வெளியிடப்பட்ட நேரம்: 21:56 (13/07/2017)

கடைசி தொடர்பு:11:43 (14/07/2017)

'பிக்பாஸ்' காயத்ரி ரகுராம் மீது பாய்ந்த புகார்கள்... நடவடிக்கைக்கு உறுதியளித்த கமிஷனர்!

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் பேசிய ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தை, பல்வேறு தரப்பிலும் பலத்த சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. 10.07.2017 அன்று ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 'புரொமோ' வீடியோவில் நடிகை ஓவியாவைத் திட்டுவதற்காக ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையை நடிகையும் பி.ஜே.பி. பிரமுகருமான நடிகை காயத்ரி ரகுராம் பயன்படுத்தியிருந்தார். இது "சேரி மக்களையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது" எனப் பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இந்நிலையில், இதுதொடர்பாகப் பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு இளைஞர் மாணவர் கூட்டமைப்பு (TYSF) மற்றும் மாணவர் இந்தியா சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

bigboss issue

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குகனிடம் பேசியபோது, "விஜய் டி.வி-யில், காயத்ரி ரகுராம் பேசிய அந்த புரொமோவை பலமுறை ஒளிபரப்பினார்கள். ஏற்கெனவே, ஒதுக்குப்புறமான பகுதிகளில் வாழ்ந்துவரும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மீது மக்கள் மத்தியில் தவறான பார்வை பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல கோடி மக்கள் பார்க்கும் ஒரு பொதுநிகழ்ச்சியில் சினிமாத்துறையில் உள்ள ஒருவர், பொறுப்பற்ற முறையில் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் அதைப் பார்க்கும் பெருவாரியான பொதுமக்கள் மனதிலும் இது பதிந்துவிடும். இவ்வாறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது உளவியல்ரீதியாக மக்களைப் பாதிக்கும் வகையில் இருக்கிறது.

guhan

இதுதொடர்பாக விஜய் தொலைக்காட்சிக்கு தொடர்புகொண்டு கேட்டபோது, யாரும் முறையான பதில் அளிக்கவில்லை. இப்படி ஆணவப்போக்கில் வார்த்தைகளைத் திட்டமிட்டு பயன்படுத்திய காயத்ரி ரகுராம் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தோம். எங்களை நேரில் அழைத்துப் பேசிய காவல்துறை ஆணையர்  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியும் இந்தச் செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றார்.

gayathri, காயத்ரி ரகுராம்

"பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடைசெய்து, அதைத் தொகுத்து வழங்கிவரும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் அதில் பங்கேற்ற நடிகர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்" என இந்து மக்கள் கட்சி சார்பில் ஏற்கெனவே பெருநகர சென்னை காவல் ஆணையரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர்கள் அணியும் உடைகள் மிகவும் ஆபாசமாக உள்ளதாகவும், அது நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களின் மனநிலையைச் சீரழித்துவிடும் என்றும் கோரிக்கை வைத்தனர். 

குகன்

இந்து மக்கள் கட்சியின் இந்தப் புகார் பற்றிப் பேசிய TYSF அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன், "நாங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யுங்கள் எனக் கூறவில்லை. கமல்ஹாசனை கைது செய்யுங்கள் எனவும் மனு அளிக்கவில்லை. ஆனால், காயத்ரி ரகுராம் பேசிய வார்த்தைகள் சாதாரணமானவை அல்ல. அவர் மீது கடுமையான நடவடிக்கை தேவை என்றுதான் கேட்டுக்கொண்டுள்ளோம். இந்து மக்கள் கட்சியினர் கொடுத்த புகாரிலிருந்து நாங்கள் மாறுபடுகிறோம். பி.ஜே.பி. பிரமுகரான காயத்ரி ரகுராம் நடந்துகொண்ட விதம்பற்றி அவர்கள் குறிப்பிடவேயில்லை. அவர்கள் கமல்ஹாசனை கார்னர் செய்து, காயத்ரி ரகுராமைக் காப்பாற்றுகிறார்கள்" என்றார் ஆவேசமாக.

வரும் நாள்களில் பிக்பாஸ் எல்லைகள் 'இன்னும்' விரிவுபடுத்தப்படலாம். சுவர் தாண்டும் பரணி, "ஆரவ்வ பார்த்தா எனக்கு என்னவோ பண்ணுது" ஜூலி, சினேகனின் ‘தமிழார்வம்’, ‘படையப்பா’ நமீதா என நம் வீட்டு வரவேற்பறைகளும் முகநூல் டைம்லைனும் பிக்பாஸ் வீடியோக்களால் நிரம்பி வழியத்தான் போகின்றன. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக இதுபோன்று குவிந்துவரும் புகார்களுக்கு காவல்துறையின் பதில் என்ன என்பதுதான் நம் கேள்வி?


டிரெண்டிங் @ விகடன்