வெளியிடப்பட்ட நேரம்: 20:46 (13/07/2017)

கடைசி தொடர்பு:20:46 (13/07/2017)

``இந்தியாவுக்குத் தங்கம் நிச்சயம்!''- குள்ளமான விளையாட்டு வீரர்களின் உச்ச நம்பிக்கை

சர்வதேசப் போட்டிகளில் தேர்வாகி, சர்வ சாதாரணமாகப் பதக்கங்களைக் குவித்துவருகின்றனர் தமிழகத்தைச் சேர்ந்த குள்ளமான மாற்றுத்திறனாளிகள். குள்ளமாக இருப்பது ஒரு குறையே இல்லை என, சாதித்துக்காட்டியுள்ளனர் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள். இந்தியா முழுவதும் நடைபெற்றுவரும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை அள்ளிவருகின்றனர் புதுக்கோட்டை செல்வராஜ், மதுரை அச்சம்பத்துப் பகுதியைச் சேர்ந்த மனோஜ், மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேஷ். இவர்கள் மூவரும் ஆகஸ்ட் மாதம் கனடாவில் குள்ளமான நபர்களுக்காக நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். அதில் தங்கம் வெல்வோம் எனவும் நம்பிக்கையில் உள்ளனர். இவர்களிடம் பேசினோம்.

ஈட்டி எறிதல்

``என் பெயர் செல்வராஜ். நான் புதுக்கோட்டை மாவட்டம் கோனபட்டுப் பகுதியில் இருக்கிறேன். பி.பி.ஏ முடித்துவிட்டு எம்.காம் படித்துவருகிறேன். அழகப்பா பல்கலைக்கழகத்தில் பாரா ஸ்போர்ட்ஸ் சென்டரில் பயிற்சி எடுத்துவருகிறேன். 2015-ம் ஆண்டில் பெங்களூருவில் நடைபெற்ற நேஷனல் லெவல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றேன். 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜஸ்தானில் நடைபெற்ற போட்டியிலும் முதல் பரிசாகத் தங்கம் பெற்றேன். இப்படிப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்று, வீடு செல்வராஜ்முழுவதும் பரிசுகளைக் குவித்துவைத்திருக்கிறேன். ராஜஸ்தானில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதால், ஆகஸ்ட் மாதம் கனடாவில் நடைபெற உள்ள சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளோம். அங்கு நடைபெறும் போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 13 வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் மூன்று வீரர்கள் தேர்வாகியுள்ளோம்.

பயிற்சியாளர்கள் ரஞ்சித் மற்றும் சுந்தர் இருவரும் எங்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். கனடாவில் நடைபெறும் போட்டிகளில் நாங்கள் மூவரும் கலந்துகொண்டு, இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்ப்போம். நான் மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில்தான் வாழ்ந்துவருகிறேன். என் தந்தை, முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். என் தாய், நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணி செய்து, எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். கனடா நாட்டில் நடைபெறும் போட்டிக்குச் செல்ல, இன்னும் பணம் கிடைக்கவில்லை. சில சமூக ஆர்வலர்கள் எனக்கு உதவி செய்துவருகின்றனர். ஆனால், அது போதுமானதாக இருக்குமா எனத் தெரியவில்லை. வெளிநாடு செல்ல டிக்கெட் மட்டும் ஒரு லட்சம் ரூபாய்க்குமேல் ஆகும். எனவேதான் நாங்கள் அரசின் உதவியை எதிர்பார்க்கிறோம்'' என்றார் .

இந்தியா தங்கம்

``என் பெயர் மனோஜ். நான் பி.இ முடித்துவிட்டு தற்போது சென்னையில் எம்.பி.ஏ படித்துவருகிறேன். பள்ளியிலிருந்தே எனக்கு விளையாட்டுத் துறையில்தான் ஆர்வம். பள்ளியில் நான் முதலில் பேஸ்கட் பால் பிளேயராகத்தான் இருந்தேன். பிறகு, எல்லா விளையாட்டுகளையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது. அதனால்  கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 50 மீட்டர் ஓட்டப் பந்தயம், 100 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று பரிசுகள் வாங்கினேன். என் திறமைகள் வளர்ந்தன. 2014-ம் ஆண்டில் சென்னை சேத்பட்டில் நடைபெற்ற 100 மீட்டர் மற்றும் குண்டு எரிதல் போட்டிகளில் முதல் பரிசுகள் பெற்றேன். 2015-ம் ஆண்டு, குள்ளர்களுக்கான டிராஃப் நேஷனல் விளையாட்டில் குண்டு எரிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளிலும் முதல் பரிசுகள் வாங்கினேன் . ராஜஸ்தானில் நடைபெற்ற 17-வது ஒலிம்பிக் போட்டியில் குண்டு எரிதலில் 8.01 ரெக்கார்ட் செய்துள்ளேன். அதற்கு முந்தைய ரெக்கார்டும் என்னுடையதுதான். கனடாவில் நடக்கும் போட்டியின் மூலம் இந்தியாவுக்கு நிச்சயம் தங்கம் வாங்கித் தருவேன்'' என்றார் .

கணேஷிடம் பேசினோம். ``நான் விவசாயம் செய்கிறேன். வறட்சி காரணமாக சில ஆண்டுகளுக்கு விவசாயம் செய்யவில்லை. தற்போது கால்நடைகளை மட்டும் பராமரித்துவருகிறேன். எனக்குத் திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். பல நேஷனல் போட்டிகளில் வட்டு எரிதல், ஈட்டி எரிதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கியுள்ளேன். இதுவரை ஆறு தங்கம், நான்கு வெள்ளி, நான்கு வெண்கலம் வாங்கியுள்ளேன். குள்ளர்களுக்காகவே இதுபோன்ற போட்டிகள் இருப்பது, எனக்குப் பல வருடங்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது. பயிற்சி எடுத்து பல சாதனைகள் செய்து பரிசுகள் வாங்கத் தொடங்கினேன். கனடாவில் நடக்கும் போட்டியில் நிச்சயம் இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்போம்'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்