜோவின் முக்கியப் பணியாக இருந்துவந்தது. கடந்த 15 வருடங்களில் 25-க்கும் அதிகமான திமிங்கிலங்களை அவர் காப்பாற்றியுள்ளார்.

திமிங்கலம் காப்பாற்றும் ஜோ

சமீபத்தில், வட அட்லாண்டிக் கடலில், வலையில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரு திமிங்கிலத்தைக் காப்பாற்ற, தன் குழுவோடு கடலுக்குள் பயணித்தார். 5 மணி நேரம் போராடி அந்தத் திமிங்கிலத்தை விடுவித்தார். விடுவித்த நொடி... பதட்டத்திலிருந்த திமிங்கிலம் திமிறியது. அந்தத் தாக்குதலில் நிலைகுலைந்து, சில நிமிடங்களிலேயே உயிரை விட்டார் ஜோ ஹாவ்லெட். 

இந்தக் கடல் பகுதியில், கடந்த மாதம் மட்டும் ஐந்து திமிங்கிலங்கள் மர்மமான முறையில் இறந்தன. ரைட் வேல் எனப்படும் இந்தத் திமிங்கில வகை, உலகில் மொத்தம் 525 தான் இருக்கின்றன. இந்த திமிங்கிலங்களைக் காப்பாற்றும் வேலைகளில் முன்னோடியாக இருந்த ஜோவின் இறப்பு, திமிங்கிலங்களின் உயிர் காக்கும் போராட்டத்தின் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!