வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (13/07/2017)

கடைசி தொடர்பு:15:33 (13/07/2017)

திலீப் வழக்குத் தொடர்பாக இரண்டு எம்எல்ஏ-க்களிடம் விசாரணை!

திலீப் வழக்குத் தொடர்பாக இரண்டு எம்எல்ஏ-க்களிடம் விசாரணை.

 

கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி மலையாள நடிகை ஷூட்டிங் முடிந்து திருச்சூரில் இருந்து கொச்சி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, அவர் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக கொச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தச் சம்பவம் தென்னிந்தியத் திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. நடிகை கடத்தல் தொடர்பாகப் பல்சர் சுனில் உள்ளிட்ட 7 பேரைக் கேரளப் போலீஸார் கைது செய்தனர். பல்சர் சுனிலின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப்தான் நடிகையின் கடத்தலுக்குக் காரணம் என்று பலர் நம்பியிருந்தனர். நடிகர் திலீப்புக்கு எதிராகப் போலீஸாருக்கு எந்தச் சரியான ஆதாரமும் சிக்காமல் இருந்தது. அதன்பின் பல ஆதாரங்களும் போலீஸாரிடம் சிக்க, நேற்று முன்தினம் போலீஸார், திலீப்பைக் கைது செய்தனர். தற்போது ஆலுவா சப் ஜெயிலில் திலீப் அடைக்கப்பட்டுள்ளார்.


 

நடிகையின் வழக்கில் கேரளாவைச் சேர்ந்த 2 எம்எல்ஏ-க்களுக்குத் தொடர்பு இருப்பதாகப் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொல்லம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ-வும் நடிகருமான முகேஷிடம் பல்சர் சுனில் ஒரு ஆண்டு டிரைவராக வேலை செய்துள்ளார். அதன்பின் முகேஷ் , பல்சர் சுனிலைத் திடீரென வேலையை விட்டு நீக்கி உள்ளார். அதற்கான காரணத்தையும் இதுவரை முகேஷ் தெரிவிக்கவில்லை. கடந்த வாரம் நடந்த நடிகர் சங்கப் பொதுக் குழு கூட்டத்திலும் திலீப்புக்கு ஆதரவாக அவர் பேசினார். செய்தியாளர்களிடம் கடுமையான வார்த்தைகளில் பேசியதால் கொல்லம் மாவட்ட மார்க்சிஸ்ட்சி கட்சி அவரைக் கண்டித்தது. அதன்பின் அவர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

நடிகர் திலீப்பின் சொந்த ஊரான எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா தொகுதி எம்எல்ஏ-வான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்வர்ஷாதத்க்கும், நடிகை வழக்கில் தொடர்ப்பு இருப்பதாகப் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். திலீப்பும், அன்வரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். மஞ்சு வாரியாரை, திலீப் திருமணம் செய்யும் போதும் பல உதவிகளை அன்வர் செய்துள்ளார். நடிகை கடத்தப்பட்ட அன்று அன்வர் எம்எல்ஏ-வும் திலீப்பும் அதிக நேரம் போனில் பேசியதைப் போலீஸார் கண்டுபிடித்துளளனர். திலீப்  தனிப்பட்ட முறையில் ஒரு செல்போன் வைத்து முக்கியமான நபர்களுக்குப் பேசி வந்திருக்கிறார். அதில் ஒருவர்தான் அன்வர். அதனால் அன்வர் எம்எல்ஏ-விடமும் நடிகை வழக்குத் தனிப்படை போலீஸார் முடிவு செய்துள்ளனர். அவர் இப்போது பாரீஸில் இருப்பதால் கேரளா வந்ததும் விசாரணை தொடங்க இருக்கிறது. அதற்குள் முகேஷ் எம்எல்ஏ-விடம் விசாரணை நடத்தப்படலாம் என்கிறது கேரளப் போலீஸ் வட்டாரம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க