Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாய்ப்பாலையும் விஷமாக்கும் குப்பை! - கலங்கடிக்கும் 'மீள்' ஆவணப்படம்

குப்பை

லைகளாக எழுந்து நின்று காற்றுவெளி முழுக்க விஷவாயு கக்குகின்றன, நாம் தினமும் கொட்டி எழுப்பியிருக்கும் குப்பைமேடுகள். ஊரின் ஒதுக்குப்புறத்தில் கொட்ட ஆரம்பித்து, ஊரையே ஒதுக்குப்புறமாக மாற்றி வைத்திருக்கிறோம். இந்தக் குப்பைமேடுகள் மண்ணுக்குள் மக்கி, சுற்றியிருக்கும் நீராதாரங்களை விஷமாக்குகிறது. மக்கும் குப்பையும் மக்காத குப்பையும் சரியாகப் பிரிக்கப்படாமல் மனிதனின் அலட்சியத்தால் ஒன்று சேர்ந்து எரிக்கப்படும்போது அது காற்றின் நுரையீரலைச் சல்லடையாக்குகிறது. 

பெருநகரக் குப்பைகளை அப்புறப்படுத்த வழியற்று நஞ்சு மலைகளாகப் பீதியைக் கிளப்புகிறது. இன்னொரு பக்கம், சிறுநகரங்களில் உருவாக்கப்படும் குப்பை மேடுகளில், வறுமைக்குப் பிறந்த காரணத்தால், குழந்தைகள் குப்பை பொறுக்குகின்றனர். அங்கே வந்து விழும் மது பாட்டில்களில் இருக்கும் மிச்சங்கள் அவர்களைப் போதை அடிமைகளாக மாற்றுகின்றன. குப்பையை விற்ற பணத்தில் போதைப் பொருள்களை நுகருகிறார்கள். இப்படிக் கொட்டப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்த போதிய நிதி ஒதுக்கப்படாமல், மாற்று வழிகளையும் யோசிக்காமல் மண்ணையும் நஞ்சாக்கி வருகிறோம். 

குப்பை

இந்த அவலநிலையை உரக்கச் சொல்வற்காக 'மீள்' என்ற ஆவணப்படத்தை இயக்கி இருக்கிறார், சென்னையைச் சேர்ந்த விஷ்ணுப்பிரியா. இதற்காக இந்திய அளவில் பயணித்திருக்கும் விஷ்ணுப்பிரியா, தனது ஆவணப்படத்தை வெளியிடும் பணிகளில் இருந்தார். ''பள்ளிக்கரணை பக்கத்தில் உள்ள பெண்களிடம் எடுக்கப்பட்ட தாய்ப்பால் சாம்பிளில் விஷத்தன்மை கலந்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், அந்தப் பகுதியில் கொட்டப்படும் குப்பைதான்'' என்ற அதிர்ச்சியை நம்முள் இறக்கியபடி பேச ஆரம்பிக்கிறார் விஷ்ணுப்பிரியா. 

''ஆர்கிடெக்ட் படிப்பை முடிச்சுட்டு ஆறு வருஷமா ஒரு கம்பெனில் வேலைப் பார்த்துட்டிருந்தேன். நண்பர்களோடு ஒன்று சேரும்போதெல்லாம் சுற்றுச்சூழல் தொடர்பா நிறையப் பேசுவோம். அப்போ, அரசுப் பள்ளியில் மாணவிகள் கழிப்பிட வசதியில்லாம கஷ்டப்படற வேதனையைப் பகிர்ந்துகிட்டோம். பள்ளிகளுக்கு விசிட் செஞ்சு பல கழிப்பிடங்கள் பராமரிக்கப்படாமலும், தண்ணீர் வசதியின்றி இருக்கிறதையும் பார்த்தோம். இதுக்கெல்லாம் என்ன தீர்வுன்னு தேடினப்போ, திருச்சி மாவட்டம் முசிறியில் கழிவை மறுசுழற்சி மூலமாகப் பயன்படுத்துறதைத் தெரிஞ்சுக்கிட்டோம். எக்கோ சாண்ட் டாய்லெட்டை பொது கழிவறையாகப் பயன்படுத்திட்டிருந்தாங்க. நெசவாளர்கள் நிறைஞ்ச ஊர் அது. எந்த வீட்டிலும் டாய்லெட் வசதியில்லை. அரசு கட்டிக்கொடுத்த டாய்லெட்டும் பயன்படுத்தும் நிலையில் இல்லாததால், ஒரு தனியார் நிறுவன உதவியில் எக்கோ சாண்ட் டாய்லெட்டா மாற்றியிருக்காங்க. குறைந்த அளவு தண்ணீர் போதும். மலத்துக்கு என்று ஒரு பேசின் இருக்கும். அதில், சாம்பல், மரத்தூள் அல்லது உமி போட்டுடுவாங்க. அது ஆண்டுக்கணக்கில் மக்கி உரமா மாறிடும். யூரின் இன்னொரு பேசின்ல கலெக்ட் ஆகி உரமா மாற்றப்படும். கழுவும் தண்ணீர் இன்னொரு வழியாப் போய் சுத்தம் செய்யப்பட்டு நிலத்தடி நீரில் சேருது. ஆக இந்த முறையில் எந்தக் கழிவுமே வீணாகப் போறதில்லை. 

வீடுகளிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பைன்னு பிரிக்கிறாங்க. மக்கும் குப்பை உரமா மாற்றப்படுது. மக்காத குப்பையைச் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் மறு பயன்பாட்டுக்குப் போகுது. குப்பையும் பணமாக்கப்பட்டு வேலைவாய்ப்பையும் கொடுக்குது. அந்தச் சின்ன ஊரில் சாத்தியப்படும் விஷயத்தை ஏன் மற்ற ஊர்களிலும் செய்ய முடியாதா என்கிற கேள்வி எழுந்துச்சு. குப்பை, சாக்கடை எனக் கழிவுகளை நோக்கி என்னைப் பயணிக்க வெச்சது. இன்னிக்கு இருக்கிற நுகர்வுக் கலாசாரத்தால், தேவைக்கு அதிகமா பொருள்களை வாங்கிக் குவிக்கிறாங்க. இது இயற்கையை வேகமா அழிச்சுட்டு வருது. கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் கொட்டப்படும் குப்பைகள், தாய்ப்பாலையும் நஞ்சாக்குது என்பதைப் புரிஞ்சுக்கிட்டேன். இந்த அபாயத்தை எல்லாருக்கும் புரியவைக்கணும். குப்பை விஷயத்தில் மாற்று திட்டங்களை அரசு கொண்டுவரணும். அதுக்கு மக்களும் துணையா நிற்கணும். இந்த நோக்கத்துடன் எடுக்கப்பட்ட படம்தான், மீள். 

இதுக்காக கடந்த ஒரு வருஷமா பல ஊர்களுக்கும் பயணிச்சேன். என் சேமிப்பு, நண்பர்களின் உதவி, எளிய வாழ்க்கை முறை என என்னை நிறைய மாத்திக்கிட்டேன். திட்டமிட்டுச் செயல்பட்டால், வீதியில் விழும் ஒரு குப்பையைக்கூட வீணாக்க வேண்டிய அவசியமில்லை. அடுத்த தலைமுறைக்கு நாம் விஷத்தையா சேமிச்சு வைக்கப்போறோம்? குழந்தைகளிடமும் இந்த விஷயத்தைச் சேர்க்கணும். குழந்தைகள் மனதில் விதைச்சாதான் அது விருட்சமா வளரும். ஒரு கற்பனைக் கதையா இல்லாமல் நிஜத்தை முகத்தில் அறையும் வகையில் சொல்லணும் என்றுதான் ஆவணப்படமா இயக்கினேன். குப்பை என்கிற பெரிய பிரச்னையிலிருந்து மண்ணையும் மக்களையும் மீட்கணும். இப்போ போஸ்ட் புரடெக்க்ஷன் வேலைகள் போய்ட்டிருக்கு. ஜூலை இறுதியில் ரிலீஸ். இதை ஒவ்வொரு பள்ளியிலும் திரையிட்டுக் காட்டணும். இதன் மூலமா கழிவு மேலாண்மையில் அடுத்த தலைமுறை ஆக்கபூர்வமான விஷயங்களை முன்னெடுப்பாங்க என்று நம்பறேன். அரசும் அதற்கான திட்டங்களை வகுத்தால் நம்ம மண்ணை மீட்டுடலாம்’’ என்று அக்கறையான குரலில் பேசுகிறார் விஷ்ணுப்பிரியா. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close