வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (13/07/2017)

கடைசி தொடர்பு:15:30 (13/07/2017)

அணை கட்டுகிறது கர்நாடகா... வேடிக்கைப் பார்க்கிறது தமிழ்நாடு... பொங்கும் பி.ஆர்.பாண்டியன்

நீர்வழிப்பாதைகளில் சட்டத்திற்கு புறம்பாக கர்நாடகா அணைக்கட்டுவதை தமிழ்நாடு வேடிக்கை பார்ப்பதாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “தமிழ்நாடு வரலாறு காணாத வறட்சியைச் சந்தித்து வருகிறது. ஆனால், கர்நாடகா, கேரள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மே 15ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

பி.ஆர்.பாண்டியன்

கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பியுள்ள நிலையில், அதன்  நீர்வழிப்பாதைகளில் சட்டத்திற்கு புறம்பாக புதிய நீர்தேக்கங்களை அமைத்தும், தண்ணீரை ராட்சத நீர் ஏற்றும் இயந்திரங்கள் மூம் மேலேற்றம் செய்து வரம்பு மீறி தேக்கி வைத்துள்ளனர். குடிநீர் விரிவாக்கம் என்ற பெயரில் பாசனப் பகுதிகளைச் சட்டத்திற்கு புறம்பாக விரிவாக்கம் செய்து வருகிறது. 

தற்போது உபரி நீர் மட்டுமே கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு வருகின்றன. அணைகள் நிரம்பிய நிலையில், தண்ணீரை முழுமையும் விடுவிக்காமல் நிறுத்திவிட்டு அணைகளுக்குக் கீழ்ப் பகுதியில் காவிரி ஆற்றின் வழியோரங்களில் கிடைக்கும் மழை நீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளதாகப் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறது. 

கர்நாடக அரசே திட்டமிட்டு விவசாயிகளைத் தூண்டிவிட்டு தண்ணீர் திறப்பதற்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்றத்தில் தற்போது நடைபெறும் வழக்கு விசாரணையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகக் கர்நாடகம் நடத்தும் ஏமாற்றும் நாடகம் ஆகும்.

தமிழக அரசு வழக்கறிஞர்கள், ஆதாரத்தோடு உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக்குழு அமைத்து, கர்நாடகவில் சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கங்களையும், பாசனப் பகுதிகளையும் பார்வையிட்டு தண்ணீரின் இருப்பை ஆய்வு செய்ய வேண்டும். பாசனப் பகுதிகளையும் பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீரைப் பெற்றுத்தர வேண்டும்.

கர்நாடக அரசு சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள நீர்த் தேக்கங்களை அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு, நடுவர் மன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக ராசிமணல், மேகதாது அணைக்கட்டுமானப் பணியை நிறைவேற்றத் திட்டமிட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள திட்ட அறிக்கையை ரத்து செய்தும், அணைக்கட்டப்படும் இடங்களைப் பார்வையிட்டு அங்கே மரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்து நிறுத்துவதோடு, சேகரித்து வைக்கப்பட்டுள்ள கட்டுமானப்பொருள்களைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும். இல்லையேல் எங்களின் அடுத்த கட்ட போராட்டம் வெடிக்கும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க