Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

3 ஊர், 3 கைதுகள்... பிரசாரம் செய்வது பெருங்குற்றமா முதல்வர் பழனிசாமி அவர்களே!

3 ஊர்கள் 3 கைதுகள்

3 ஊர்கள்... 3 கைதுகள்... உச்ச நீதிமன்றம் எதையாவது சொல்லிவிட்டால் அதற்குமேல் எந்த முறையீடும் இல்லை, நாட்டின் சட்ட அமைப்பில்..! அந்த உச்சநீதிமன்றமே அழுத்தமாகச் சொன்னபிறகும், அரசியமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையைக் காலில்போட்டு மிதித்து அவமதிக்கிறது, தமிழக அரசு! 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்திலும் நிலத்தையும் நிலத்தடிநீரையும் நஞ்சாக்கி, காலியாக்கும் அரசுத் திட்டங்களை எதிர்த்து, பாதிக்கப்படும் மக்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். வாழும் உரிமைக்கான அவர்களின் நியாயமான போராட்டத்துக்கு அந்தப் பகுதி அளவில் அனைத்து கட்சிகளும் உறுதியாக ஆதரவு தெரிவிக்கின்றன. பல மாவட்டங்களிலிருந்தும் பாதிக்கப்படும் கிராமங்களுக்கு வந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அமைப்பினர். 

இதில் ஒரு பகுதியாக, மதுரையில் பல அமைப்புகளின் கூட்டியக்கமான இயற்கைப் பாதுகாப்புக் குழுவின் சார்பில், வரும் சனிக்கிழமையன்று மனித சங்கிலி நடத்துவது எனத் தீர்மானித்து அதற்கான அனுமதியையும் போலீசிடம் கேட்டிருந்தனர். இந்த நிலையில் அந்தக் குழுவின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகன், செயற்குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர் அகராதி, அரங்கையன் ஆகியோர், நேற்று இரவு திடீரென கைதுசெய்யப்பட்டனர். நள்ளிரவு தாண்டி 2ஆவது நீதித்துறை நடுவர் முன்பு நிறுத்தப்பட... மூவரையும் அவர் பிணையில் விடுதலை செய்தார். 

சேலத்தில் இதே இயற்கைப் பாதுகாப்புக் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளரான இதழியல் மாணவர் வளர்மதியும் அவருடைய தோழியின் தாயாரான ஜெயந்தியும் பிரசாரம் செய்ததற்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கடந்த வாரத்தில், கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி வாசலில் கோவை சட்டக்கல்லூரி மாணவர் வினோத் உட்பட நான்கு பேர், பு.மா.இ.மு. அமைப்பைச் சேர்ந்த புதிய மாணவன் எனும் இதழை விநியோகித்துக்கொண்டு இருந்தனர். அது பற்றி பாஜகவைச் சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், சட்ட மாணவர் வினோத் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் பிணை மனுத் தாக்கல்செய்தபோது அவரை விடக்கூடாது என எதிர்ப்பு போலீஸ் எதிர்ப்புத் தெரிவிக்க, அவருக்குப் பிணை மறுக்கப்பட்டு, தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்துவருகிறார். 

மூன்று வெவ்வேறு ஊர்களில் ஒரு வாரத்தில் இந்தச் சம்பவங்கள் நடந்திருந்தாலும், மூன்றிலும் ஒரே அம்சம் தெளிவாகத் தெரிகிறது. அது, மக்களின் வாழ்வாதாரத்துக்கும் இயற்கைவளத்துக்கும் கேடுசெய்யும் திட்டங்களைச் செயல்படுத்தினாலும் அதைப் பற்றி விமர்சனமோ வேறு எந்த கருத்தையுமோ வெளிப்படுத்தக்கூடாது; அரசின் தவறான கொள்கைமுடிவை, மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் கருத்துகளைப் பற்றியும் யாரும் எதுவும் பேசிவிடக்கூடாது என்பதுதான்!

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதைப்போல, கூடங்குளம் அணு உலைக்கெதிரான அமைதிப் போராட்டக்காரர்கள் மீது ஜெயலலிதா அரசு பேச்சுவார்த்தை நடத்தி, உறுதிமொழிகள் அளித்து, அதற்கு நேர்மாறாக, அப்பாவி கடலோர மக்கள் மீது ஆயிரக்கணக்கான வழக்குகளைப் பதிவுசெய்தது. (இன்னும் எந்த வழக்கும் முடியவில்லை; எப்போது முடியும் என்றும் தெரியவில்லை. ஏனெனில் வாக்குறுதி அளித்த ஜெயலலிதாவே இப்போது இல்லைதானே!) ஜெயலலிதாவின் கொள்கையில் பெரிய மாற்றமில்லாத அவருடைய கால்வணங்கிகளின் அரசாங்கமோ பல மடங்கு வேகத்தில் பாய்ந்து செல்கிறது. 

முன்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்து முடக்கப் பார்த்தார்கள்; இப்போது வாழ்வதற்கான அடிப்படை உரிமையே பாதிக்கப்படும்போது அதைப் பற்றிப் பேசக்கூடாது என கருத்துரிமையை முழுவதுமாக முடக்கப்பார்கிறது தமிழக அரசு என்கிறார், மதுரையில் கைதாகி பிணையில் வெளிவந்துள்ள வழக்குரைஞர் அகராதி. 

