சித்தர் சமாதிகளைக் காண ஆர்வம் காட்டும் வெளிநாட்டினர்!

சித்தர்களை தரிசிக்கும் அயல்நாட்டு பக்தர்கள்

தமிழ்நாட்டில் வாழ்ந்த 18 சித்தர்களின் மகிமை அறிந்து அவர்களின் ஜீவசமாதி உள்ள இடங்களுக்கு நேரில் சென்று தரிசித்து வருகிறார்கள் அயல்நாட்டு பக்தர்கள். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற மயூரநாதர் கோயில் உள்ளது. இங்கு 18 சித்தர்களில் ஒருவரான குதம்பை சித்தரின் ஜீவ சமாதி உள்ளது. குதம்பை என்றால், காதில் அணியும் தோடு. இவர் தோடு அணிந்திருந்ததால் குதம்பை சித்தர் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டார்.

இவரை வழிபட, மலேசியா, சுவீடன், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 35 பக்தர்கள் மயூரநாதர் கோயிலுக்கு வந்தனர். அவர்கள் குதம்பையார் சந்நிதிக்குச் சென்று தரிசனம் செய்தனர். பிறகு, காதுகுத்தி தோடு அணிந்து கொண்டனர். கோயில் வளாகத்தில் உள்ள சிவன், சித்தர் ஆகிய சுவாமிகளுக்கு இரண்டு கலசங்கள் அமைத்து சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து மேள தாளங்களுடன் கலசங்களை எடுத்துவந்து குதம்பை சித்தருக்குப் புனித நீரை ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், மலர்களால் அலங்காரம் செய்து குதம்பையாருக்கும் அகத்திய விநாயகருக்கும் தீபாராதணை காண்பிக்கப்பட்டது.

வெளிநாட்டு பக்தர்களின் ஒருங்கிணைப்பாளரான மலேசியா தியான் விமலிடம் பேசியபோது, “உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் சித்தர்களைப் பற்றி தெரிந்து, அவர்களை வழிபட வேண்டும் என்பதற்காக பலநாடுகளில் சித்தர்கள் வழிபாட்டு மன்றங்களை நடத்தி வருகிறேன். அதில் தமிழர்களைவிட வெளிநாட்டினர்தான் ஆர்வமுடன் சேர்ந்து செயல்படுகிறார்கள். அவர்களில் சித்தர் சமாதிகளை நேரில் தரிசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டவர்களைத் தற்போது அழைத்து வந்திருக்கிறேன். இப்பணி தொடரும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!