Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பார்வைத்திறனற்ற வீராங்கனையைக் கையேந்தவைத்த பாராலிம்பிக் கமிட்டி!

பெர்லின் நகரில் நடந்த நீச்சல் போட்டியில் பங்கேற்கச் சென்ற பார்வையற்ற  நீச்சல் வீராங்கனை காஞ்சனாமாலாவுக்கு, போதிய நிதியுதவி அளிக்காமல் அவரை வெளிநாட்டில் கையேந்தவைத்துள்ளது இந்திய பாராலிம்பிக் கமிட்டி.

பாராலிம்பிக் வீராங்கனை காஞ்சனாமாலா

இந்திய மாற்றுத்திறனாளி வீரர் - வீராங்கனைகள் ஆறு பேர், பெர்லின் நகரில் நடந்த பாரா நீச்சல் போட்டியில் பங்கேற்கச் சென்றிருந்தனர். ஜூலை 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை இந்தப் போட்டி நடந்தது. இந்தியாவின் மிகச்சிறந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனை காஞ்சனாமாலா பாண்டோவும் குழுவில் இடம்பெற்றிருந்தார். இவர் பார்வையற்றவர். ஆனாலும் பார்வைத்திறன் உள்ளவர்களையே வீழ்த்தும் அளவுக்குத் திறமைபெற்றவர். பெர்லினில் மெட்லி பிரிவில்  3:03:00 நிமிடத்தில் இலக்கைக் கடந்து காஞ்சனாமாலா வெள்ளிப்பதக்கம் வென்றார். அத்துடன், 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்,  பேக் ஸ்ட்ரோக் பிரிவில் உலகத் தடகளப் போட்டியில் பங்கேற்கவும் தகுதிபெற்றார். இந்த ஆண்டு, உலகத் தடகளப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள ஒரே இந்திய வீராங்கனை இவர்தான். 

ஜெர்மனியில் காஞ்சனாமாலா படைத்த சாதனைகள் இவை. இனி... அந்நாட்டில் அவர் சந்தித்த வேதனைகளைப் பார்ப்போம்.

பெர்லின் நீச்சல் போட்டியில் பங்கேற்க, பாராலிம்பிக் கமிட்டிக்கு இந்திய விளையாட்டு ஆணையம் போதிய நிதி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. `சொந்தப் பணத்தில் போட்டிக்குச் செல்லவும். பணம் வந்தவுடன் திருப்பித் தரப்படும்' என இந்திய பாராலிம்பிக் கமிட்டி வாக்களித்திருக்கிறது.  நாக்பூர் ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் காஞ்சனாமாலா, வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் லோன் வாங்கி, போட்டியில் பங்கேற்க ஜெர்மனி சென்றிருக்கிறார். கடந்த 2011-ம் ஆண்டு உலகத் தடகளப் போட்டியில் காஞ்சனாமாலா வெண்கலம் வென்றுள்ளார். இன்னொரு முறை உலகத் தடகளப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது அவரின் கனவு. அதற்கு தகுதியும் பெற்றுவிட்டார். ஆனால், இந்திய பாராலிம்பிக் கமிட்டி போதிய நிதி ஒதுக்கித் தராததால் வெளிநாட்டவரிடம் கையேந்தும் சூழலுக்கு அவர் தள்ளப்பட்டார். 

பாராலிம்பிக் வீராங்கனை காஞ்சனாமாலா

பெர்லினில் தான் சந்தித்த மோசமான அனுபவம் குறித்து கஞ்சனாமாலா கூறுகையில், ``நானும் என் பாதுகாப்பாளர் ஜெய்மாலா பாண்டேவும் இந்தப் போட்டியில் பங்கேற்க `சாய்' நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால், குறித்த நேரத்தில் பணம் கைக்கு வரவில்லை. கடன் வாங்கித்தான் போட்டிக்கு வந்தேன். பெர்லினில் ஒவ்வொரு பந்தயத்துக்கும் பணம் செலுத்தவேண்டி இருந்தது. பணம் செலுத்துவது பயிற்சியாளரின் பணி. பயிற்சியாளர் கன்வால்ஜித் சிங்கோ, என்னிடம் பணம் கேட்டார். அவர் எந்த ஒத்துழைப்பும் அளிக்கவில்லை.

ஒருமுறை போட்டிக் கட்டணம் செலுத்த என்னிடம் பணம் இல்லை. ஹோட்டலுக்கு வந்துதான் பணம் எடுக்கவேண்டி இருந்தது. அதற்குக்கூட அவர் எனக்கு உதவி செய்யவில்லை. கையில் பணம் இல்லாமல் ட்ராமில் டிக்கெட்டு எடுக்காமல் போய் மாட்டிக்கொண்டேன். இந்திய மதிப்பில் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டினேன். விமானக் கட்டணம், ஹோட்டல் செலவு, சாப்பாடு செலவு என அங்கேயே ஐந்து லட்சம் ரூபாயும் காலி.

தற்போது, லண்டனில் பாரா உலகத் தடகளப் போட்டியில் பங்கேற்க வந்துள்ளேன். பாராலிம்பிக் கமிட்டி 33 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால், போட்டி அமைப்பாளர்கள் 66 லட்சம் ரூபாய் கேட்கின்றனர். இங்கு வந்த பிறகுதான் இவையெல்லாம் தெரிகின்றன. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர் - வீராங்கனைகளை இப்படித்தான் நடத்துவார்களா? மாற்றுத்திறனாளி வீரர் - வீராங்கனைகள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்று நடக்கவே கூடாது '' என்றார் வேதனையுடன். 

இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் குருசரண் சிங் கூறுகையில், ``இந்திய விளையாட்டு ஆணையத்திடம் (சாய்) இருந்து சரியான நேரத்தில் நிதி வந்து சேரவில்லை. நிதி வந்ததும் அவர்களுக்குத் திருப்பித் தரப்படும்'' என்று தெரிவித்துள்ளார். 

பார்வையற்ற வீராங்கனையை `சொந்த பணத்தில் சென்று போட்டியில் பங்கேற்றுக்கொள்ளுங்கள்' எனச் சொல்வது அவமானமாகத் தெரியவில்லையா... இல்லை இவர்களில் யாருக்குப் பார்வையில்லை எனத் தெரியவில்லை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close