“இயற்கைப் பாதுகாப்புக் குழு என்ற கூட்டமைப்பின் சார்பில் மனிதசங்கிலி நடத்துவதற்கு மாநகர போலீசிடம் முறையாக அனுமதி கேட்டோம். கோரிப்பாளையத்திலிருந்து கே.புதூர்வரை அனுமதிக்க முடியாது என்று சொன்னார்கள். பிறகு தல்லாகுளம்வரை அனுமதிக்கிறோம் என்று சொன்ன போலீஸ் தரப்பில், நேற்று மாலை தல்லாகுளம் போலீஸ்நிலையத்துக்கு வரச்சொன்னார்கள். அதற்காக மாலை 6 மணிக்கு போலீஸ்நிலையத்துக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தோம். திடீரென வந்து தோழர் ஜெகனையும் என்னையும் விசாரணைக்கு வருமாறு அழைத்தார்கள். சம்மன் தரச் சொன்னோம், மறுத்துவிட்டார்கள். ’பொது இடத்தில் பிரசாரம் செய்து, நம் பலத்தைக் காட்டுவோம்’ எனப் பேசியதாக வழக்கு பதிந்தார்கள். அதுவும் 11.30வரை நாங்கள் கேட்டதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. அதன் பிறகுதான் சொன்னார்கள். இடையில் எங்களின் கைது பற்றி தெரிந்து போலீஸ்நிலையத்தில் வந்து விசாரித்த, இயற்கைப் பாதுகாப்புக் குழுவின் இன்னொரு தோழர் அரங்கையனையும் கைதுசெய்துவிட்டார்கள். ஆனால் எங்கள் வீட்டில்வைத்து அவரைக் கைதுசெய்ததாகப் பதிவுசெய்தார்கள். நள்ளிரவு தாண்டி 1.30 மணிக்கு நீதித்துறை 2ஆவது நடுவர் சக்திவேல் முன்பு கொண்டு நிறுத்தினார்கள். மத்திய, மாநில அரசுகளை அவதூறு செய்ததாகப் போலீசார் வைத்த குற்றச்சாட்டை, பிணையில் வெளிவரமுடியாத குற்றப்பதிவை ஏற்கமுடியாது என நடுவர் கூறியதுடன், எங்களைப் பிணையிலும் வெளியில்வர அனுமதித்தார். யாரையோ திருப்திப்படுத்த போலீஸ் இப்படி வழக்குப் போடுகிறது. மக்களின் பிரச்னையைப் பேசவோ எழுதவோகூடாது என நினைக்கிறது” என நடந்ததைப் பற்றி விவரித்தார், வழக்குரைஞர் அகராதி. 

இயற்கைப் பாதுகாப்புக் குழுவில் அங்கம்வகிக்கும், மக்கள் சிவில் உரிமைக் கழகம்- பியுசிஎல் அமைப்பின் மாநிலத் தலைவர் பேரா. முரளி கேட்டோம். 

” தமிழ்நாடு அரசும் போலீசும் இதில் நடந்துகொள்ளும்விதம் முழுக்கமுழுக்க ஜனநாயகத்துக்குப் புறம்பான செயல். மதுரையில் நீதிபதியே போலீசார் போட்ட வழக்குப்பிரிவுகளை ஏற்காமல், பிணை கொடுத்துள்ளார். போலீசார் சட்டமீறலைச் செய்கிறார்கள். கைதானவர்களைப் பார்க்கச் சென்ற அவர்களின் வழக்குரைஞர்களை உள்ளேவிடாமல் தல்லாகுளம் போலீஸ்நிலையத்தைப் பூட்டிவைத்திருக்கிறார்கள். அப்போது புகார்தர வந்தவர்களையும் உள்ளே விடவில்லை. இரவு 10 மணிக்குப் பிறகே பேச அனுமதித்தார்கள். மதுரையில் நடக்கும் மனிதசங்கிலிக்காக கல்லூரிகளில் பிரசாரம்செய்வதற்கு ஜனநாயக உரிமை இல்லையா? இந்த நாட்டில் என்ன நடக்கிறது? நீதிக்கான குரல் முடக்கப்படுகிறது. இது தவறான விசயம். போலீஸ் சொல்வதைப்போல இதில் எந்த சதியும் இல்லை; அவதூறும் இல்லை. நேரடியான கோரிக்கை, மக்களின் வாழ்வாதாரத்தை இயற்கைவளத்தைப் பாதிக்கும் திட்டம் வேண்டாம் என்கிறார்கள். இதை சொல்லக்கூட உரிமை இல்லையா? ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமையை மறுத்து, இயக்கரீதியாகச் செயல்படுபவர்கள் மீது வழக்குப் போட்டு, மற்றவர்களை அச்சமூட்ட அரசு நினைப்பதாகத்தான் தெரிகிறது. போலீசாரிடம் நெருக்கிக் கேட்டபோது மேலிடத்திலிருந்து உத்தரவு சார் என்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள். ஜனநாயகநாட்டில் நியாயமான போராட்டங்கள் என்பதைவிட அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவது மிகவும் ஆபத்தானது” என மக்களாட்சி உரிமைகள் பற்றி அதிகமாகவே ஆதங்கப்பட்டுப் பேசினார், பேரா. முரளி. 

ஜனநாயக நாட்டில் அரசியல்சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்துரிமை நசுக்கப்படும்போதெல்லாம்- அதுவும் வாழ்வாதாரமே பறிக்கப்படும் ஆபத்துள்ள மக்களின் உரிமைக்குரல், பலமாகவே இருக்கும். அந்தக்குரலோடு குரல்சேர்க்கும் சிவில் உரிமை அமைப்புகளின் கோபமும் ஆவேசமும் இயல்பானது. அதற்கு மதிப்பளிக்க வேண்டியது எந்த ஒரு மக்களாட்சி அரசுக்கும் கடமை! அதைச் செய்வாரா, முதலமைச்சர் கே.பழனிசாமி? 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close